இலங்கை - சிங்கப்பூராக மாறவேண்டுமென்று நீண்ட காலமாக நாம் கனவு கண்டு கொண்டிருக்கின்றோம்! அதற்குக் காரணம் மிகவும் குறுகிய காலத்தில் அந்நாடு சகல துறைகளிலும் தமது வளங்களை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் சென்று, பொருளாதாரத் துறையில் அமோக வளர்ச்சி கண்டிருப்பதாகும்!
சிங்கப்பூர் அபிவிருத்தியடையாதிருந்த ஒரு காலத்தில் - அதாவது 1965களில் - சிங்கப்பூரை இலங்கைத் தீவு மாதிரி ஆக்கிக் காட்டப்போவதாக - அக்காலத்து சிங்கப்பூர் ஆட்சியாளர் - அந்நாட்டு மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளிக் கொட்டினர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்!
அப்படியானால் ஒரு காலத்தில் ஆசிய நாடுகள் வியக்கத்தக்க விதத்தில் "இலங்கைத் தீவு" வளர்ச்சி கண்டிருந்திருந்தது என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும்!
இன்று சிங்கப்பூர் மிரமிப்பூட்டும்விதத்தில் வளர்ச்சியடைந்திருப்பதற்குக் காரணம் அந்நாட்டு ஆட்சியாளர்களின் உற்சாகமும் மக்களின் விடாமுயற்சியுமே!
சிங்கப்பூர் பல்லினங்கள் வாழும் நாடாக இருந்த போதிலும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையும் நாட்டின் மீது அவர்கள் கொண்டுள்ள பற்றுமே அந்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய முதற்காரணியாகும்.
சிங்கப்பூர் பூமத்திய ரேகைக்கு வடக்கே 137 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்திருப்பதால் வெப்பநிலைக் காலநிலையைக் கொண்டுள்ளது. வருடத்தில் டிஸம்பர் முதல் மார்ச் வரை இங்கு மழை வீழ்ச்சிக் காலமாகும். புவியியலாளர்களின் காலநிலை பாகுபாட்டின் அடிப்படையில் இது அயனமண்டல மழைக்காட்டுக் காலநிலைக்குட்பட்ட நாடாகும்.
சிங்கப்பூர் பெருந்தீவின் மத்தியில் 166 மீற்றர்கள் வரை உயரமான சிகரங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் உயர்ந்தது “புகிட் டிமாஸ்” ஆகும்.
13ம் நூற்றாண்டளவில் "ஸங் நிலா உதாமா" என்ற இளவரசன் இத்தீவிற்குள் கால்பதித்தபோது சிங்கத்தை ஒத்த ஒருவகை மிருகத்தைச் சந்திக்க நேர்ந்தமையால் அவ்விடத்தை "சிங்கபுர" என்று அழைத்ததாக மரபுக்கதைகள் குறிப்பிடுகின்றன.
சிங்கபுர என்ற சமஸ்கிருத மொழியின் பொருள் "சிங்க நகரம்" என்பதாகும். இருந்தபோதிலும் இப்பகுதி வனங்களில் சிங்கத்தைப் பார்ப்பதென்பது அபூர்வமானதாகும். இளவரசர் ஸங் நிலா உதாமா கண்டது புலியாகக் கூட இருந்திருக்கலாம். சிங்கப்பூர் அரச இலட்சணையில் சிங்கமும் புலியும் பொறிக்கப்பட்டுள்ளமை இக்குழப்பத்திலிருந்து விடுபடும் நோக்கிலாகக்கூட இருக்கலாம்.
இத்தீவில் "தெமாசெக்" என்ற பெயரில் நகரொன்று இருந்ததாக சீனப்புராணங்களிலும் மலேசியா மரபுக் கதைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.
தெமாசெக் என்றால் "கடற்பட்டணம்" என்பது பொருளாகும்.
சிங்கப்பூரின் வரலாறு 1819 ஜனவரி 29ம் திகதி ஸர் தோமஸ் ஸ்டாம்போர்ட் ரப்ல்ஸ (Sir Thomas Stamford Raffles ) என்ற ஆங்கிலேயர் இத்தீவை ஜொஹோர் சுல்தானிடமிருந்து பொறுப்பேற்றுக் கொண்டதுடன் ஆரம்பமாகின்றது.
தோமஸ் வூல்னர் (Thomas Woolner) என்பவரால் உருவாக்கப்பட்ட அவரது சிலை விக்டோரியா தியேட்டருக்கு அருகில் நிறுவப்பட்டுள்ளது. அதே சிலையின் பளிங்குக் கற்களால் செய்யப்பப்பட்ட பிரதியொன்று வடக்கு படகுத்துறையிலும் (North Boat Quay) காட்சிப்படுத்தப் பட்டுள்ளது!
