கம்பராமாயணம் குறள் வெண்பா முயற்சி-13

கம்பராமாயணம் குறள் வெண்பா முயற்சி-13


வாலியைப்போருக்குஅழைத்தல்
வாலியே! போர்செய்ய வந்துவிடு! சுக்ரீவன்
கூவியே ஆர்ப்பரித்தான் அங்கு.

அழைப்பினைக் கேட்டதும் வாலியோ பொங்கி
மலைபோல் எழுந்தான் சினந்து.

ஆலகால நஞ்சுபோல தோற்றம் உருப்பெற
வாலி புறப்பட்டான் போர்க்கு.

வாலியைத்தாரைதடுத்தல்
வாலியைத் தாரை தடுக்க முயற்சித்தாள்!
கேலியாய்ப் பார்த்தான் நகைத்து.

என்றென்றும் வெற்றி உனக்குத்தான் என்றறிந்தும்
தம்பி அழைப்பதேன்? சொல்.

உன்னையும் வெல்லும் பெருந்துணை பெற்றுவிட்டான்
என்றுரைத்தே எச்சரித்தாள் மாது.

வாலியின்ஆற்றல்
பாற்கடலில் தேவர் அசுரர்கள் சோர்ந்தேதான்
ஊக்கமின்றி நின்றார் திகைத்து.

ஊக்கமுடன் நானங்கே பாற்கடலைக் கிண்டிய
ஆற்றலை யார்மறுப்பார் சொல்.

தோற்பதை வாலி வரலாற்றில் எப்படியும்
ஏற்க முடியுமா ?சொல்.

போரிட வந்தால்  வருவோரின் ஆற்றலில்
பாதி எனக்குவரும் பார்.

பண்பரசி! வென்று வருவேன்நான்!  தாரைக்கே
அன்புரை சொன்னான் நிமிர்ந்து.

" இராமன்" சுக்ரீவனுக்குத்துணை
தாரைகூறுகின்றாள்
உன்னுயிரை மாய்க்க இராமனை உன்தம்பி
தன்துணையாய்ப் பெற்றசேதி உண்டு.

வாலிமறுத்தல்
பண்பரசன் ராமனா சுக்ரீவன்கூட்டணியில்?
அன்பகமே! செய்தி தவறு.

அம்பினை வீணாய்த் தொடுக்கமாட்டான் என்றுரைத்தான்!
கண்மணி நொந்தாள் துடித்து.

வாலி-- சுக்ரீவன்போர்
வேருடன் மாமரத்தைத் தூக்கி அடித்தனராம்!
பார்ப்போர் நடுங்கினராம் வேர்த்து..

மாமலையைத் தூக்கி எறிந்தனராம்! தாக்கினராம்!
போரிட்ட கோலமிது கேள்.

சுக்ரீவன்ராமனிடம்ஓடிவருதல்
தாங்காமல் சுக்ரீவன் ராமனிடம் ஓடிவந்தான்!
ஏங்கினான் மூச்சிரைத்து நின்று.

ராமனின்தந்திரம்
தோற்றத்தில் உங்களுக்குள் வேறுபாடு காண்பதற்குச்
சூட்டு கொடிப்பூவை நீ.

காற்றென போரிட வாலியிடம் செல்லென்றான்
கூற்றெனச் சென்றான் குதித்து.

வாலியின்மார்பில்இராமபாணம்
சுக்ரீவன் மேனி துடிதுடிக்க குத்தினான்!
உக்கிரமாய்த் தூக்கினான் நின்று!

சற்று மறைந்திருந்த ராமனோ அம்பினை
விட்டானே வாலியின் மீது.

வாழைப் பழந்தன்னில் ஊசிபோல வாலியின் 
மார்பில் நுழைந்ததே அம்பு.

ராமபாணந் தன்னை நுழையாமல்  பற்றிய
வாலியோ வீழ்ந்தான் பிடித்து.

நிலைகுலைய வைத்த கணையெதுவோ என்றே
கலங்கித் தவித்திருந்தான் காண்.

வாலி பெயர்த்தெடுத்தான்! அம்பில்  பொறித்தபெயர்
ஊரறிய  பார்த்தான் விழைந்து.

ராமன் பெயர்தன்னை அக்கணையோ ஓவியமாய்
ஏந்தியதைக் கண்டான் வியந்து.
(தொடரும்)
Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post