Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-28


குறள் 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

மாப்ள.. எழுத்துக்கள் எல்லாத்துக்குமே மொதல்ல வாரது அகரம் தான். 

அது போலத்தான், இந்த ஒலகத்துல உள்ள உயிர்கள் எல்லாத்திலியும் மொத மொத  வந்தது கடவுள் தான் மாப்ள. 

குறள் 12 
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

நமக்கு சத்தான சாப்பாடு தேவை. அதுக்கு அரிசி மாதிரி விளை பொருள் வேணும்லா மருமவன. அதோட வெளச்சலுக்கு நீரை கொடுக்கது மழை. 

அது மாதிரி நாம குடிக்கதுக்கு தேவையான நீரும் மழை பெய்யுத்துனால தான் கெடைக்குது மாப்ள. 

குறள் 19 
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின்.

இம்புட்டுப் பெரிய ஒலகத்துல, மழை ஒழுங்கா பெய்யாட்டி, இல்லாதவொளுக்குல்லாம் எங்க கூடி நாம தானம் கொடுக்க முடியும் மாப்ள? நமக்காக எப்பிடி தவம் இருக்க முடியும்? பெரிய சிக்கலாப் பொயிரும் மாப்ள. 

குறள் 20
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

மாப்ள.. இந்த ஒலகத்துல மழை இல்லாம யாராலயும் ஒழுங்கா வாழ முடியாது. ஒவ்வொருத்தரும் இதைப் புரிஞ்சுகிட்ட பொறவு, நீரின் சிறப்பை நல்ல உணர்ந்து செயல்படணும் மாப்ள. 

குறள் 24
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.

மாப்ள.. ஒருத்தனுக்கு இருக்க மன உறுதி யானையை அடக்குத அங்குசம் மாதிரி. அதை வச்சு, மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்புலன்களையும் அடக்க முடியும். இப்படிப்பட்டவன் துறவறங்கிற வீட்டுக்கு ஏத்த விதையா இருப்பான் மாப்ள

குறள் 31
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

மாப்ள.. நேர்மை, நல்ல குணம், ஒழுக்கம்னு வாழ்ந்தா அந்த அறம் நமக்கு நல்ல பெருமையை பெற்றுத் தரும். செழிப்பான ஒரு வாழ்க்கையைத் தரும். 

இதை விட வேற எது மாப்ள நமக்கு பெருசா எதையும் செஞ்சிறும்?
(தொடரும்)


Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

0 Comments