மத்தியபிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்-45 (வரலாறு-பாகம்-2)

மத்தியபிரதேச இஸ்லாமியக் குடியிருப்புக்கள்-45 (வரலாறு-பாகம்-2)


சிங்களக் கிராமங்கள் - 45
தெல்தொட்டையில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் பகுதிகள்   பட்டியகம,  போபிட்டிய, அம்பலமான, கிரேட்வெளி போன்ற பெருந்தோட்டங்களையும்  நவநெலிய, வாடியகம, கபடாகம போன்ற சிங்களக் கிராமங்களையும்  எல்லைகளாகக் கொண்ட பள்ளத்தாக்கில் அமைந்திருக்கின்றது.

அதன் ஆரம்பக் குடியாளர்கள் விவசாயப் பயிர்ச்செய்கையிலேயே ஈடுபட்டதாக கூறப்படினும், நாட்செல்ல கால்நடை வளர்ப்பிலும், சிறு ஏற்றுமதிப் பயிர்ச்செய்கைகளிலும்  ஈடுபட்டுள்ளனர்.   முஸ்லிம்கள் செறிவாக வாழும் பகுதிகளுள் ஒன்றாக விளங்கும் எனசல்கொல்ல என்ற பெயர் ஏலக்காய் நிறைய விளைந்த பகுதியையே குறித்து நிற்கின்றது எனலாம். “கொல்ல”  என்ற சிங்களச் சொல்  செறிவு அல்லது தோப்பு என்பதைக் குறிப்பதாகும். இப்பகுதியில் அக்காலை ஏலக்காய் நிறைய பயிரிடப்பட்டதால், எனசல்கொல்ல பெயர் பிறந்திருக்க வேண்டும். அவ்வாறே மத்திய பிரதேசத்தில் கறுவா, அதிக அளவில் பயிரிடப்பட்ட பகுதிகளாக குருந்துகொள்ள, குருந்துகஹஎல  போன்ற முஸ்லிம் கிராமங்கள் விளங்குவதைச் சுட்டிக்காட்ட முடியும்.  தொன்று தொட்டு இக்கிராமங்களில்  முஸ்லிம்கள் செறிவாக வாழ்ந்துள்ளனர். சிங்கள மன்னர்கள் காலமுதல்  பட்டியகம என்ற பெயரில் அறிமுகமாகியிருந்த தெல்தோட்டைப் பிரதேசம் 300 முதல் 400 வருட முஸ்லிம் பூர்வீகத்துடன் தொடர்புடையதாகும். ஆங்கிலேய எழுத்தாளர்  ஜோன் டொய்லியின் குறிப்புகளிலும் பட்டியகம முஸ்லிம்கள் குறித்து பின்வருமாறு எழுதப்பட்டிருக்கின்றது:

Evidence of Vadikkara Arachchi.  Among Doyly’s informants ware a Moor of Pattiyagama, who got his news from Kandambe Korale and another, said to the eyewitnesses; Karandamba Muhundiram, who learnt from a Kunam Maduve man of Veygama; Vegiriya Sattambi, an eyewitness, who informed Uda Palatha Dissawa; and Ganneywe Muhundiram, the Muhundiram of the Musicians.
(‘Sinhala and the Patriots’ 1815-1818 Notes -P.559)

கண்டிய சிங்கள மன்னர்கள் பட்டியகம பிரதேசத்தோடு நெருக்கமான தொடர்புகள் வைத்திருந்தமைக்கு கபடாகம, பட்டியகம போன்ற பூர்வீகப் பெயர்கள் சான்றாக விளங்குவதைக் குறிப்பிட வேண்டும். அக்காலை நிலம் அரசனின் சொந்த அதிகாரத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டதோடு, அவனது விருப்பத்திற்கமையவே  அவை பல பிரிவினரிடையேயும் பங்கிடப்பட்டுள்ளன.  அவை  கபடாகம, தெய்யங்கம,  விஹாரகம, விதானகம,  நிந்தகம, முத்தெட்டுவேகம   எனப்பல பெயர்களில் அழைக்கப்பட்டதுடன் அக்காலை நிலங்களின் உரித்துரிமை அரசனால் “சன்னஸ” என அழைக்கப்படும் பட்டயங்கள் மூலம் உரிமையாளர்களுக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தன.  1827ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியாளர்களால் இராசகாரிய முறை ஒழிக்கப்படும் வரையும் இந்நிலங்கள் இராசகாரிய முறையிலேயே பராமரிக்கப்பட்டு வந்துள்ளன. தற்போதும் இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் எண்பது சதவீதம் அரசாங்கத்துக்குச் சொந்தமானவையாகும். 

