புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா -108

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா -108


அமெரிக்க – ஐரோப்பா நேசநாடுகள் ஒன்றின் விமான நிலையம் வந்தடைந்த குள்ளர்கள் மூவரும்  தத்தமது வசிப்பிடங்களுக்குச் சென்று, நாட்கணக்காக “அமேசான்” வனப்பகுதியில் அலைந்து திரிந்த  களைப்புத்தீர நன்றாக உறங்கி, மறுநாள் காலையில்  தமது ஆய்வு மையம் நோக்கி வந்தார்கள்!

காலையில்  ‘நுண்ணுயிர் ஆய்வு மையம்’ விறுவிறுப்பாக இயங்கத் தொடங்கியது! அங்கு பணிபுரிவோர் தமது அலுவல்களில் மிகவும் விறுவிறுப்பாக ஈடுபடத்தொடங்கினர்.  

குள்ளர்களோடு இணைந்து மையத்தில் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒரு பெண் ஆய்வாளர், அன்றைய தினச்செய்திகளைப் பார்ப்பதற்காக, ஆய்வு நிலையத்தின்  வாசகபீடத்துக்குள்   நுழைந்தவேளை அங்கிருந்த  “அமேசான்” சஞ்சிகைமுகப்பில்  தம்மோடு இணைந்து பயிற்சிபெறும் மூவரையும் கண்டதும் திடுக்கிட்டார்!

வேற்று நாடொன்றைச் சேர்ந்த அவர்கள், சில வாரங்களுக்கு முன்புதான்  விடுமுறையில் சென்றார்கள். உலகப் பிரசித்திபெற்ற பூகோள சுற்றாடல் சம்பந்தப்பட்ட சஞ்சிகையின் முகப்பில் அவர்களது படம் ஏன்? – எவ்வாறு? பிரசுரமாகியது  என்பது அந்தப் பெண் ஆய்வாளருக்குப் புதுமையாக இருந்தது. மேலதிக தகவல்களை  அறிந்துகொள்ளும் ஆர்வத்தில்  சஞ்சிகையின் உட்பக்கங்களுக்குள்  ஊடுறுவிய அவரால்,   அந்த மூவரும்  அமேசான் வனப்பகுதிக்குச் சென்று வந்துள்ள  விடயம் அப்போதுதான் தெரிய வந்தது!

விரைந்து செயற்பட்ட அவர், சஞ்சிகையில் குறிப்பிட்டிருந்ததற்கேற்ப சஞ்சிகை  அலுவலக ஆசிரியர் பீடத்துக்கு  அழைப்பொன்றை ஏற்படுத்தி, முகப்புப்படத்திலுள்ளவர்கள்  நுண்ணுயிர் ஆய்வு மையமொன்றில் தம்மோடு  பயிற்சி பெற்றுவருபவர்கள் என்ற  செய்தியைக்  கூறிவிட்டு, திடுதிப்பென அழைப்பினைத் துண்டித்துவிட்டார்.

தம்மோடு பயிற்சி பெற்றுவரும் அந்த வேற்று நாட்டவர்கள் பற்றி எதோ ஒருவகையில் சந்தேகம் கொண்ட அந்தப் பெண் ஆய்வாளரது மூளை விவேகமாக வேலை செய்யவே   அவர்கள் சஞ்சிகையைப்  பார்த்துவிடக்கூடாது என்ற நினைப்பில், புறம்பாக வைக்கப்பட்டிருந்த அதே சஞ்சிகைகளின் பழைய பிரதிகளின் கட்டுக்குள் இந்தப் புதிய  இதழை ஒழித்து வைத்து விட்டார்!

அட்டைப்படச் செய்திப்படமாகப் பிரசுரிக்கப்பட்டிருந்த குள்ளர்கள் எங்கோ ஓரிடத்திலுள்ள நுண்ணுயிர் ஆய்வு மையமொன்றில் பயிற்சிபெறுகின்றனர் என்ற தகவல்  மாத்திரமே இர்வினுக்குக் கிடைத்தபோதிலும்,  அந்த  அழைப்பு  எந்த நாட்டிலிருந்து வந்தது என்ற விபரத்தை  அவனால் அறிய முடியாதிருந்தது!

செரோக்கியின் தாய் தந்த மூலிகைக் காஞ்சினை ‘மடக் மடக்’ எனக் குடித்துவிட்டு, தனது நண்பனோடு வனத்துக்குச்  சென்று கொண்டிருந்த வேளையிலும்  இர்வினிடத்தில்  அந்தக்குள்ளர்கள் பற்றிய நினைப்புத்தான் மேலோங்கியிருந்தது!

செரோக்கியும் அவனது தந்தையும்  வனப்பகுதியில்  எவ்வாறான எச்சங்களையும், மூலிகைகளையும் திரட்டுகின்றார்கள் என்பதை நேரடியாகப்  பார்ப்பதில் இர்வின் கொண்டிருந்த ஆர்வம் தன்னையும்  அவர்களோடிணைந்து வனத்துக்குள் செல்ல வைத்தது!

காலாகாலமாகத் தமது மூதாதையர்களின் வழிகாட்டலைச் சிரமேலேற்று, செரோக்கியும் அவனது தந்தையும் தாம்  வனத்துக்குள் எதிர்நோக்கும் பல்வேறு இடர்களையும் துன்பங்களையும் துச்சமெனமதித்து, அங்கிருந்து  திரட்டிவரும் எச்சங்கள் - மூலிகைகளுக்கும், அந்தக் குள்ளர்கள் எடுத்துச்சென்ற நான்கு பக்கங்களில்  அடங்கப்பட்டிருந்த தகவல்களுக்குமிடையில் ஏதோவொருவகையில் தொடர்பிருப்பதை இர்வினின்  உள்மனம்  உணர்ந்தது!

அதுவுமல்லாது குள்ளர்கள் இரகசியமாக எடுத்துச் சென்ற அந்தப்புராதன நூலிலிருந்த நான்கு பக்கங்களில் அடங்கியிருந்த  தகவல்களின் முக்கியத்துவத்தை, அவர்கள் செரோக்கிக்குக் கொடுத்துச்சென்ற பெறுமதிவாய்ந்த கட்டு நாணயத்தாள்களிருந்தும் அவனால் உணர முடிந்தது!

இவ்வாறு பல்வேறு கோணங்களிலும் தனது சிந்தனையைச் சிதறவிட்டபடி,  இர்வின் செரோக்கியையும் அவனது தந்தையும் பின்தொடர்ந்தவனாக,  வனத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தான்!
(தொடரும்)  

வேட்டை 
E-mail; vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post