Ticker

6/recent/ticker-posts

திருடப்பட்ட நாட்கள்...!

என் சகோதரி புது வீட்டுக்கு குடி வந்த பின்பு இன்று தான் முதன் முதலில் நான் அவர் வீட்டுக்கு வந்திருக்கிறேன்.அதனால் அவர் என்னை அழைத்துச் சென்று வீடு முழுவதும் சுற்றிக் காட்டியபடியே "வீடு நன்றாக இருக்கிறதா ? " என்று கேட்கிறார். 

எனக்கு சட்டென்று அவரின் பழைய வீடு ஞாபகத்துக்கு வந்தது. அந்த வீடு இந்த புதிய வீட்டைப் போல் பிரமாண்டமாக இருக்கவில்லை.  ஆனால் அந்த வீட்டை எனக்கு மிகவும் பிடிக்கும்.  அந்தப் பழைய வீட்டைச் சுற்றி ஒரு சிறிய தோட்டம் இருந்தது.  பாடசாலை விடுமுறை நாட்களில் நான் என் சகோதரி வீட்டில் தங்க வருவேன்.  அப்போதெல்லாம் காலையில் கண்விழித்ததும் மாம்பழம் பொறுக்குவதற்காக தோட்டத்துக்குப் போய் விடுவேன். இந்த வீட்டில் அழகிய பூஞ்செடிகள் இருந்தன. ஆனால் பழ மரங்கள் ஒன்றுகூட இல்லை என்பது குறையாகத் தெரிந்தது.

கடைசியாக நான் பத்தாம் வகுப்பில் படித்து,   பரீட்சை எழுதி விட்டு பெறுபேற்றுக்காக காத்திருந்த நிலையில் என் சகோதரி வீட்டில் ஆறு மாதங்கள் தங்கியிருந்தேன். என் சகோதரியின் குழந்தை தன்வீர் தன் மழலை மொழியில் என்னை மயக்கி வைத்து இருந்தான். அவனுக்கு கதை சொல்லியபடியே உணவு ஊட்டுவது,  தூங்க வைப்பது எல்லாமே நான்தான். அப்போது அவனுக்கு நான்கு வயது.

அவனை 'மொன்டசூரி' க்கு அனுப்புவது என்று எனது சகோதரி தீர்மானித்த போது அவரது வீட்டுக்குப் பின்னால் இருந்த கிறிஸ்தவ தேவாலயத்தில் நடத்தப்படும் 'மொன்டசூரி' க்கு அனுப்புவதையே விரும்பினார். வீட்டுத் தோட்டத்தை  எட்டிக்   கடந்தால் தேவாலயம் என்பது அவருக்கு மிகவும் சௌகரியமாக இருந்தது.  என் மருமகன் தன்வீரை தினமும் 'மொன்டசூரி' க்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை நானே ஏற்றுக் கொண்டேன்.  முதல் நாள் அவனைக்    அழைத்துச் சென்று 'மொன்டசூரி' யில் விட்டு விட்டு வரும் போது அவன் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியதால் நானும் அங்கேயே இருந்து அவனை சமாதானப் படுத்தினேன். அப்போதுதான் எனக்கு ' ஃபாதர் 'பிரான்சிஸின்  அறிமுகம் கிடைத்தது.

ஒரு தந்தையின் பரிவுடன் என்னுடன் உறவாடினார் . ஃபாதரின் நகைச்சுவை உணர்வு எனக்கு மிகவும் பிடித்திருந்தது . தன்வீர் 'மொன்டசூரி' முடிந்து வரும்வரை நான் அந்த தேவாலயத்தின் 'வராண்டா'வில் உட்கார்ந்து ஏதாவது ஒரு புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பேன். இதை அவதானித்த ஃபாதர் வாசிப்பில் எனக்கு இருந்த மோகத்தை தெரிந்து கொண்டு நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தினார்.  பிறகு ஒவ்வொரு சந்திப்பிலும் புத்தகங்கள் பற்றி பேசினோம்.