தெல்தொட்டையின் எல்லையோடு அமைந்திருக்கும் "கபடாகம"என்ற கிராமம் அரசனுக்குச் சொந்தமாகவிருந்த  தானியக்களஞ்சியங்கள் அமைந்த குடியிருப்புப் பகுதியாகும். 

"பட்டி" என்பது பண்ணையைக் குறிக்கும். அக்காலை அரசனுக்குச் சொந்தமான பாற்பண்ணைகள் “பட்டி” என்ற பெயரில் அழைக்கப்பட்டன. அவை தொடர்பான  சேவைத்துறைகளில்;  ஈடுபடுவோருக்காக அமைக்கப்பட்ட குடியிருப்புப் பகுதியாக பட்டியகம அமைந்துள்ளது.  பேராசிரியர் தென்னகோன் விமலானந்த வழங்கும் தகவல்களில் “பட்டி” என்பது  ஒரு தொழிற் பிரிவினரைக் குறிக்கும். அவர்கள் அரசருக்குச் சொந்தமான பண்ணைகளில் பணிபுரிவர். அப்பண்ணைகளை  மேற்பார்வை செய்பவர் “பட்டி விதான” என அழைக்கப்படுவார்” எனக் குறிப்பிடப்படுகின்றது.(நூல்: “உடரட்ட மகா கெரல்ல”)

தெல்தோட்டை முஸ்லிம்கள் நீண்ட கால வரலாற்றுக்கு உரித்துடையோராக விளங்கியோராவர் என்பது  அவர்களது  பதவி நிலைப் பெயர்களிலிருந்தும்  உறுதி செய்ய முடிகின்றது.  தெல்தொட்டையின் மூத்த குடியாளர்களுள்  அதிகமாகக் கொண்டாடப்படும் மாமூ நெய்னார், மரிக்கார் தம்பி மகள் லேகம்லாகே கெதர ஸ{லைஹா உம்மா, பட்டியகம முஹந்தரம்லா கெதர அபூபக்கர் ஆரச்சி; உதுமா லெப்பை போன்ற அதிகாரிகள் குறிப்பிடத்தக்கவர்கள். அக்காலை விருதாவலி பெற்றிருந்த  கனவான் முஹம்மது அலி என்பாருக்கு நவநெலிய பகுதியில் வழங்கப்பட்டிருந்த நிலம் மம்மதலிகே இடம் (அஆஅஙÄ;பு னைஅ) என இன்றும் வழங்கி வருகின்றது.

ஹங்குரங்கெத்த தேவாலயத்தில் வருடாந்தம் நிகழும் பெரஹராவில்  கனவான் முஹம்மத் அலி என்பார் வழங்கிய சேவைகளுக்கு பங்குரிமையாக இந்தக்காணி வழங்கப்பட்டிருக்க வேண்டுமெனக் கூறப்படுவதுண்டு.  கண்டி அரசர்கள் ஹங்குராங்கெத்த தேவாலயத்துக்குச் செல்லும் மார்க்கத்தோடு இணைந்ததாக தெல்தோட்டை அமைந்திருப்பதிலிருந்து அதன் ஆரம்பக் குடியாளர்கள் அரசனின் அனுசரணை பெற்றவர்கள் எனக்கருதலாம். 

ஆங்கிலேயர் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அரசன் ஸ்ரீவிக்ரம இராசசிங்கன் மறைந்திருந்த இடத்தைத் தேடி அறிவதற்காக தளபதி கேர்னல் பேலி தலைமையில் ஒரு படைப்பிரிவு கலஹா- தெல்தொட்டை மார்க்கமாக ஹங்குராங்கெத்தையை நோக்கிப் புறப்பட்டதாகவும் கூறப்படுவதுண்டு. அப்படைப்பிரிவு உனந்தன்னை என்ற இடத்தை அடைந்தபோது, சிங்கள மக்களது சேனையொன்று குடாரால என்பவரின் தலைமையில் வழிமறிக்கப்பட்டுத் துவம்சம் செய்யப் பட்டதாக குறிப்புக்கள் கூறுகின்றன. (லங்காதீப - 2012.01.10)

தெல்தொட்டையின் ஆரம்பக் குடியாளர்கள் பலரின் முதன்நிலைப் பெயர்களிலிருந்து  அவர்களது   நீண்டகால இருப்பையும் சமூக அந்தஸ்தையும் உறுதி செய்ய முடிவது சிறப்பானதாகும்.

