புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா - 98

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா - 98


வனத்தில் வேறுபட்ட இனங்களாகப்  பல்லாயிரம் பழங்குடியினர்  வாழ்கின்றனர். ஒவ்வோர் இனமும்  வெவ்வேறு மொழிகள் பேசுவதால், ஒருவரோடொருவர் உரையாடிக் கொள்வதில்லையா? அல்லது தாம் நேசிக்கும் வானத்தைப் புனித பூமியாகக்கருதி வரும் அவர்கள்  அதன்  புனிதத்தன்மையைப் பேணுவதற்காக அமைதிகாக்கின்றனரா?

பதில் கிடைக்காத சில பல கேள்விகளை அவன் தனக்குள்ளேயே சுமந்தவனாக தொடர்ந்தும் நடக்கலானான்!

சிறிது தூரம் நடந்த அவனுக்கு மேலுமோர்  ஆச்சரியம் காத்திருந்தது!

சிலர் பிறந்த மேனியாகவும், இன்னும் சிலர் அரை நிர்வாணமாகவும் மரங்களின் அடிவாரத்தில் அம்புகளை ஏந்தியவர்களாக  குந்தியிருந்து எதையோ எதிர்பார்த்துக் காத்திருந்தனர்!

அம்புகளை உபயோகித்து யுத்தம் புரிந்த  பழங்காலத்து "யுத்தகளம்" ஒன்றைப் போலிருந்தது இது அவனுக்கு!

இர்வின் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தபோது, அவனுக்கு சமீபமாகவிருந்த மரத்தடியில் குந்தியிருந்து அம்பைக் குறிபார்த்துக் கொண்டிருந்த நபரின் அம்பிலிருந்து பாய்ந்த  வில்தூரத்திலிருந்த ‘மான்’ ஒன்றின் கழுத்துப்பாகத்தைத் துளைத்தபோது, அது துடிதுடித்து உயிர் விட்டது.  தன் கையிலிருந்த அம்பை அப்படியே விட்டுவிட்டு இறந்து கிடந்த மானைத்தூக்கித் தோளில் போட்டுக் கொண்டவனாகத் திரும்பி வந்த அந்தப் பழங்குடி வேடுவன், தன் அம்பைக்  கையிலெடுத்துக் கொண்டு அவனது இன்றைய உழைப்பை நிறைவு செய்துகொண்டு,   ‘பெரியகல்’  பக்கம் நோக்கி  நடக்கலானான்!

இர்வினுக்கு இப்பொழுது  புரிந்துவிட்டது... வேட்டையாடும் நோக்கில்தான் மரங்களுக்கு மறைந்து அவர்கள் குந்தியிருகின்றார்கள் என்பது!

தன் கையிலிருந்த ஊன்றுகோலை  நிலத்தில் ஊன்றியபடி தொடர்ந்து நடந்து கொண்டிருந்த இர்வின்,  தன் பாதையில் பெரும் குழிகளை எதிர்கொள்ளலானான்!

கல்லூரிக்காலத்தில் இல்லங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளின்போது, கம்பூன்றித் தூரப்பாய்ந்து முதலிடம் பெற்று ‘மெடல்’கள் வாங்கியுள்ள அவன், அதே நுட்பத்தைப் பயன்படுத்தித் தன் கையிலிருந்த ஊன்றுகோலைக்  கொண்டு   குழிகளைத் தாண்டித் தூரப்பாய்ந்தவனாக   தொடர்ந்தும் முன்  செல்லலானான்!

அப்பொழுதுதான் அவனை நோக்கி அந்தக் கொடூர மிருகம் விரைந்து வரலானது!

அது வந்துகொண்டிருந்த வேகத்தையும், அதன் முகத்திலிருந்த கொடூரத்தன்மையும் கண்ட அவன் இனித்தனது உயிருக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தான்!
(தொடரும்)


Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post