Ticker

6/recent/ticker-posts

"மோகத்தின் விலை "- 17


அப்போதுதான் அவளுக்கு, அவன் தன் தொலை பேசி இலக்கமோ, அல்லது புகைப்படமோ தராததின் உண்மை உரைத்தது.  எத்தனையோ அந்தரங்களை பகிர்ந்துக் கொண்ட போதிலும் ஒரு நாளேனும் அவன் வீடியோவில் வராததும் ஏன் என்றும் புரிந்தது. முகமறியா ஒருவனுடன் என்னவெல்லாம்  பேசியிருக்கின்றேன் என்ற குற்ற உணர்வு முதல் முறையாக இலேசாய் அவளை குடையத் தொடங்கியது.

திரும்பவும் கடைக்குப் பின்னால் சென்று முகத்தில் தண்ணீரை அடித்து விட்டு நன்றாக அழுது தொலைத்தாள். முகத்தைத்தான் கழுவ முடிந்ததே தவிர, தன் வாழ்வில் படிந்த ஓடிப்போனவள் என்ற கறையை கழுவ முடியாதே என நொந்தாள்.  அன்பே உருவான சிவாவின் முகத்தில் எப்படி விழிப்பது என்று வருந்தினாள்.  தன் அணைப்புக்காக ஏங்கி அழும் கண்ணனை நினைக்க, அவனுக்கு பாலூட்டிய மார்பு வலித்தது.  எப்படியும் சிவாவின் முகத்தை பார்க்க இயலாது என்ற முடிவுக்கு வந்தவள், நடைப் பிணமாக நடந்து, எதிரே வந்த பஸ்ஸில் ஏறிக்  கொண்டாள். அவளின் இருட்டான எதிர்க்காலத்தை நோக்கி பஸ் விரைந்தது.

ஆறுமுகத்தின் வாக்கு மூலம், தன் மனைவியின் தவறான நடத்தையையும், அடிக்கடி பாங்க் செல்லும் வழக்கத்தையும் அறிந்த சிவா யாருக்கு பணம் அனுப்பினாள் என்று அறியும் நோக்கில் பாங்க்கை அணுகினான்.  பாங்க் மானேஜர் கொஞ்சம் நெருக்கமானவர் என்பதால் அவனின் வேலை சுலபமாக முடிந்தது.  ஊர், விலாசம் இல்லாமல் குறிப்பிட்ட ஒருவர் பெயருக்கு பணம் அனுப்பப் பட்டிருந்தது.  சீக்ரட் இலக்கத்தை சரியாக சொல்லி பெறுனர் பெற்றுக் கொள்ளலாம்.  அவ்வளவுதான்.  அதற்கு மேல் எதையும் சிவா கேட்க விரும்பாமல் சிவா வீடு திரும்பினான்.

ஆக, ஆறுமுகம் சொன்னது பொய்யில்லை. இத்தனை இலட்சங்களை அனுப்பியவள், அதற்கான அத்தாட்சியான அத்தனை இரசீதுகளையும் அழித்து இருந்தாள்.  ஒரு தடயம் கூட விட்டுச் செல்ல வில்லை.  தன் கழுத்தில் இருந்த தாலி ஒன்றைத் தவிர அத்தனை நகைகளையும் எடுத்திருந்தாள்.   ஆசிரம வாழ்க்கையில் இருந்து அவளின் கனவுலகத்தில் பிரவேசிக்க,  மனைவி என்ற ஸ்தானத்தை அளித்து, தாய்  என்ற அந்தஸ்த்தை பெற வழி வகுத்த தாலியுமா அவளுக்கு துச்சமாய் போனது? 

எல்லாவற்றுக்கும் மேலாய், “அம்மா” என்று மழலையில் அழைக்கும் கண்ணனை பிரிய அவளுக்கு எப்படி மனம் துணிந்து, என்றெல்லாம் நினைத்தபோது அதற்கு மேலும் தேவகியை பற்றி நினைக்க வெறுப்பாக இருந்தது சிவாவுக்கு. தேவகியின் அலமாரியில் அவள் எழுதி வைத்திருந்த சிறு மடல் அவன் கண்களுக்கு தட்டுப் படாமலே போனது.        

நோயின் தீவிரமும், மன உளைச்சலும் அதிகமாக மிகவும் தளர்ந்து போனான் சிவா.  ஆறுமுகம் தான் ஒரு நாள், கப்போர்ட்டில் அவள் எழுதி வைத்திருந்த துண்டு சீட்டை கொண்டு வந்து நீட்டினான். 

“பெண் என்றால் மரக்கட்டையல்ல, உணர்ச்சிகள் மிக்கவள்.  அவளின் தேவைகள் என்ன என்று அறிந்து செயல் பட தெரியாத முட்டாளுடன் வாழ்வதை விட, என் தேவைகளை அறிந்த ஒருவனைத் தேடி புறப்படுகின்றேன்.  என்னைத் தேடவேண்டாம்”  என்ற தேவகியின் கையெழுத்து சாட்டையால் விலாசினாற் போல் அவனை அறைந்தது.

(தொடரும்)



-------------------------------------------
வாசகர்கள் தங்கள் ஆக்கங்களை 
வேட்டை Email மூலம் அனுப்புங்கள்
      Email-vettai007@yahoo.com        

Post a Comment

0 Comments