அவற்றுள்,
கோணாகொட கல்பொத்தேகெதர அப்துல் காதிர் உமர் முஹிதீன்  வெல்முலாதானி. (வட்ட விதான)
முகந்திரம்லாகெதர அபூபக்கர் ஆரச்சி உஸ்மான் லெப்பை
மரிக்கார் தம்பி மகலேகம்லாகெதர
குப்பக்கண்டு அடப்பயலாகெதர
உடியரால கெதர
அராவே கெதர
தன்னே வலவ்வகெதர
பொல்கொல்லேகெதர
வெல்லஸ்ஸகெதர
பிடிதன்னேகெதர
மஹவத்தேகெதர
கலஹிடியாவேகெதர
முகந்தரம்லாகெதர
மொட்டாவேகெதர
புவக்கெடியே கெதர
கல்கெடியே கெதர
பிஹில்லகாவ கெதர
கல்பொத்தே கெதர
ரவன்ஒயா கெதர
கொரககஹ யட கெதர

"கெதர" எனப்பெயர்பெற்ற பதிவாளர்கள் பிரதேசத்தின் நீண்டகால இருப்புக்கு உரித்துடையவர்களாவர்.   பிரதேசத்தின் ஆரம்பக் குடியாளர்கள் குறித்து  உறுதி செய்யும் ஆவணங்கள் கிடைக்கப் பெறாதபோதும்  அவர்களுள் ஒரு பிரிவினர் கடைசி கண்டி அரசன்  ஸ்ரீவிக்ரம இராசசிங்கனால் குடியமர்த்தப்பட்டவர்களெனப் பேசப்படுவதுண்டு. அவர்களுள் முதன்மை பெற்று விளங்குவோர் மாமு நெய்னார்  குடும்பத்தவர்களாவர்.

தென்னிந்தியா காயல்பட்டணத்தைச் சேர்ந்த மா.மு. நெய்னார் குடும்பத்தவர்கள்  கண்டி அரசனின் ஆஸ்தான மருத்துவர்களாகப் பணிபுரிந்த பெருமைக்குரியவர்கள். மன்னனின் வைத்திய ஆலோசகராக விளங்கிய கனவான் மாமு நெய்னார் என்பாருக்கு நன்றிக்கடனாக வழங்கிய நிலப்பகுதியே "பட்டியகம" என அழைக்கப்படுவதோடு, அரசனால் வழங்கப்பட்ட ஆரம்ப நிலங்கள் பட்டியகம, பள்ளேகம  என்னுமிடத்தில் அமைந்துள்ள மொட்டாவ மலைப்பகுதி எனவும் மூத்த குடியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.   அரசனால் வழங்கப்பட்ட அந்நிலப்பரப்புக்களது பகுதியே  பள்ளேகம, உடகம, கபடாகம என்ற பெயர்களில் இன்றும் அழைக்கப்பட்டு வருகின்றன.  பிரதேசத்தில் முதலில் குடியேறிய கனவான்  தனது மூத்த குமாரர் அஹ்மத் லெப்பை என்பாருக்கு  ரலிமங்கொடையையும், இரண்டாவது குமாரருக்கு பள்ளேகமையையும், தனது சகோதரரின் குமாரருக்கு "விடாபத்த"  என்னும் பகுதியையும் வழங்கியதாகவும் செவிவழிச் செய்திகள் பேசப்படுவதுண்டு. 

கனவான் மா.மு. நெய்னார் கண்டி வாவியை அமைப்பதற்கும் அரசருக்கு ஆலோசனை  வழங்கியவர்களுள் ஒருவர் எனக்கருதப்படுகின்றார். அன்னாருக்கு   அரசனால் வழங்கப்பட்டிருந்த செப்புப்பட்டயம்  பற்றி மூத்த எழுத்தாளர் கலாபூஷணம் அல்ஹாஜ் எஸ். எம். ஏ. ஹஸன், ஜனாதிபதி விருது பெற்ற புரவலர், தேசகீர்த்தி வை. எம். இப்றாஹீம் ஹாஜியார் போன்றவர்களாலும் பேசப்பட்டபோதும், குறிப்பிடப்பட்ட பட்டயம் குறித்து மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளமுடியவில்லை. 

கண்டி வாவி ஆரம்பத்தில் போகம்பரை மைதானத்தைச் சுற்றிப் பாயும் "லுனுமடலாவே" நீரோடையை மறித்து நிர்மாணிக்கப்பட்டிருந்தது. மகாபிரதானி  பிலிமதாவையின்  (மறைவு 1811 ஓகஸ்ட் 26) மருமகன் எஹலேபொலையின் மனைவியும்  அவ்வாவியிலேயே மூழ்கடிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.

