திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-26

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-26


குறள் 1031
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

மருமவன... நாட்ல சகட்டுமேனிக்கு, அங்கியும் இங்கியும் பெரிய பெரிய மில்லு கில்லுன்னு புதுசு புதுசா நெறைய வரலாம். நம்ம ஆளுங்களும் ஒழவுத் தொழிலை அம்போன்னு விட்டுட்டு,  வேற சோலிக்குக் போற நெலமை கூட வரலாம். அதுல தப்பே இல்லை. 

ஆனா ஒண்ணு தெரிஞ்சிக்க மருமவன ... இந்த ஒலகம் நம்ம ஏரை நம்பி,  அதுக்குப் பின்னால தான் இருக்கு. எவ்வளவு சங்கடப்பட்டாலும், நம்ம ஒழவு சோலி இருக்க.. அது தான் மருமகனே இருக்கதுலியே ஒசத்தியான சோலி.

குறள் 1032
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.

மாப்ள.. உழவுத் தொழில் செய்யத் தெரியாத எத்தனையோ பேர் நம்மோட உயிர் வாழ்றாங்க. அவங்களையும் சேத்து தூக்கிப் பிடிக்கதுனால, உழவு வேலை செய்றவங்கதான் இந்த ஒலகத்துக்கே அச்சாணி மாதிரி மாப்ள. 

குறள் 1033
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.

வயல்ல உழவு செய்து, அது மூலம் கெடைய்க்கதை வச்சு தங்களோட வாழ்க்கையை ஓட்டுதவங்க தான் மாப்ள உயிர் வாழ்பவங்க. மத்தவங்கள்லாம், மற்றவங்களுக்கு கூழைக்  கும்பிடு போட்டு அவங்க தாரதை வேங்கிச் சாப்பிட்டு,  அவங்க பின்னாலயே போறவங்க மாப்ள. 

குறள் 1046
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.

மாப்ள.. நீ  நெறைய படிச்சு, நல்ல உணர்ந்து, சிறப்பான கருத்துக்களை மத்தவொளுக்கு எடுத்துச் சொல்லுவ. இந்த கருத்துக்களை சொல்லுத நீ ஏழையா இருந்துட்டன்னு வச்சுக்க, ஒன்னோட பேச்சு எடுபடாம பொயிரும் மாப்ள. 

குறள் 1047
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.

மாப்ள..  வறுமைங்கிறது மோசந்தான். சரி... வந்துட்டு.. அதிக்காக தப்புத் தண்டா பண்ணிறப்படாது. ஒருத்தன் அப்படி பண்ணிட்டாமுன்னா, பெத்த அம்மை கூட அவனை வேத்து ஆளாத் தான் பாப்பா மாப்ள. 

குறள் 1048
இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.

மாப்ள.. நேத்து இருந்த வறுமை, சாக அடிப்பது போல் இருந்திருக்கும். இன்னைக்கும் அது வந்து எங்கே பாடாய் படுத்துமோன்னு ஏழை பாழைங்க ரொம்ப சங்கடப்படுவாங்க மாப்ள.(தொடரும்)




Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post