கிழக்கிந்தியக் கம்பனியின் வசமிருந்த சிங்கப்பூர், 1858ல் பிரித்தானியர் வசமாகியதும் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டு கிழக்கு - மேற்கு வர்த்தகத்தின் முக்கிய கப்பல் போக்குவரத்து மையமாகியது. 1869ல் சுயஸ்கால்வாய் திறக்கப்பட்டதும் கப்பல் போக்குவரத்தின் அதிகரிப்பானது சிங்கப்பூரின் சுதந்திர வர்த்தகத்துறையின் அபிவிருத்திக்கு வழிவகுத்ததெனலாம்.
எந்தவொரு நாட்டினதும் அபிவிருத்திக்குத் துறைமுகங்களே முக்கிய காரணமாக அமைகின்றன. அந்த வகையில் நமது இலங்கைத் தீவும் சீன தேசத்தின் அனுசரனையில் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதானது இலங்கை ஒரு காலத்தில் சிங்கப்பூராக மாறலாம் என்று கூட எண்ணத் தோன்றுகின்றது.
பிரித்தானியா சிங்கப்பூரில் இராணுவக் கடற்படைத் தலங்களை அமைத்துக் கொள்ளத் தலைப்பட்டதுடன் - தனது கிழக்கத்திய சாம்ராஜ்யத்தின் பாதுகாப்பு அரணாகவும் இத்தீவை ஆக்கிக்கொண்டது. இதுவே இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானியப் படைகளால் முற்றுகையிடப்பட்டன.
1942 பெப்ரவரி 15ம் திகதி ஜப்பானியத் தளபதி "யமாசிதா தொமொயூகி" சிங்கப்பூரைக் கைப்பற்றியபோதிலும் - சீறுகொண்ட கூட்டுப்படைகளின் கடுந்தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஜப்பான் தோல்வியுற்று, சிங்கப்பூர் மீண்டும் பிரித்தானியர் வசமாகியது. அதன் பின்னரே 1946ல் சிங்கப்பூர் தனித்துவமிக்க முடிக்குரிய காலனியாகியது!
சிங்கப்பூர் வரலாற்றில் 1959ல் நடைபெற்ற முதலாவது தேர்தலில் Peoples Action Party (PAP) பெரும்பான்மை வெற்றியீட்டவே, லண்டனில் வக்கீல் படிப்பை முடித்து தாயகம் திரும்பிய “லீ குவான் யூ” பல உள்நாட்டுப் போராட்டங்களுக்கு ஆதரவாகக் களமிறங்கி, நாட்டை சகஜ நிலைக்குக் கொண்டுவந்து இறுதியில் அவரே பிரதமரானார். மக்கள் “லீ குவான் யூ” வைத் தலையில் துக்கி வைத்துக் கொண்டாடினர்.
மிகக்குறைவான இயற்கை வளங்களிக் கொண்டிருந்த சிங்கப்பூர் தன் தேவைகளுக்கு மலேஷியாவையே பெரும்பாலும் சார்ந்திருந்த காலம். அதனால் லீ, சிங்கப்பூரை மலேஷியாவுடன் இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். மக்களும் லீயின் கருத்துக்களைப் புரிந்துகொண்டு ஆதரவு தெரிவிக்கவே , பூரண சுதந்திரம் பெற்றிருந்த சிங்கப்பூர் - 1962ல் நடைபெற்ற மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பின் பின்னர் - 1963ல் மலேஷியாவின் சமஷ்டி ஆட்சியுடன் இணைந்தது.
1964ல் சிங்கப்பூரில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரங்கள் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வெளியேற்றப்படக் காரணமாக அமைந்து விட்டமை ஒரு துயரமிக்க சம்பவமாகும்!
மலேஷியா நாடாளுமன்றத்தில், சிங்கப்பூரை வெளியேற்றுவது குறித்து நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததன் காரணமாக, 1965. ஆகஸ்ட் 9ம் திகதி சிங்கபூரை மலேஷியாவிலிந்தும் வெளியேற்றப்பட்டது. அதன்போது லீ மனமுடைந்து அழுததாகவும் கூறப்படுகின்றது!