நாளடைவில்  எங்கள் உறவில் ஓர் ஆத்மார்த்தமான நெருக்கம் உண்டானது. ஃபாதரின் அறிவுக் கூர்மை, அவரின் அனுபவ முதிர்ச்சி,  அவரின் நகைச்சுவை கலந்த பேச்சு,  அவரின் கண்ணியமான நடத்தை காரணமாக எனக்கு அவர் மீதிருந்த மரியாதை அதிகரித்துக் கொண்டே வந்தது.  புத்தகம் பற்றி பேசத் தொடங்கி , பிறகு  அன்றாட வாழ்க்கை பற்றியும் அலசத் தொடங்கினோம்.  'ஃபாதர் 'ரின் உதவியாளர் ஓர் ஆண்.  அவனது சமையலை சாப்பிட்டு நாக்கு மரத்து விட்டது என்று பேச்சுவாக்கில் ஒருநாள் ஃபாதர் சொன்னார்.
கேட்பதற்கு கவலையாக இருந்தது.

ஃபாதரின் சாப்பாட்டு விடயம் பற்றி வீட்டுக்கு வந்ததும்
எனது சகோதரியிடம் கூறிவிட்டேன். அன்று தொடக்கம் எனது சகோதரி பாதருக்கு விதம் விதமான உணவு வகைகள் செய்து நான் தன்வீரை 'மொன்டசூரி' க்கு அழைத்துச் செல்லும் போது பொதி செய்து கொடுத்தனுப்புவார் . முதலில் ஃபாதர் தயக்கம் காட்டினார். பின்னர் என் வற்புறுத்தல் காரணமாக ஏற்றுக் கொண்டார்.  என் சகோதரியின் சமையல் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இதனால் எங்கள் உறவு நெருக்கமாகி சிலவேளை என் சகோதரி வீட்டுக்கும்  அவர் வந்து போகத் தொடங்கினார். அவர் வீட்டுக்கு வரும்போது மறக்காமல் தன்வீருக்கு இனிப்பு வாங்கி வருவார்.  ஒருநா‌ள் அவர் என்  சகோதரியிடம் பேசிக் கொண்டிருந்தபோது "சில வேளை இவள் தலையில் ஓங்கிக் குட்ட வேண்டும் போலிருக்கும் . இவளிடம் துடுக்குத் தனம் அதிகம்..." எ‌ன்று என்னைக் காட்டி என் சகோதரியிடம் சொல்லிச் சிரித்தார்.  அதன் பிறகு அவருடன் விவாதம் செய்யும் அளவுக்கு எனக்கு தைரியம் வந்துவிட்டது.

நாளடைவில் அந்த  தேவாலயத்துக்கு வரும் மக்களிடமும் என்னை அறிமுகப்படுத்தினார்.  "கெட்டிக்காரி, ஆனால் வாயாடியும் கூட.  இவளிடம் கவனமாகப் பேசுங்கள்..." என்று கேலி செய்வார். அந்த தேவாலயத்திற்கு வரும் அத்தனை பெரியவர்களும் என்னை " மகள்..." என்று தான் அழைப்பார்கள்.  'ஃபாதர்' மட்டும் எனக்கு பெனாசீர் பூட்டோ என்று பட்டப்பெயர் வைத்து இருந்தார்.  அப்போது பாகிஸ்தானின் பிரதம மந்திரியாக இருந்த பெனாசீர்
பூட்டோ அன்று சர்வதேச ரீதியில் பேசப்படும்  ஒரு பெண்ணாக இருந்தார் . " ஒருநாள் நீயும் பேசப்படும் ஒரு பெண்ணாக மாறுவாய். அப்போது என்னை மறந்து விடாதே..." என்று அடிக்கடி கேலி செய்வார்.

வருட இறுதியில் மொன்டசூரி' யில் நடந்த கலைவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளில் நானும் கலந்து கொண்டு முடிந்த உதவிகளை செய்தேன்.  அப்போது ஒரு தாய் என்னை அணுகி  , வினோத உடைப் போட்டிக்கு தன் மகளுக்கு ஒரு முஸ்லிம் பெண்ணைப் போல ஆடை அணிவிக்கும் படி கேட்டுக்  கொண்டார் . நான் அவளுக்கு ஒரு சுடிதார் வாங்கி அணிவித்து,  முக்காடிட்டு , கையில் மருதாணி வைத்து போட்டிக்கு அனுப்பி வைத்தேன்.   அந்த சிறுமி போட்டியில் முதலிடம் பெற்றபோது அ‌ந்த தாயுடன் சேர்ந்து 'ஃபாதரும் என்னை மிகவும் பாராட்டினார். ஆனால்,  நான் வெளிநாட்டில் குடியேறிய பின்பு ஃபாதரை சந்திக்கவே இல்லை...

