குறள்வழி வாழ்வியல் சிந்தனைகள்!-87 (செந்தமிழ் இலக்கியம்)

குறள்வழி வாழ்வியல் சிந்தனைகள்!-87 (செந்தமிழ் இலக்கியம்)


வாக்கினிலே இனிமை
இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. (100- குறள்)

என்னும் குறள் மூலம், சொல்பவர்க்கும் கேட்பவர்க்கும் இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டு இனிமையில்லாத தீய, கடுஞ் சொற்களைக் கூறுவது. கனிகள் இருக்கும்போது, அதைவிட்டு காயைத் திருடித்தின்பதைப்போன்றது என்ற கருத்தைக் குறளாசன்பதிவு செய்கிறார்.

இன்சொல் பகைமை தவிர்க்கும் ; நலம் பல நல்கும் ; சிறப்புகள் சேர்க்கும் ; வாக்கின் இனிமை மனத்தைக் குளிர்விக்கும். உண்மைதான் சொல்லுக்கு உயிர்ப்பு உண்டு. சொல்லானது உயிர்பெற்று பலித்துவிடும். எச்சூழலிலும் அமங்கலச்சொற்களைப் பயன்படுத்தக் கூடாது.

ஒரு சொல் பொருளறிந்து கூறினாலும் சரி, பொருளறியாமல் கூறினாலும் சரி, கூறப்பட்ட சொல், எதைச் சுட்டுகின்றதோ, அது நடந்தே தீரும். தீ சுடுவதைப் போல... மலர்கள் மணம் வீசுவதைப் போல...
வார்த்தைகளும் சுடும்... மணம் வீசும்.

ஏனெனில் வார்த்தைகள் விதைகள் ; வெளிப்பட்டுவிட்டால் முளைத்தே தீரும்; விளைவை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

வார்த்தைகளிலும் சுவையுண்டு ; சூடும் உண்டு ; தனிப்பும் உண்டு ; மருந்தும் உண்டு; தேனும் உண்டு;கொடுக்கும் உண்டு;

நாம் பேசும் வார்த்தைகளுக்கென தனியான மணமும் உண்டு. துர்நாற்றமும் உண்டு ; சில வார்த்தைகள் இனிக்கும் ; சில கசக்கும் ; சில சொற்கள் ஒளிவீசும் ; சில சொற்கள் இருளைப் போர்த்தும் ; சில வார்த்தைகள் உயிரைக் குடிக்கும் ; சில சொற்கள் உயிரைக் காக்கும் ; சில சொற்கள் ஈட்டியாய் குத்தும்; சில சொற்கள் மயிலறகாய்த் தடவி நிற்கும். சில சொற்கள் தூக்குக்கயிறாகும்.

சில வார்த்தைகள் கல்லாய் கனக்கும். இது போன்ற சொற்களை நாம் வாழ்நாள் முழுவதும் சுமக்கின்றோம். சில சொற்கள் நம்மை பாதாளத்தில் வீழ்த்தும் ; சில சொற்கள் தன்னம்பிக்கை தரும். இப்படி பயன்படுத்தும் வாக்கின் வடிவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

எவ்வுயிர்க்கும், யாருக்கும் தீங்கு தராத வாக்கானது. வாய்மை எனப்படும் சத்தியமாகும் இது பலித்துவிடும் சாத்தியமாகும் என்கிறார் வள்ளுவர்

சரியான, உண்மையான, உறுதியான வார்த்தை என்பது ஒரு மகத்தான சக்தி என்கிறார் மார்க் ட்வைன் என்ற அறிஞர்.பேசும் மனிதர்கள், கேட்கும் மனிதர்கள், இடம், காலம், சொற்களின் அழுத்தம், உச்சரிக்கும் தொனி, பொருள், சூழ்நிலை, நம் உணர்வுகள் ஆகியவற்றைப் பொறுத்து வார்த்தைகளின் வடிவங்களும், பொருள்களும் மாறலாம். ஆதலின் கவனமுடன் வார்த்தைகளைக் கையாள வேண்டும்.

வாக்கினிலே இனிமை வேண்டும் எனும் பாரதியின் வாக்கு இங்கு நினைவு கூரத்தக்கது. அன்பான வார்த்தைகள் தன்னம்பிக்கை தரும் ஆறுதல் வார்த்தைகள் தற்கொலையைத் தவிர்க்கும் இனிமையான வார்த்தைகள் நற்சூழலை வளர்க்கும் ஈடில்லாவார்த்தைகள் நல்லுறவுகளைத் தரும் உயிரோட்டமானவார்த்தைகள் இதயத்தைத் தொடும்

ஊக்கமான வார்த்தைகள் துயரங்களை விரட்டும் எழுச்சியான வார்த்தைகள் வெற்றியைத் தரும் ஏற்றம் தரும் வார்த்தைகள் மகிழ்ச்சியைப் பெருக்கும் ஐயம் தவிர்த்தவார்த்தைகள் நட்பைப் போற்றும் ஒற்றுமைக்கான வார்த்தைகள் இறுக்கத்தைத் தளர்த்தும் ஓங்குபுகழ்வார்த்தைகள் மரியாதையைக் கூட்டும் ஔவையின் வார்த்தைகள் பேண உறவை உயர்த்தும்,வாக்கினிலே இனிமை கூட்டி, அல்லன தவிர்த்து, நல்லன சொல்லி, நலம்பெற்று வளமுடன் வாழ்வோம்!(தொடரும்)


Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post