" மௌனம் "

" மௌனம் "


கோழிக்குஞ்சை பறிகொடுத்து விட்டு
பருந்தையே ஏறெடுத்துப் பார்க்கும்
தாய் கோழியின்
பரிதாப மௌனம்

முதுகில் கல்லெறிந்தவனை
திரும்பி நின்று பார்க்கும்
தெருநாயின்
வலியின் மௌனம்

சிரிப்புகளுக்கிடையே
விழுந்து எழும்பி
திரும்பி பார்க்கும்
சிறுமியின்
கலங்கிய மௌனம்

கழுத்து நகையை
அறுத்துக்கொண்டு ஓடுபவனை
அச்சத்தோடு பார்த்து நிற்கும்
பெண்ணின்
நடுங்கும் மௌனம்

நான்கு இளைஞர்களின்
நக்கல் வார்த்தைகளிடையே
அகப்பட்டு திரும்பும்
இளம்பெண்ணின்
ரௌத்திர மௌனம்

யாசகம் கேட்டவனை
துரத்திவிட்டு திரும்பும்
வீட்டுக்காரனை
திரும்பிப் பார்க்கும் சிறுவனின்
பசியின் மௌனம்

ரேசன் வாங்கப்போய்
காலிப் புட்டியோடு
தள்ளாடியபடி திரும்பும்
கணவனை எதிர்நோக்கும்
மனைவியின்
கண்ணீரின் மௌனம்

அந்த ஒவ்வொரு மௌனமும்
இயலாமையால்
ஒரே இடத்தில் குவிந்திருக்கும்
வார்த்தைகளின் வடிவமே...



Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post