" நீ விடுமுறையில் நாட்டுக்கு வரும்போது என் வீட்டில் தான் தங்க வேண்டும். உனக்காக இந்த வீட்டில் தனியறை வைத்திருக்கிறேன்.  இந்த இடத்தில்   உன்னோட புத்தக அலமாரியை வைத்துக் கொள்ளலாம்..."  என் சகோதரியின் குரல் கேட்டதும் சிந்தனை கலைந்தது.  அவ்வளவு நேரமும்  ஃபாதரைப் பற்றிய சிந்தனையில் இருந்ததால் அவர் இப்போது எப்படி இருக்கிறார் என்று  அறிந்துகொள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்ற ஆவல் மேலிட்டது எனக்கு.

" தாத்தா...  ஃபாதர் பிரான்சிஸ் எப்படி இருக்காரு?  அவரப் போய் பார்த்துட்டு வருவோமா? "  என்றேன்.  என் சகோதரி தலையை தொங்கப் போட்டுக் கொண்டு சொல்கிறார்,   " "பாதர் செத்துப் போயிட்டாரு , நீ ஊருக்கு வந்த பிறகு சொல்லலாம் என்று பேசாமல் இருந்தேன்..." அதைக் கேட்டதும்  நான் ஆடிப் போனேன்.

அந்த தேவாலயத்தின் பின்னால் இருக்கும் மயானத்தில் அவர் அடக்கப்பட்டு இருப்பதாக அறிந்ததும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதனால் என் சகோதரி  மகன் தன்வீரை அழைத்துக்கொண்டு அங்கு போனேன் .  அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அங்கு நிறைய ம‌க்க‌ள் இருந்தனர்.  அந்த தேவாலய வளாகத்துக்குள் நாங்கள் நுழைந்ததும் எல்லோரும் எங்களை சந்தேகத்துடன் பார்த்தார்கள்;  விசாரித்தார்கள்...!  என்னை அறிமுகப் படுத்தி விட்டு, வந்த காரணத்தை விளக்கினேன்.  ஆனால்,  எவ்வளவு கெஞ்சியும்  ஃபாதர் பிரான்சிசின் கல்லறையைக் காண அனுமதி கிடைக்கவில்லை...

கொழும்பில் நடந்த 'ஈஸ்டர்' குண்டுத் தாக்குதலின் பின்னர் நாட்டில் நிலைமை இப்படித் தலைகீழாக மாறிவிட்டது என்று விளக்கிய படியே என்னை வெளியே அழைத்து வருகிறார் தன்வீர். இதோ இந்த வராண்டாவில் தான் நான் புத்தகங்கள் வாசித்தேன்; இங்கே தான் ஃபாதர் பிரான்சிஸ் உடன் புத்தகங்கள் பற்றி அலசினேன்; இந்த தேவாலயத்துக்கு வந்த மக்கள் தான் என்னை மகளே என்று  அன்போடு அரவணைத்தனர் . சில வருடங்களுக்குள் அவர்களுக்கு நான் அன்னியமாகி விட்டேனா...? வாய்விட்டு அழ வேண்டும் போல இருந்தது எனக்கு. அந்த குண்டுதாரியை மனதுக்குள் திட்டித் தீர்க்கிறேன் ...

இனியும் இங்கே நின்று கொண்டிருந்தால் எங்கள் மீது யாருக்கும் சந்தேகம் வந்துவிடும் என்ற பதட்டத்தில் தன்வீர் அவசரமாக என்னை வெளியில் அழைத்து வருகிறான்.

என் கண்களில் இருந்து உருண்டோடிய கண்ணீர் துளிகளினூடாக    அந்த தேவாலயத்தை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு பெருமூச்சோடு நடக்கிறேன்...!






 

Post a Comment

1 Comments

  1. சிறந்த உணர்வுமிக்க சிறுகதை

    ReplyDelete