நாட்செல்ல வாவி அழிக்கப்பட்டு பெரும் வயல் நிலமாக விளங்கிய புதிய நிலப்பரப்பில் கண்டியின் இன்றைய வாவி 1806ம் ஆண்டு அமைக்கப்பட்டிருக்கின்றது. புதிய வாவியிலிருந்து வெளியேறும் நீரை மறித்து அமைக்கப்பட்டிருந்த உபவாவி அமைக்கப்பட்டிருந்த நிலப்பரப்பிலேயே கண்டியின் இன்றைய மத்திய சந்தை நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது.

பள்ளேகமையிலிருந்து ஆரம்பமாகிய முஸ்லிம் குடியிருப்புக்கள்  நாளடைவில் பத்தாம்பள்ளி, கோணாங்கொட, நவநெலிய பகுதிகளுக்கும், பின்னர் ரலிமங்கொட, உடபிடிய, வட்டகேபொத்த, பீலிக்கரை, மெதகெகில, எனசல்கொல்ல, போபிட்டிய, அரக்குவல்ல, வனஹபுவ, முஸ்லிம் கொலனி, தெல்தொட்டை நகர்ப் பகுதிகள் வரையும்  விஸ்தீரணமடைந்துள்ளன. தெல்தோட்டையில்  முஸ்லிம் பூர்வீகம் பற்றிய எழுத்தாவணங்கள் கிடைக்கப் பெறாதபோதும் 1881ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பிலிருந்து  அங்கு 1317 பேர்  வாழ்ந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது. அவர்களுள் உடுதெனிய மெடிகேயில் வாழ்ந்த 177 முஸ்லிம்களும் அடங்குவர். 1901ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட  சனத்தொகைக் கணிப்பில் பள்ளேகமையில் 414 முஸ்லிம்களும் உடகமையில் 267 முஸ்லிம்களும் வாழ்ந்தனர் என அரசாங்க ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1989ம் ஆண்டுகளைத் தொடர்ந்து கிராம அதிகாரிப் பிரிவுகள் மறுசீரமைக்குள்ளானதால் பிரதேசத்தின் எண்ணிக்கை  விபரங்கள் சிதறிச்சென்றிருப்பபது வருந்துதற்குரியது.  2006ம் ஆண்டைய உத்தேச கணக்கெடுப்பில் பள்ளேகம மொத்த சனத்தொகை 1124ஆக இருந்தது.  அவர்களுள் 931 பேர் முஸ்லிம்களாவர்.

சமீபத்திய புள்ளி விபரங்களிலிருந்து தெல்தோட்டைக் கிராமங்களில் பின்வரும் எண்ணிக்கையினராக முஸ்லிம்கள் வாழுகின்றர்; என ஆவணங்கள் மூலம் உறுதி செய்ய முடிகின்றது.
கிராம அதிகாரிப் பிரிவு   ஆண்               பெண்
உடதெல்தொட்டை            052                  093 
பாளுகம                                002                  002
கலஹா                                  397                  433
சதுன்வெல்ல                       131                     126
பேரவத்த கிழக்கு                003                  002
பேரவத்த மேற்கு                 002                  002
பட்டியகம-பள்ளேகம         634                  656
வடகேபொத்த                     377                   411
வனஹபுவ                            431                   455
மெதகெகில                          567                  564
போபிடிய நகர்                     083                   100
பட்டியகம-உடகம               315                    335
கோணங்கொட                   237                  260
கரகஸ்கட வடக்கு               304                 370
கரகஸ்கட தெற்கு                649                 685
கிரேட்வெலிய                      119                    201
கபடாகம                                000                 001

 தெல்தொட்டை செயலகப் பிரிவுக்குட்பட்ட இருபத்தொன்பது கிராம அதிகாரிப் பிரிவுகளுள் முஸ்லிம் கிராம அதிகாரிகள் ஆறு  பேர் பணிபுரிந்து வருகின்றனர். பிரதேசத்தில் முஸ்லிம்கள் முதலில் குடியேறிய பள்ளேகம கிராமம் மலபட்டஒய நீரோடைக்கரையில் அமைந்திருக்கின்றது. அந்நீரோடை போபிட்டிய குரூப் பெருந்தோட்டப் பகுதியிலிருந்து ஊற்றெடுத்து வனஹபுவ, பள்ளேகம ஊடாக ஹங்குரங்கெத்தையில்  மகாஓயாவுடன் சங்கமமாகின்றது.
(தொடரும்)

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post