“லீ குவான் யூ”
1959 முதல் 1990 வரையில் பிரதமராகவிருந்த லீ குவான் யூ (1923-2015) தனது ஆட்சியின்போதே நாட்டின் வேலையில்லாப் பிரச்சினை, வதிவிடப்பிரச்சினை, இயற்கை அனர்த்தங்கள் ஆகியவற்றுக்கு முகம்கொடுத்து, அவற்றிலிருந்தும் சிங்கப்பூரை மீளச்செய்து, வளமிக்க நாடாக்கினார். பிரித்தானியாருடனான படை ஒப்பந்தம்இவரது காலத்திலேயே செய்துகொள்ளப்பட்டதொடு, மலாய், சீனம், தமிழ், ஆங்கிலம் அரச மொழியாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது!
தற்போதைய சிங்கப்பூர், ஒற்றை சட்டசபையைக் கொண்ட நாடாளுமன்றக் குடியரசாகத் திகழ்கின்றது. பிரித்தானிய சட்டமூலங்களைப் பின்பற்றும் நாடாகக்கருதப்படும் இதன் எதிர்க்கட்சியாக சிங்கப்பூர் தொழிலாளர் கட்சி உள்ளது.
அரசுத்தலைவராயிருந்த யூஸுப் பின் இஷாக் ஜனாதிபதியாக்கப்பட்டார். 1965ல் பதவியேற்ற யூஸுப் பின் இஷாக் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதல் ஜனாதிபதியாவார்.
1999ல் பதவிக்கு வந்த எஸ். ஆர். நாதன் இரண்டாவது முறையும் ஜனாதிபதியாகி, 2015 வரை ஜனாதிபதியாக இருந்து, 2016ல் காலமானார்.
தற்போதைய சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யாகூப் ஆவர். ஜனாதிபதி டோனி டான் கெங்யாமின் பதவிக் காலம் 2017ல் நிறைவடைந்ததையடுத்து,1954ல் பிறந்த ஹலீமா யாகூப் சிங்கப்பூரின் எட்டாவது ஜனாதிபதியாவார். சிங்கப்பூர் வரலாற்றில் “முதற் பெண் ஜனாதிபதி” என்ற இடத்தை இவர் பெறுகின்றார். நான்கு முறை எம். பி. யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஹலீமா யாகூப் என்பது குறிப்பிடத்தக்கது!
2023ம் ஆண்டு முதல் இலங்கைத் தமிழ் வம்சாவளியான திரு தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் ஜனாதிபதியாகத் தெரிவானார்.
தொடர்ச்சியாக 5 முறை எந்த மொழி அல்லது இனப்பிரிவைச் சேர்ந்தவர்கள் ஜனாதிபதிப் பதவி வகிக்கவில்லையோ, அந்த மொழி அல்லது இனப்பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் ஜனாதிபதிப்பதவி முன்னிறுத்தப்பட வேண்டும் என்பது அந்நாட்டுச் சட்டமாகும்! சுழற்சி முறையில் அனைத்துப் பிரிவினருக்கும் பதவி கிடைக்க வாய்ப்பளிப்பது அந்தச் சட்டத்தின் நோக்கமாகும்.
சிங்கப்பூர் பல்லின மக்கள் கொண்ட நாடாகும். சீன - மலேசியா - இந்தியா - இந்தோனேசியா – ஐரோப்பிய நாடுகளின் காலாசாரங்கள் நாட்டில் எல்லாப் பகுதிகளிலுமே காணப்படுகின்றன. இங்கு வாழும் மக்களில் சீனர் 76.8% மலேயர் 13.9% இந்தியர் 7.9% காணப்படுகின்றனர். இதில் பௌத்தர் 42.5% முஸ்லிம்கள் 14.9% கத்தோலிக்கர் 5% கிறிஸ்தவர் 10% தாவோயிஸம் 8.5% இந்துக்கள் 4% மாகும். மதங்களைப் பின்பற்றாதோர் 14.8% என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
2010ம் வருடக் கணக்கெடுப்பின்படி ஐந்து மில்லியன்களாக இருந்த சிங்கப்பூரின் சனத்தொகை 2021 ஜூன் மதத்தில் 5.45 மில்லியனாக உயர்ந்த போதிலும், கோவிட் -19 தாக்கத்தினால் 4.1% சரிவு கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது!
சிங்கப்பூரின் தேசிய மலராக ஓர்கிட்டும், தேசிய மிருகமாக சிங்கமும், தேசியப் பறவையாக கிரிம்ஸன் ஸன்பர்ட்டும் (Crimson Sunbird) கொள்ளப்படுகின்றன.
சிங்கப்பூரில் செப்பனிடப்பட்ட பெருந்தெருக்கள் 3066 கிலோ மீற்றர்களாகும். இதில் அதிவேகப்பாதை 150 கிலோ மீற்றர்களாகும். இங்குள்ள புகையிரதப் பாதையின் நீளம் 39 கிலோ மீற்றர்களெனக் கணக்கிடப்பட்டுள்ளது.
