Ticker

6/recent/ticker-posts

Ad Code



வரலாற்று நூலாக்கப்பணியில் தடம்பதித்துவரும் “உடுநுவரை அபிமானி” மௌலவி – கதீப் முஹம்மது ஹனிபா அவர்களின் புதிய வெளியீடுகள்!


வரலாறு இல்லாத எந்தவொரு சமூகமும்  உலகில் தலை நிமிர்ந்து வாழவோ நிலைத்து நிற்கவோ முடியாது. இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை ஆராய்வதிலும் அதன் பல்வேறு கூறுகளைக் கவனித்து விளக்கமளிப்பதிலும் முஸ்லிம்களிடையே அண்மைக் காலத்தில் வலுவடைந்து வருகின்ற உத்வேகம் போற்றப்பட வேண்டியதாகும்.

முகவரியில்லாத சமூகம் என்ற அவப்பெயரிலிருந்து முஸ்லிம் சமுதாயத்தைப் பாதுகாப்பதற்கு முஸ்லிம்களின் இருப்பு பற்றி ஆங்காங்கே சிதறிக்கிடக்கும்  விவரங்கள் திரட்டப்பட்டு பாதுகாக்கப்படவேண்டுமென்ற கோரிக்கை  1960களில் முன் வைக்கப்பட்டலும்,  சமீப காலமாக  பிரதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை பாராட்டப்பட வேண்டியதே!

காலத்துக்குக் காலம் முஸ்லிம்களின் பூர்வீகம் பற்றி  எழுப்பப்பட்ட கேள்விகளின் மனத்தாக்கங்களும், முஸ்லிம்களின் வரலாற்றுத் தொன்மையைக் கொச்சைப்படுத்த முற்பட்ட சம்பவங்களுமே  வரலாற்று நூல்களை வெளிக்கொணரும் ஆர்வத்தை இலங்கைவாழ் முஸ்லிம்களுக்கு அளித்துள்ளது எனலாம். உண்மையான வரலாற்றுச் சான்றுகள் பகுத்தறிவுக்குப் பொருத்தமான முறையில் பதிவிடப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்!
பண்பாட்டம்சங்கள், வழக்காறுகள், வரலாற்றுத் தொடர்புகள் குறித்து அணுகப்படவேண்டிய  விடயங்கள் முஸ்லிம்களின் வரலாற்றை அறிவதற்கும், கட்டி எழுப்புவதற்கும் உதவக்கூடியான.

அந்த வகையில்  மத்திய பிரதேச முஸ்லிம்களது வருகை பற்றியும், அவர்களது வழக்காறுகள் பற்றியும் தேடியலைந்து உண்மைத் தகவல்களைத் திரட்டி எடுத்து, அவற்றை நூல்வடிவில் கொணரச்செய்வதில்  மௌலவி – கதீப்  முஹம்மது ஹனிபா அவர்களின் பங்களிப்பு மகத்தானது.

 அவர் ஆசிரியத்தொழிலிருந்து ஓய்வு பெற்ற போதிலும் சமூகத்தொண்டாற்றுவதில் அவருக்கிருந்த ஆர்வத்தினால்,  போர்த்துக்கேயர் காலத்துக்கு முன்பிருந்தே சுதந்திரமான இஸ்லாமியக் குடியிருப்புக்கள் எவ்வாறு  மத்திய மலைநாட்டில் இருந்து வந்துள்ளன என்பதனை நிரூபிப்பதற்கான அகச்செய்திகள் பலவற்றை வெளிக் கொண்டுவரும் நோக்கில், அவற்றை சமூகத்தின் உள்மட்டத்திலிருந்து திரட்டி எடுத்து நூல்களாக வெளியிட்டு வருவது மகிழ்ச்சியைத் தருகின்றது!
“உடுநுவர அபிமானி” என்ற அரச விருது பெற்றுள்ள மௌலவி முஹம்மது ஹனிபா அவர்கள், தான் ஓய்வு பெறும்வரை ஒரு நல்லசிரியராகப் பணிபுரிந்துள்ளமையும், அண்மைக் காலம்வரை பிரதேசத்தின் குவாஸி நீதவானாக சேவை புரிந்து வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஐம்பது வருடகாலமாக பல்வேறு சமூக சேவைகளைப் புரிந்து வருகின்ற  மௌலவி Z. A. M.  ஹனிபா அவர்களுக்கான பாராட்டுவிழா நிகழ்வொன்று கடந்த 20.09.2020  அன்று  எளமல்தனிய Pearls White Palace   மண்டபத்தில் நடைபெற்றது. உடுநுவரை மஸ்ஜித்கள் சம்மேளனமும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உடுநுவரைக் கிளையும் இணைந்து ஏற்பாடு செய்த  இந்நிகழ்வின்போது அவரது "வாழ்வும் பணியும்" பற்றிய ஆவணப் படமொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வின்போது பிரதேசத்தின் விகாராதிபதிகள், உலமாக்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், புத்திஜீவிகள், சமூக சேவையாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்து சிறப்பித்தமை பற்றி நாம் ஏற்கெனவே “வேட்டை”யில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

2008 முதல் அவரால் “உடுநுவரை முஸ்லிம்கள் வாழ்வில் ஸுபித் தரீக்காக்கள்”, “மத்திய பிரதேச இஸ்லாமியக் குடியிருப்புகள்”, “மத்தியபிரதேச முஸ்லிம்களின் பூவீகம்”, "அறிஞர் மௌலவி ஓ. எல். எம். இப்ராஹீம் ஆலிம் ஸாஹிப் அவர்களது வாழ்வும் பணியும்”, “உடுநுவரை முஸ்லிம்களின் பூர்வீகமும் பெரிய பள்ளிவாசல் வரலாறும்” போன்ற நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தற்போது “இஸ்லாமிய வரலாற்றில் அஹ்லுல் பைத்துகள்”, “இஸ்லாமிய சட்டவியலில் மாற்றுக் கருத்துக்களின் மதிப்பு” மற்றும், சிங்கள மொழியிலான “ஸ்ரீலங்கேய முஸ்லிம் வங்ஸ கதாவ” போன்ற நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.

வரலாற்றுத் தொகுப்புப் பணியில் சுயேட்சையாக மிகவும் அர்ப்பணிப்புடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் மௌலவி கதீப் இஸட். ஏ. முஹம்மது ஹனிபா அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக உடுநுவரையின் சகல இனமக்களோடும் இரண்டறக்கலந்து சமயப்பணிகளுடன்  பொதுப்பணிகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டுவருகின்றார். 

அவரது “இலங்கை மத்திய பிரதேச முஸ்லிம்களது வருகை பற்றிய வரலாற்றுக் கட்டுரைத் தொடர்” கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக “வேட்டை”யில் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அவர்  பணி  மேலும் தொடர “வேட்டை” வாழ்த்துகின்றது!

Vettai Email-vettai007@yahoo.com  

Post a Comment

0 Comments