Ticker

6/recent/ticker-posts

8.7 மில்லியன் ஆப்கானியர்கள் பட்டியினால் வாடி வருகின்றனர்-ஐ.நா. பொதுச்செயலாளர்

தாலிபான்கள் ஆட்சிச் செய்து வரும் ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலவரம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

20 ஆண்டுகள் கழித்து, அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புக்கள் விலகலுக்கு பிறகு, தலிபான் அதிகாரத்தைக் கைப்பற்றியபோது ஆப்கானிஸ்தானின் உதவி சார்ந்த பொருளாதாரம் ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருந்தது. சர்வதேச சமூகம் ஆப்கானிஸ்தானின் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை முடக்கியது. பொருளாதார ஆதரவை நிறுத்தியது, தலிபான்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை.  

பொருளாதாரத்தை காப்பாற்ற பணம் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் விதிகள் மற்றும் நிபந்தனைகள் இந்த அவசர சூழ்நிலையில் நிறுத்தப்பட வேண்டும். உலகின் பெரும்பாலான நிதி அமைப்பு டாலரில் செயல்படுவதால் அமெரிக்காவிற்கு மிக முக்கிய பங்கு உள்ளது. முக்கியமாக அமெரிக்காவில் உள்ள ஆப்கானிய வெளிநாட்டு இருப்புகளில் 7 பில்லியன் டாலர்களை அமெரிக்கா முடக்கியுள்ளது. ஆப்கானிய பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை விரைவாக மீட்பது மிகவும் முக்கியமானது. 

பசியால் உயிரிழக்கும் ஆப்கானிஸ்தானியர்களை காப்பாற்ற  ஐந்து பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி அந்த நாட்டிற்கு வழங்கப்பட வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் ஆப்கானியர்கள் மரணத்தின் விளிம்பில் உள்ளனர்.  8.7 மில்லியன் ஆப்கானியர்கள் பட்டியினால் வாடி வருகின்றனர். மருத்துவர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மின் பொறியாளர்கள் மற்றும் பிற அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க சர்வதேச நிதி அனுமதிக்கப்பட வேண்டும். 

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஆதரவளிக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அதேவேளையில், அடிப்படை மனித உரிமைகளை அங்கீகரித்து பாதுகாக்கவும், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை பாதுகாக்கவும், தலிபான் தலைவர்களுக்கு அவசர வேண்டுகோளை விடுக்கிறேன். இவ்வாறு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments