வலிப்பு நோய்

வலிப்பு நோய்

எனது மகனுக்கு கடந்த 8 வருடங்களாக வலிப்பு நோய் இருக்கிறது. மருந்தைச் சரிவரப் பாவித்தாலும் கூட வலிப்பு ஏற்படுகிறது. பொதுவாக தூக்கத்தில் தான் வலிப்பு ஏற்படுகிறது. இதற்கு யுனானி வைத்தியத்தில் ஏதும் சிகிச்சை முறைகள் உண்டா?
தயவு செய்து இதுபற்றி விளக்கவும்.

பதில்: வலிப்பு நோய் அல்லது காக்கை வலிப்பு எனப் பொதுவாக அழைக்கப்படும் இந்நோயானது மூளையுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்ட ஒரு நோயாகும். இந்நோய் மூளையின் சாதாரணத் தொழிற்பாடுகளை விடவும் பல்வேறு காரணங்களினால் அதிதீவிரமாகச் செயற்படும் போது ஏற்படுகின்றன.

ஒரு கட்டடத்தில் மின்குமிழ் உட்பட ஏனைய மின்சார உபகரணங்கள் சரியாகத் தொழிற்பட வேண்டுமாயின் மெயின் சுவிட்ச் (Main Switch) இன் மூலம் சகல பகுதிகளுக்கும் வயர்களினூடாக சாதாரண மின்னோட்டம் இருக்க வேண்டும். இதற்கு மாறாக கூடுதலான மின்னோட்டம் ஏற்பட்டால் சகல மின்சார உபகரணங்களும் செயலிழந்து விடும் என்பதை நாம் அறிவோம். 

இதேபோன்று தான் எமது உடம்பு இயங்குவதற்கும் மூளையின் கட்டுப்பாட்டுடனான மின்னோட்டம் (Electrical Activity) எமது நரம்புத் தொகுதியினூடாகச் சகல உறுப்புக்களுக்கும் சென்றடைய வேண்டும். இதற்கு மாறாக பல்வேறுபட்ட காரணங்களினால் மூளையின் கட்டுப்பாட்டை இழந்து அதிகமாக மின்னோட்டம் உற்பத்தியாகும் போது தான் வலிப்பு ஏற்படுகின்றது. ஆனால் இந்நோயின் ஒரு முக்கியமான விடயம்தான் தொடர்ச்சியாக வலிப்பு ஏற்படாமல் வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு ஒரு முறை வலிப்பு ஏற்படுவதாகும். ஏனைய நேரங்களில் இவர்களின் உடற் தொழிற்பாடுகள் ஒரு சுகதேகியின் உடற்தொழிற்பாட்டை ஒத்ததாகவே இருக்கும். வலிப்புநோய் என்பது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் ஒரு நோயல்ல. இந் நோயை வெற்றி கொள்வதாயின் மன உறுதி மிகமிக முக்கியமாகும். 
உலகிலே பல சாதனைகளைப் படைத்த ஹேர்குலிஸ், அலக்சாண்டர், நெப்போலியன் போன்றோர்களும் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு அது ஒரு தடையாக இருக்கவில்லை என்பது ஒரு முக்கியமான விடயமாகும். எனவே வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இவ்விடயத்தைக் கருத்திற்கொண்டு செயற்பட்டால் இன்ஷா அல்லாஹ் வாழ்க்கையில் எதுவிதப் பிரச்சினையுமின்றி வாழலாம்.

இந்நோய் ஏற்படுவதற்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை . ஆனாலும் தலையில் ஏற்படுகின்ற காயம், பரம்பரைக் காரணிகள், மூளையில் ஏற்படும் தொற்றுநோய்களின் தாக்கம், தலையினுள் ஏற்படுகின்ற கட்டிகள் போன்றவைகள் காரணமாக ஏற்படலாம் எனக் கருதப்படுகின்றது. 

வலிப்பில் ஏறக்குறைய 30 இற்கு மேற்பட்ட வகைகள் உள்ளன. ஒரு சிலருக்கு மயக்க நிலை ஏற்படுவதோடு மற்றும் ஒரு சிலர் மயக்க நிலைக்குச் செல்ல மாட்டார்கள்.