கடல்வழி - விமானவழிப் போக்குவரத்தின் கேந்திர நிலையமாக சிங்கப்பூர் காணப்படுகின்றது. “ஜுராங்” துறைமுகமானது கப்பலிலிருந்து பொருட்களை சுறுசுறுப்பாக ஏற்றியிறக்கும் துறைமுகமாகக் கொள்ளப்படுகின்றது. மீன்பிடி - ஆழ்கடல்துறையே சிங்கபப்பூரின் முக்கிய தொழிற்றுறையாகக் கொள்ளப்படுகின்றது. மீன், மருந்து வகைகள், இறப்பர் உற்பத்திப் பொருட்கள் என்பன அதன் முக்கிய உற்பத்திப் பொருட்களாகும்.
உல்லாசப் பயணத்துறைக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்துவரும் சிங்கப்பூரில், உள்ளுர் - வெளியூர் சுற்றுலாப்பயணிகள் செல்லும் இடங்களாக ஜூரோங் பறவைகள் பூங்கா, ஸென்டோசா நீர்ப்பூங்கா, இரவில் ஜொலிக்கும் சிங்கப்பூர் உயிரியல் பூங்கா (Night Safari) - முதலைகள் காப்பகம் - மண்டேய் ஓர்கிட் பூங்கா மிண்ட் நாணயக் காட்சியகம், மாரியம்மன் கோவில், சுல்தான் பள்ளிவாசல், மேர்லயன் சிலை என்பன சிங்கப்பூரின் பிரசித்திபெற்ற சுற்றுலா மையப்பகுதிகளாகும்.
மேர்லியன் சிலை (Merlion) சிங்கத்தின் தலையையும் மீன் உடலையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது 1964ம் ஆண்டு பிரேஸர் பிரன்னர் (Frazer Brunner) என்பவரால் சிங்கப்பூர் உல்லாசப் பயணத்துறைக்காக வடிவமைக்கப்பட்டதாகும்.
சிங்கப்பூர் தேசிய இலட்சணை, சிங்கமும் புலியும் ஐந்து நட்சத்திரங்களையும் பிறையொன்றையும் தாங்கி நிற்பது போன்ற தோற்றம் கொண்டது. தேசியக் கொடியில் சிவப்பு பின்னணியில் ஐந்து நட்சத்திரங்களும் பிறையொன்றும் காணப்படுகின்றது.
சிங்கப்பூரின் மத்திய வர்த்தகப்பிரதேசமாக ஓர்ச்சாட் பகுதி - ரிவர் சைட் கருதப்படுகின்றது. ஓர்ச்சாட் பகுதியில் ஒரேன்ஜ் குரோ ரோட் - ஹென்டி ரோட் - ஓர்ச்சாட் ஹோட்டல் போன்றன அமைந்திருப்பதால் - இப்பகுதி உல்லாசப் பயணிகள் நடமாடும் பகுதியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்பகுதியிலேயே சிங்கப்பூரின் மூன்று நூதனசாலைகள் அமைந்துள்ளன. புகிஸ் - கம்போங் கிலாம் - லிட்டில் இந்தியா - சைனா டவுன் என்பன அடுத்த முக்கிய வர்த்தகச்சந்தைகள் அமைந்துள்ள பகுதிகளாகும்.
ஸென்தோஸா உல்லாசப்பயணிகள் வந்துபோகும் முக்கியமானதோர் இடமாகும். சிங்கப்பூரின் தென் பகுதியில் அமைந்துள்ள இது டிஸ்னிலேண்டுக்கு ஒப்பாகக் கருதப்படுகின்றது. இங்கே கடல் வாழ் உயிரினங்களையும் பார்வையிட முடிவது அபூர்வமானதாகும்.
சிங்கப்பூர் மொழியில் வீதிக்கு ஜலான் என்றும், ஒழுங்கைக்கு லோரோங் என்றும், குன்றுப்பகுதிக்கு புகிட் என்றும், கிராமத்திற்கு கம்போங் என்றும் கூறுவர். ஆசியாவிலேயே ஊழல் மிகக்குறைவானதும் சுகாதாரத்தைப் பேணும் நாடாகவும் சிங்கப்பூர் கருதப்படுவது சிறப்பானதாகும்!
(முற்றும்)
வாசகர்கள் தங்கள் ஆக்கங்களை
வேட்டை Email மூலம் அனுப்புங்கள்
Email-vettai007@yahoo.com
0 Comments