“என்ன ஆறுமுகம்? தேவகி உன்னைத் திட்டினாளா? எதுவாயினும் சொல். ஏன் தயக்கம்?” என்றான். சிவா.
“இல்லை ஐயா!. நீங்கள் வேலைக்கு போன பின், வெளியே சென்ற அம்மா வீட்டுக்கு திரும்பவே இல்லை” என்றான்.
நாக்குழற அவன் சொன்ன வார்த்தைகளில் ஸ்தம்பித்து போன சிவா, “ஏன் எனக்கு போன் பண்ணவில்லை. ஏன் வந்ததுமே சொல்லவில்லை? எங்கே போயிருப்பாள் தேவகி. அவளுக்கு தனியாக எங்குமே செல்லத் தெரியாதே..” என்றான் சரமாரியாக கேள்விகளைத் தொடுத்தான்.
“ஐயா.. கொஞ்ச நாளாகவே அம்மாவின் நடவடிக்கைகள் சரியில்லை. நோயில் இருக்கும் உங்களிடம் சொல்ல வேண்டாமே என்று தான் சொல்லவில்லை” என்றான் ஆறுமுகம்.
பிரமைப் பிடித்தாற் போல் நின்றிருந்த சிவா, பணிப்பெண், சமையல் காரி, ஆறுமுகம் ஆகியோர் வாயிலாக நடந்தவற்றை அறிந்ததும், மிகவும் மனவேதனைக்கு உள்ளானான்.
தேவகியின் தவறான போக்கை தெரிந்தும் தனக்கு சொல்லாத பணியாட்களிடம் ‘ஏன் சொல்லவில்லை’ என்று சண்டையிடவும் முடியாமல், தேவகி இப்படியான காரியம் ஒன்று செய்திருப்பாள் என்பதை ஜீரணிக்கவும் முடியாமல் தவித்தான் சிவா.
அம்மாவின் அரவணைப்புக்காக அடிக்கடி சிணுங்கும் குழந்தையை வேதனையோடு பார்த்தான். பெற்றவர் இல்லாமல் ஆசிரமத்தில் வளர்ந்தவளுக்கு தான் அநாதை என்ற எண்ணமும், அதனால் அவள் பட்ட துன்பங்களும் எப்படி மறந்து போயிற்று என்று குமுறினான். தான் பட்ட அதே வேதனையை தன் வாரிசும் பட வேண்டும் என்று விதியை எழுத, அவள் மனது எப்படி துணிந்தது என்றெல்லாம் வெம்பினான்.
எங்கு சென்றாள், என்ன ஆனாள் என்று தெரியாத சூழ்நிலையில், தன் கையறு நிலையை எண்ணி மிகவும் வருந்தினான் சிவா.
வீடு முழுக்கத் தேடியும், தேவகி எங்கு சென்றாள் என்ற விபரத்துக்கான எந்த அடையாளமும் இருக்கவில்லை. உறவினர்கள், நண்பர்கள் என்று எவரும் இல்லாத அவர்களது தனியான வாழ்க்கையில், அவனின் சோகத்துக்கு துணையாக வீட்டின் பணியாளர்கள் மட்டுமே இருந்தனர்.
இருட்டின் அடர்த்தியில் மனம் பயத்தில் படபடக்க, ஒற்றையாக நின்றிருந்த வேப்ப மரத்தின் அடியில், கண்ணீருடன் உட்கார்ந்திருந்தாள் தேவகி. ஒவ்வொரு முறையும் வெற்றியின் குரலின் கம்பீரத்திலும், அவனின் பேச்சின் வசீகரத்திலும் தன்னை மறந்திருந்த அவள், அவனின் புகைப் படத்தை கேட்டால், யாராவது ஒரு நடிகனின் புகைப்படத்தை அனுப்பி, “அவன் போல் இருப்பேன், அவன் போல் இருப்பேன்” என்று ,மழுப்புவதும், “என்னை நீ நேரில் தான் என்னைப் பார்க்க வேண்டும், அது தான் என் விருப்பம் கண்ணே” என்று சமாளிப்பதும் நினைவுக்கு வந்தது. ‘ஒருவேளை ஆட்டோ ஓட்டி வந்தவன் தான் வெற்றியோ?’ என்ற எண்ணம் தலை தூக்க, தான் ஏமாற்றப் பட்டு விட்டோம் என்பதை மட்டும் அவள் மனம் ஏற்க மறுத்தது.
(தொடரும்)
0 Comments