இந்நோய் ஏற்படும் போது ஒரு சிலர் எதுவிதமான முன் அறிகுறிகள் இன்றி திடீரென மயங்கி விழுவார்கள். மற்றும் ஒரு சிலருக்கு மயக்கம் ஏற்படுவதற்கு முன் பிரகாசமான வெளிச்சம் தென்படல், அசாதாரண மனத்தை உணருதல், மன நிலையில் மாற்றம் ஏற்படல், தசைச்சுருக்கம், பசியின்மை , ஒரு சில செக்கன்களுக்கு சுய நினைவு இன்றி நடமாடுதல் போன்ற அறிகுறிகள் தென்படலாம்.

இன்று அனேகமானவர்களுக்கு இந்நோயைப் பற்றிய பூரண தெளிவு இல்லாமையின் காரணமாக மருத்துவர்களை நாடுவதைவிடவும் பேய் பிசாசு பிடித்துள்ளதாக எண்ணி பல வகையான போலி அல்லது ஏமாற்றுச் சிகிச்சை செய்பவர்களிடம் சென்று பல பிரச்சினைகளுக்கு ஆளாகுகின்றார்கள். முஸ்லிம் சமூகத்தில் இந்நிலை கூடுத லாகக் காணப்படுகின்றன என்பது ஒரு கவனிக்கத்தக்க விடயமாகும்.

இந்நோய் மீண்டும் மீண்டும் வராமல் தடுப்பதாயின் மருத்துவர்கள் சிபார்சு செய்யும் மருந்துகளை தொடர்ச்சியாகப் பாவிக்க வேண்டும். அத்துடன் கிளினிக்கிற்குத் தொடர்ச்சியாகச் செல்வதன் மூலம் இம்மருந்துகளினால் ஏற்படும் பாதிப்புகளை வைத்தியர்கள் அவதானித்து அதற்கேற்றவாறு மாத்திரைகளைச் சிபார்சு செய்யக் கூடியதாக இருக்கும்.

வலிப்பு நோயுடைய சிறுவர்களை ஒரு சில பெற்றோர்கள் பாடசாலையிலிருந்து நிறுத்தி விடுகிறார்கள், ஆனால் வலிப்பு நோய் என்பது ஒரு பாரதூரமான அல்லது சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழக்கூடிய ஒரு நோயல்ல என்பது ஒரு முக்கியமான விடயமாகும். அத்துடன் கல்வி கற்பதற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடிய ஒரு நோயும் அல்ல. ஆனால் தனது சிறார்களுக்கு வலிப்பு நோய் இருப்பதைப் பற்றி பாடசாலை நிருவாகத்திற்கு அறிவிக்க வேண்டும்.

இந்நோயுடையவர்கள் அதிகமான மரக்கறி வகைகள், தானிய வகைகள், மீன் வகைகள், பழ வகைகள் போன் றவைகளை அதிகமாக உட்கொள்வதோடு மாமிச வகைகள், மதுபானம், பொரித்த உணவு வகைகள், கோப்பி, புகைத்தல், இரசாயனப் பொருட்கள் அடங்கிய உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். மேலும் குறிப் பிட்ட நேரத்திற்கு உணவு உட்கொள்வதும் முக்கியமாகும். மேலும் மலச்சிக்கல் ஏற்படாமல் தவிர்ப்பதும் முக்கியம்.

தினமும் ஒலிவ் எண்ணெய் 2 தேக்கரண்டி உட்கொள்வதும் சிறந்த பயனைத் தரும்.

அத்துடன் தொடர்ச்சியாக சாதாரண உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதும் மன அழுத்தமற்ற வாழ்க்கையும் மிகவும் முக்கியமாகும். ஒரு சிலருக்கு நவீன வைத்தியச் சிகிச்சை பெற்றாலும் கூட தொடர்ச்சியாக வலிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கும். இவர்களுக்கு யுனானி வைத்தியச் சிகிச்சையையும் சேர்த்து மேற்கொண்டால் கூடிய பயனைப் பெறலாம்.

இறுதியாக வாசகர்களுக்கு விசேடமாக வலிப்பு நோய் இருக்கும் சிறார்களின் தாய்மார்களுக்கு ஒரு செய்தியாக அதாவது உங்கள் பிள்ளைகளுக்கு வலிப்பு நோய் இருப்பதன் காரணத்தினால் பாடசாலைக்கு அனுப்பாமல் இருக்க வேண்டாம். ஏனெனில் வலிப்பு நோய் இருக்கும் சிறுவர்களின் கற்றல் திறன் அல்லது கிரகிக்கும் திறன் போன்றவைகளில் எதுவிதமான பின்னடைவும் இல்லை என்பது ஒரு முக்கியமான விடயமாகும்.

Vettai Email-vettai007@yahoo.com  

Post a Comment

Previous Post Next Post