புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா -103

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா -103



ரெங்க்மாவின்  தந்தை  சுற்றி நின்றவர்களை விலக்கிவிட்டு, உயிர் விட்டுக் கொண்டிருக்கும் மிருகத்தின் மாமிசத்தை தம் கூட்டத்தினருக்குள் எவ்வாறு பங்கிடுவது என்று யோசித்தவாறே மிருகத்தின் கழுத்துப்பகுதியில் சொருவப்பட்டிருந்த .  “க்யூரே” தடவப்பட்ட  அம்பை இழுத்தெடுத்துவிட்டு, தனது இடையில் சொருவியிருந்த கூராயுதத்தால்  பழுதுபட்டிருந்த பகுதி முழுவதையும் சுரண்டி எடுத்தார்.

தனது சிறு பிராயத்தில் வேட்டையின் மரபுகளையும், நுட்பங்களையும் ஒவ்வொன்றாக செரோக்கிக்கு சொல்லிக்கொடுத்தவர் அவர்!

“க்யுரே” கொடியையும் அதன் இலைகளையும்  வேகவைத்து  அம்புகளுக்குத் தடவும் விஷத்தை எப்படித் தயார்படுத்துவது - அதனை அம்புகளின் நுனியில் எவ்வாறு தடவுவது போன்றவற்றை செரோக்கி அவரிடமிருந்துதான் கற்றுக்கொண்டான்.

இப்போதைய அவரது நடவடிக்கை செரோக்கிக்குப் புதிதாகவிருந்ததால், அதனை  உன்னிப்பாகக்  கவனிக்கலானான்.  

அவர் தந்தருள் நின்றிருந்த திடகாத்திரமான ஓர் இளைஞனிடத்தில், எங்காவது நீர் நிலை இருக்கிக்கின்றதா என்று  பார்த்து வரச்சொன்னார். இளைஞன் தீப்பந்தம் ஏந்திக்கொண்டிருந்த தனது நண்பன் ஒருவனையும் தன்னோடு அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றவன் சிறிது நேரத்தில் வந்துசேர்ந்தான்! சற்றுத்தூரத்தில் நீர்நிலையொன்று இருகின்ற செய்தியை அவன் அவரிடத்தில் கூறினான்.

விழுந்து கிடந்த மிருகத்தைத் தனது தோளில்  சுமந்த ரெங்க்மாவின் தந்தை, சுற்றி நின்றிருந்தவர்களை விழித்து அவரைத் தொடர்ந்து வரும்படி கூறிவிட்டு, இளைஞனின் வழிகாட்டுதலில் நீர்நிலை நோக்கி நடக்கலானார்!

தான் வேட்டையாடிய மிருகத்தைச் சுமந்துகொண்டு,  நீர் நிலை நோக்கி அவர் ஏன் செல்கின்றார் என்பது  அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் பெரும் புதிராகவே இருந்தது!

இருந்தாலும் அவர்கள் ரெங்க்மாவின் தந்தையின் கட்டளையை மதித்து, அவரைப் பின்தொடர்ந்து நடக்கலாயினர்! அணியின் இறுதியில் ரெங்க்மாவை இடைகோர்த்து செரோக்கி நடந்து கொண்டிருக்க, இர்வினும் அவர்களைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தான்!

சில கணங்களில் அவர்கள் அமேசன் வனத்துக்குள்ளிருக்கும்   குளக்கரையை அடைந்தனர். அந்தக் குளத்தைச் சுற்றிவர வானுயர வளர்ந்திருந்த மரங்களை ஊடறுத்து  வெகு தூரத்திலிருந்து  மிளிர்ந்துவந்த  நிலவொளி குளத்தில் கண்ணுக்கெட்டிய தூரம்வரை படர்ந்திருந்த கொடிகளில் தாங்கியிருந்த அழகிய வண்ண மலர்களில் பட்டுத்துத் தெறித்து மலர்களை  மெருகூட்டியது.  கொடிகள் தாங்கியிருந்த பச்சைப்பசேலென்ற இலைகள் குளத்து நீரை வெளிக்குத்  தென்படாநிலையில் மறைத்து வைத்திருந்தன.

அந்தக் குளத்து நீருக்குள் யானைகள் சில இறங்கி விளையாடிக்கொண்டிருந்தன!
(தொடரும்)

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post