இருபத்தி ரெண்டே
இருபத்தி ரெண்டே
இங்கு வரப் போகிறாய் - எம்
இதயத்தில் எரியும்
தீயினைத் தணிக்க
என்ன தரப்போகிறாய்
இருபத்தி ஒன்று
உயிர்களைக் கொன்ற
ஈரமும் காயவில்லை
எமக்கினி அந்த
இருபத்தி ஒன்றின்
இன்னல்கள் தேவையில்லை
இருபத்தி ஒன்றில்
அழுதது போதும்
இனியது தேவையில்லை
தொழில்களை இழந்து
துரும்பென இழைத்தோம்
துயர் இன்னும் ஓயவில்லை
ஆல் நிழலாக
வருவாயா
ஆறுதல் தினமும்
தருவாயா
பால்நதியாக
வருவாயா
பசியினைத் தரணியில்
தீர்ப்பாயா
கோவிட் பிணி வந்து
கொன்றது போல் இனி
கொடுமைகள் வரவேண்டாம்
டொலர் பணம் இன்றி
பொருள்களுக் கேங்கும்
நிலைமையும் தரவேண்டாம்
உரத்துடன் சாந்தை
ஒளிப்பாயா
உண்பதைக் கூட
தடுப்பாயா
வெடித்திடா வாயு
கொடுப்பாயா
அடுப்படிப் பயத்தை
தடுப்பாயா
வரவுகள் நிறைய
செலவுகள் குறைய
வரம் கொண்டு வருவாயா
உறவுகள் வளர
உரிமைகள் பெருக
உரம் கொண்டு தருவாயா
நிலைமைகள் நலவாய்த்
தருவாயா
நீடிக்க அதை நீ
விடுவாயா
தலைமைகள் தரமாய்த்
தருவாயா
தலைமுறை வாழ்த்தைப்
பெறுவாயா
ருசிகரமான
பரிசுகள் தருவாய்
என நாம் காத்திருந்தோம்
வளம் நிறைவோடு
வருகை நீ தரவே
வாசலைக் கூட்டி வைத்தோம்
வசந்தத்தைக் கொண்டு
வருவாயா
வாழ்ந்திட வழி வகை
தருவாயா
உலகினர் ஏக்கத்தை
அறிவாயா
உவகையை அள்ளிச்
சொரிவாயா
விதவிதமான
வெகுமதியோடு
வீட்டுக்குள் நுழைவாயா
விடுதலையோடு
விடியல்களாக
நாட்டுக்குள் விளைவாயா
வரங்களை மழையாய்ப்
பொழிவாயா
வறுமையை வாதையைக்
களைவாயா
இனிமைகள் தன்னைப்
பதிவாயா
இதயங்கள் தன்னில்
வதிவாயா
Tags:
கவிதை