புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா - 97

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா - 97


வனவாசிகளுக்கு நடைப்பயணம் என்பது சர்வ சாதாரண விஷயம்... ஆனால் நகரத்தில் வாழ்ந்துவரும் இர்வினைப் போன்றவர்களுக்கு  அதுவொரு கடினகாரியம்...!

தனது  நண்பனிடத்தில் அவனுக்கிருந்த அபரிதமான நட்பும்,  வனவாசிகளின் சடங்கு சம்பிரதாயங்களைப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வமும் அவன்  விபரீதமான இந்தப் பயணத்தைத் தொடரக்காரணமாக இருந்ததெனலாம்!

பெரியகல்லின் உச்சியிலிருந்து பார்த்தபோது தெரிந்த “ஓரினகோ” ஆறு, வனத்துக்குள்  நடந்து கொண்டிருக்கும்  அவனது கண்களுக்கு இப்போது  படவில்லை. அதனால் அவன் போய்க்கொண்டிருந்த திசை சரியானதுதானா என்பதைக்கூட அவனால் நிர்ணயித்துக்கொள்ள முடியாதிருந்தது!

மேடு – பள்ளம், கல்லு - முள்ளு நிறைந்த அந்த ஒற்றையடிப் பாதையில் தன்னந்தனியே நடந்து கொண்டிருந்தபோது, ஒருவிதமான  பயம் அவனை ஆட்கொண்டது!

எத்திசை நோக்கினும் இருள் சூழ்ந்த  வனாந்திரம்!  அதற்குள் கொடிய மிருகங்கள் பதுங்கியிருப்பது நிச்சயம்! அவனது  பாதையில் அவை குறுக்கிடுமானால் தனி ஒருவனாக நின்று, தப்பிப்பதென்பது சற்றுக் கடினமான காரியம்தான்!
அதனால் எதற்கும் ஒரு பாதுகாப்பிற்காக கையில் ஒரு பாரமான மரக்குச்சியை எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்தவன், நடைபாதை ஓரமாக இருந்த மரத்திலிருந்தும் ஒரு கிளையை  முறித்தெடுக்க முயன்றான்!

அவ்வேளையில்  சில வானரங்கள் அவனை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டதும்,  அவனது  பயம் இரட்டிப்பாகிவிட்டது!  முறித்தெடுத்த மரக்கிளையை அப்படியே தூக்கித் தோளில் மாட்டிக் கொண்டவனாக அவன் ஓடலானான்!

சற்றுத்தூரம் ஓடியவன், மெல்லத் திரும்பிப் பார்த்தான்! வானரங்களை அவன் அங்கு காணவில்லை!

பக்கத்திலிருந்த கல்லொன்றின் மேல்  ஏறியவன், மரக்கிளையை ஓர் ஓரமாக  வைத்துவிட்டு கல்லின்மேல்  உட்கார்ந்தபடி  சிறிது நேரம் இளைப்பாறினான்.  பின்னர்,  தனது இடையைச் சுற்றியிருந்த தோல்பட்டியில் தொங்கிக்கொண்டிருந்த பையைத்திறந்து, தண்ணீர்க் குவளையொன்றை  எடுத்து, சிறிது நீரை அருந்திவிட்டு, எழுந்து  நின்ற அவன்  சுற்றுமுற்றும் பார்த்தபோதுதான், வெகுதூரத்தில் வலைந்து நெளிந்து அமைதியாக ஓடிக்கொண்டிருந்த  ஆற்றைக் கண்டான்!

அதுதான் “ஓரினகோ” வாக இருக்கவேண்டும் என்பதைத் தனக்குள் உறுதிப்படுத்திக் கொண்டவனாகக் கல்லிலிருந்தும் கீழிறங்கி, தான் சுமந்து வந்த மரக்கிளையின் இலைகளை நீக்கிவிட்டு, அதனைக் ஊன்றுகோலாக்கி நிலத்தில்  ஊன்றியபடி  ஆற்றின் திசை நோக்கி நடக்கலானான்!

அவன் சிறிதுதுரம் நடந்து கொண்டிருக்கும்போது,  பிறந்த மேனியாகச் சில மனிதர்களும்,  பட்டைகளையும் இலைகளையும்  இடையில் சொறுவிக்கொண்டவர்களாக வேறும் சிலரும்  வனத்தில் நடமாடிக்கொண்டிருப்பதைக் கண்டான்!

நேருக்கு நேர் சந்தித்தபோதிலும் அவர்கள் எவருமே ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக்கொள்ளாதது அவனுக்குப் பெரும் புதிராகவிருந்தது!
(தொடரும்)


Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post