புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா -106

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா -106


‘மனாஸ்’ நகரிலிருந்து மாதாந்தம் வெளிவரும் “அமேசான்” சஞ்சிகையின் பிரதம ஆசிரியரான  இர்வின், வனப்பகுதி விசேட செய்தியாளருமாவான்!

உலகலாவிய ரீதியில்  கணிசமான வாசகர்களைக்  கொண்டுள்ள  இச்சஞ்சிகை, வனப்பகுதி சுற்றாடல் சம்பந்தப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மாதாந்தம் வெளிவருகின்றது!

பிரத்தியேக அலுவலகத்தில் பக்கவாக்கம் செய்யப்படும் இச்சஞ்சிகை, செரோக்கி சில காலம்  வேலை செய்துகொண்டிருந்த  அச்சகத்திலேயே அச்சிடப்படுகின்றது!

பெருந்தொகைப் பணத்தைக் கையளித்துவிட்டு தாம் எடுத்துச் சென்ற நான்கு பக்கங்களிலிருந்தும் அந்த மர்மக் குள்ளர்கள்  அப்படி என்னதான் பிரயோசனம் பெறப்போகின்றார்கள்?

எவ்வளவுதான் சிந்தித்தாலும் பதில் கிடைக்காத கேள்வியாகிவிட்ட இந்தக் கேள்விதான்  இர்வினின் மூளையை குதறிக் கூறுபோட்டுக் கொண்டிருந்தது!   

தான் செரோக்கியிடமிருந்து பெற்றுவந்த  “பொலோரைட்” நிழற்படத்தின் மத்தியில் நின்றிருந்த, ரெங்க்மாவையும் செரோக்கியையும் நீக்கிவிட்டு, மர்மக்குள்ளர்கள் மூவர் இருக்கக் கூடியதாக அதனை மறுபிரதி எடுத்துக் கொண்ட இர்வின், தனது இருசக்கர சக்தியூர்தியை “மனாஸ்” சாலையில் வேகமாச்செலுத்தி,  விமான நிலையத்தை அடைந்தான்!

தனது ஊடக அடையாள அட்டையைப் பயன்படுத்தி, இலேசாக  விமான நிலையத்தினுள் நுழைந்த அவன், அங்குள்ள ஒவ்வொரு விமான சேவை அலுவலகங்களுக்குள்ளும் நுழைந்து, தன்னிடமிருந்த நிழற்படப் பிரதியைக் காட்டி,  மர்ம மனிதர்கள்  விமானப் பற்றுச்சீட்டு பெற்றுக்கொண்டு எந்த நாட்டிற்குச் சென்றார்கள் என்பதை அறிய முற்பட்டபோதிலும், அவனுக்குத் தக்க பதில் கிடைக்கவில்லை!

ஏமாற்றத்துடன் அலுவலகம்  திரும்பிய இர்வின், அடுத்துவரும் “அமேசான்” சஞ்சிகையில்  குள்ளர்களின் புகைப்படத்தை அட்டைப்படச் செய்திப்படமாகப் பிரசுரித்து, விசேட குறிப்பொன்றையும்  வெளியிட்டான்!

அதில்,

“சில நாட்களுக்கு முன் ‘அமேசான்’ வனப்பகுதிக்கு வந்துள்ள இவர்கள், யதார்த்தமாகத் தாம் தங்கியிருந்த  பழம்பெரும் குகை ஒன்றிலிருந்த புராதன நூலொன்றிலிருந்து,  நுண்ணுயிர்  உருவாக்கத் தத்துவக்கோட்பாடொன்று  அடங்கப்பட்டிருந்த  பெறுமதிவாய்ந்த நான்கு பக்கங்களைத்  திருடிச் சென்றுள்ளனர். நூலின் அந்த நான்கு பக்கங்கள் தவிர்ந்த  முன்-பின் பக்கங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டபோது,  இக்கோட்பாட்டு  உருவாக்கம் பெறுமேயானால்   எதிர்காலத்தில்  உலகம் பெரும் சவால்களை எதிர்நோக்க நேரிடலாம்! அதனால்  இந்நபர்கள் பற்றிய தேடுதலில் ‘அமேசான் அலுவலகம்’ விளிப்புடனிருக்கின்றது!” என்றவாறாகப் பிரசுரித்தான்!

அது உலக ஊடகங்கள் அனைத்திலுமே  மறு பிரசுரமாயிற்று!

நாட்கள் சில கடந்துவிட்ட நிலையில், ‘அமேசான்’ அலுவலகத்திற்கு திடுக்கிடும் தொலைபேசி அழைப்பொன்று வந்தது!
(தொடரும்)

Vettai Email-vettai007@yahoo.co

Post a Comment

Previous Post Next Post