குறள் 629
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.
மாப்ள.. நமக்கு இன்பம் வருத நேரத்துல, சும்மா வானத்துக்கும் பூமிக்குமா, ஆட்டம் போடாம இருக்கணும். அப்பம்னாத்தான் நமக்கு தும்பம் வருத நேரத்துல நாம வாட்டம் அடையாம இருப்போம்.
குறள் 636
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை.
மாப்ள... ஏற்கனவே ஒனக்கு மண்டை யில மூளை ஜாஸ்தி. அதோட நெறைய வேற படிச்சிருக்கியா.. அதுனால மூளை இன்னஞ் ஜாஸ்தி. இப்பிடிப்பட்ட ஓம் முன்னால நிய்க்கக் கூடிய நுட்பமான சூழ்ச்சி எதும் இருக்கா மாப்ள?.
குறள் 631
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.
ஏல மாப்ளை.. இந்த கம்ப்யூட்டர் காலத்துல எதைச் செய்யணும்னாலும், மொதல்ல வெரசலா செயல் படக்கூடிய , கம்ப்யூட்டர்கள் இருக்கணும். தப்பு இல்லாம இருக்க நல்ல மென் பொருள் வேணும். அதை மக்கள் நலனுக்காக, தக்க நேரத்துல சரியா கையாளணும். இது தான் மாப்ள ஒரு நல்ல நிர்வாகத்துக்கு அழகு.
குறள் 635
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை.
நல்ல ஆலோசனை சொல்லி நம்மை வழிநடத்த நம்ம பக்கத்துல யார் இருக்கணும் தெரியுமா மாப்ள.?
அற வழியை நன்கு தெரிந்தவர்.. நல்ல சொல்லாற்றல் மிக்கவர்... சிறந்த செயலாற்றல் உள்ளவர்.. இந்த மாதிரி ஆட்களால் தான் சரியான ஆலோசனைகளைத் தரமுடியும். இவர்களைத்தான், எப்போதும் துணைக்கு வைத்துக் கொள்ள வேண்டும் மாப்ள.
குறள் 642
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.
ஏல மாப்ள... யார்ட்டியும் பேசும் போது கவனமா பேசணும். நீ வாட்ல கண்டமானி க்கு பேசிறப்படாது. நம்ம வீட்டு பெரியவொள்ளாம் அடிக்கடி ஒண்ணு சொல்லுவாவொ. நீ அதை கவனத்துல வச்சுக்கணும்.
பல்லக்கு ஏறுததும் பல்லால. பல்லு ஒடைபடுததும் பல்லால தான் னு சொல்லுவாவொ.
அதுனால பேசும்போது ரொம்ப கவனமா பேசணும். தப்பு தண்டா வந்துரப்டாது மாப்ள.
குறள் 643
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.
மாப்ள... நீ பேசுதது எப்படி இருக்கணும் தெரியுமா?
ஒன்னோட பேச்சக் கேக்கவங்க இன்னம் நெறைய கேக்கணும்னு ஆசப்படணும்.
பேச்சைக் கேக்காதவங்க, "ஐயோ அருமையான பேச்ச கேக்க விட்டுட்டோம.. அடுத்த தடவை எப்படியும் கேட்டுறணும்" னு ஆசைப்படணும் .
அப்படி சிறப்பா இருக்கணும் மாப்ள ஒன்னோட பேச்சு.
(தொடரும்)
0 Comments