குறள்வழி வாழ்வியல் சிந்தனைகள்!-9௦ (செந்தமிழ் இலக்கியம்)

குறள்வழி வாழ்வியல் சிந்தனைகள்!-9௦ (செந்தமிழ் இலக்கியம்)


நேர்மை நம்மைக் காக்கும்

பழியுடன் நமக்கு வந்தடையும் செல்வத்தை விட, கொடிய வறுமையே மேலானது என்பது சான்றோர் கூற்று...படிப்பதற்கும், கேட்பதற்கும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இன்றைய நடைமுறையில் நாம் காண்பதென்ன? 

விந்தையாகத் தான் உள்ளது. ஊரை ஏமாற்றுதல், நல்லவன் போல் நடித்தல், கபட வேடமிடுதல், பிறர் வயிற்றெரிச்சலைக் கொட்டிப் பொருள் சேர்த்தல், கடமை தவறுதல், பொருள், பணம் மட்டுமே குறியாக வாழ்தல், அதைச் சேர்க்க பஞ்சமா பாதகங்களையும் செய்யக் கூச்சப்படாது இருத்தல், லட்சக் கணக்கில், கோடிக் கணக்கில் தொழில் தர்மமின்றி, நேர்மையின்றி கொள்ளையடித்தல் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

இதைக் கூறும்போது தேசத் தந்தை எனப் போற்றப் பெற்ற அண்ணல் காந்தியடிகள் கூறிய உண்மைச் சம்பவம் நினைவிற்கு வருகிறது. அந்தச் சம்பவம்,

அரேபியாவில் ஆட்சித் தலைவராக இருந்த மன்னர் கலீபா அபூபக்கர் அவர்கள் ஒருநாள் தெருவில் துணி விற்று வருவதைக் கண்ட உமர் என்பவர் பதற்றத்துடன் அவரிடம் சென்று ஏன் இந்த நிலை? நீங்கள் துணி விற்க வந்தால் அரசு பொறுப்பையார் கவனிப்பது? என்றாராம்.

அதற்கு மன்னர் என் குடும்பத்தை யார் கவனிப்பது? அதற்காகப் பொருள் ஈட்டச் செல்கிறேன் என்றும்,“என் சொந்தக் கடனை யார் அடைப்பது?” என்றும் கூறினாராம். இதையறிந்து உமர் அவர்கள் அரசு கருவூல அதிகாரி அபுஉபைதாவிடம் சென்று மன்னர் கலீபாவிற்கு உதவ முடியுமா? எனக் கேட்க, கருவூல அதிகாரியோ, மன்னிக்க வேண்டும்.

இது அரசாங்கப் பொதுநிதி, ஆகவே உதவ முடியாது. ஆனால், ஒரு வழி உண்டு. அகதி நிதி உதவி மூலம் கடன் கொடுத்து வேண்டுமானால் உதவலாம் என்றாராம்.

அதே போல், வேறு ஒருமுறை கலீபாவின் மனைவி தேன் வாங்கிவர, அவரிடம், “செலவிற்கு நிதி இல்லை , ஏது தேன் வாங்கக் காசு?” எனக் கேட்க, அவர் மனைவியோ, குடும்பச் செலவில் மிச்சப்படுத்தியது என்று கூற அதைக்கொண்டுசென்று உடனே கருவூலத்தில்கொடுத்து விட்டாராம்...

இறுதியாக தாம் பெற்ற பொருள் அனைத்தையும் தந்து, தன் தோட்டத்தையும் விற்று தன்னுடைய கடனை அடைக்கக் கூறி மகள் ஆயிஷாவிடம் கூறினாராம். இப்படியும் வாழ்ந்து உள்ளார்கள்.

இச்சம்பவத்தைக் காந்தியடிகள் கூறி, சுதந்திர இந்தியாவில் கலீபாக்களின் ஆட்சி இருந்தால் நன்றாக இருக்கும் என ஆதங்கப் பட்டாராம். நிர்வாக நேர்மைக்குச் சான்றாக இக்கதையைக் கூறினார்.

வாழ்வதற்குப் பொருள் வேண்டும். வாழ்வதிலும் ஒரு பொருள் வேண்டுமல்லவா? நல்வழியில் நியாயமாக ஈட்டிய செல்வம் எல்லா நன்மைகளும் தந்து நமக்குப் புகழையும் தரும் என்பதே உண்மை . சுற்றுப்புறத் தூய்மை, உடல் தூய்மை, மனத்தூய்மை, போலவே நம் செயலிலும் தூய்மை பேண வேண்டும். பழிக்கு நாண வேண்டும், பழியில் வரும் செல்வத்தை விரும்பாதிருத்தல் வேண்டும். அது பாவத்தின் கூலியாகும். உண்மை உழைப்பால் வரும் ஊதியம் குறைவெனினும் மனம்அமைதியைத் தரும். மனநிறைவைத் தரும் என்பதே நிதர்சன உண்மையாகும்.

கடமையாற்றி, பண்பால் சிறந்து, நேர்மையுடன் உழைப்போம் ! உயர்வோம் மன நிறைவு பெறுவோம் நலம்பெற்று  வாழ்வோம்! 
(தொடரும்)


Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post