உணர்வுகள்!

உணர்வுகள்!

சனிக்கிழமை...
சாயங்கால வேளை, சூரியன் தன் கதிர்களை கொஞ்சம் கொஞ்சமாக சுருக்கிக்கொண்டு இரவு என்னும் போர்வைக்குள் குளிர்காய ஆயுத்தமான... அதே வேளையில்,
"அம்மா... அம்மா..."

"என்னடா..."

"அம்மா..! .அப்பா வந்ததும் எனக்கு ஒரு பைக் வாங்கி தர ஏற்பாடு பண்ணும்மா..?பக்கத்து வீட்டு நிர்மல் கூட பைக் வாங்கி இருக்கான்..."

"நிர்மலுக்கப்பா நல்ல வேலையில இருக்காருடா... உங்கப்பா..." என்று பேசயவளை இடைமறித்தான் அரவிந்த்.

"எனக்கு காலேஜ் போக பைக் வேணும். நீ தான் அப்பாவிடம் இன்னிக்கு சொல்லுற" என்று சொல்லி விட்டு போகும் அரவிந்தை ஏக்கத்துடன் பார்க்கிறாள் பூர்ணிமா.

சரியாக இரவு மணி ஒன்பது பத்தை தாண்டியது.

வீட்டு வாசலில் சைக்கிளை சாத்திக் கொண்டு உள்ளே நுழைந்தார் ராஜசேகர்.

"பூர்ணி... பூர்ணிமா..." என்று ராஜசேகரின் குரல் கேட்டு வாசலை எட்டிப்பார்த்தாள்.

"என்னங்க.. இன்னிக்கு இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக லேட்டாக வந்திருக்கீங்க..."

"ஒண்ணுமில்லை... என் கூட வேலை பார்க்கிற சுந்தரேசன் நாளைக்கு வீடு மாறி... வேற வீட்டுக்கு போறான். வீட்டு சாமான்களை மாற்றி கொடுக்க என்னை கூப்பிட்டான். மாற்றி கொடுக்க கூட போனேன். ஆயிரம் ரூபாயை என் பாக்கெட்டில் வச்சிட்டான். வேண்டாம்ன்னு தான் சொன்னேன். கேட்கலை. அதான் லேட்டு பூர்ணி..மா.."

"சரி... போய் தலைக்கு குளிக்காம, உடம்ப சுத்தப்படுத்திட்டு வாங்க... சாப்பிடலாம்."

தனது சட்டை கழற்றி சுவற்றின் ஆணியில் மாட்டிவிட, ஏதேச்சையாக திரும்பிய அரவிந்த்.... ராஜசேகரின் கிழிந்த பனியன் பழுப்பேறி இருந்தது.

அரவிந்தை கடந்து செல்கையில் அவரின்  உடலின் வியர்வை... மனதை ஏதோ வலிக்க செய்தது.

"பூர்ணிமா..! அர்விந்தை காலேஜில் சேர்க்க, துரையிடம் வாங்கின பணத்தில் மீதி பணம் இருபத்தியேழாயிரம் ரூபாயை அடுத்த வாரம் அவனுக்கு கொடுக்கணும். இந்த கடனை அடைச்சிட்டா... அரவிந்திற்கு ஒரு பழைய பைக், செக்கனென்டா வாங்கி கொடுத்திடலாம்....பக்கத்து ஹோண்டா ஸ்டோரூமில் சொல்லி வச்சிருக்கேன்..." என்று பேசிக் கொண்டிருக்கும் கணவரை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் பூர்ணிமா!

மறுநாள்
காலை எட்டுமணிக்கு வெளியே வந்தாள் பூர்ணிமா.

"என்ன  அரவிந்த்... என்னடா இது...?அப்பாவுக்க சைக்கிளை துடைச்சிட்டு இருக்கே...?"

"ஒண்ணுமில்லம்மா... நேற்றைக்கு நீங்க பேசியதை நான் கேட்டேன்ம்மா... பைக் வாங்க எண்ணமே எனக்கு இல்லை... என் ஆசை நான் சம்பாதிச்சு அப்பாவுக்கு ஒரு நல்ல பைக் வாங்கி தரணும்... நிச்சயம் நிறைவேறும்மா!"

அரவிந்த சொல்ல சொல்ல...
வீட்டினுள் இருந்து வெளியே வந்துக் கொண்டிருந்தார் ராஜசேகர். நெற்றியில் பூசிய திருநீறு மணம் வீசியது.



Vettai Email-vettai007@yahoo.com

1 Comments

  1. எனது சிறுகதை உணர்வுகள் இந்தவாரம் வேட்டை இதழில் வெளியிட்டு சிறப்பிதுள்ளீர்கள்.

    மிக்க நன்றி.

    அன்புடன்
    கோபால்.

    ReplyDelete
Previous Post Next Post