கம்பராமாயணம் குறள் வெண்பா முயற்சி-14

கம்பராமாயணம் குறள் வெண்பா முயற்சி-14


இராமன்செயல்குறித்துவாலிநாணுதல்

தந்தையைத் தாயை மதித்தேதான் காடேகி
வந்த இராமனைப் பார்.

தன்னுள்ளே எள்ளல் சிரிப்பாக வந்தபோதும்
நொந்துபோய் வெட்கினான் அங்கு.

வாலியின்துயரநிலை

இதுவும் ஒருவகை போர்த்தருமம் போலும்
வெறுப்பில் முணங்கினான் கேள்.

நடுங்கவைக்கும் வேழமொன்று சிக்கிவிட்ட கோலம்!
கடுந்துயரம் ஏற்றான் தளர்ந்து.

வாலியின்முன்இராமன்

புண்பட்ட வாலியின்முன் ராமனே வந்துநின்றான்!
பொங்கிவந்த கேள்விகளைக் கேள்.

மனங்கவர் ராமனே என்னசெய் கின்றாய்?
வினவினான் வாலி வெகுண்டு.

தீமையைத் தன்னலத்தால் செய்துவிட்டால் நன்மையாய்
தீமைதான் மாறிடுமோ? சொல்.

பிறப்பால் உயர்ந்தோன்! படிப்பால் உயர்ந்தோன்!
தடம்புரண்ட தேனோ உரை.

கசங்கவைத்தாய் நீதிக் கொடியைத்தான்! அய்யோ!
இடறுதே உன்மதிப்பு தான்.

மனைவியை நீயோ பிரிந்துவிட்ட சோகம்
மனசாட்சி தூங்கியதோ சொல்?
.
சற்றும் உணராமல் சிந்தைத டுமாற
கற்றவனே மாறிவிட்டாய் நீ.

ராவணன் சீதையைக் கொண்டுசென்றான்!  என்பங்கு
ஏதும் இதிலுண்டோ ?சொல்.

தொடர்பற்ற என்னைநீ போர்க்களத்தில் கொல்வதேன்?
கபடமன்றி வேறென்ன?சொல்.

அருளை இரக்கத்தை எங்கே புதைத்தாய்?
கரும்புள்ளி கொண்டதுன் பண்பு.

வலியோர் மெலியோரை வாட்டி வதைத்திட்டால்
பழிவந்து சேராதோ சொல்.

வாலியின்முன்இராமன்

உனக்குரிய நல்லரசை தம்பி பரதன்
மனதார ஆள்வதற்குத் தந்து

குணக்குன்றாய் மாறியது நல்லதுதான்! ஆனால்
எனக்குப் பொருந்துமா கூறு.

என்னை அழித்துவிட்டே என்நாட்டை என்தம்பி
இங்காள வைக்கின்றாய் ஏன்?

நடைமுறைக்கு மாறா கஇம்முறையை ஏனோ
அடர்வனத்தில் கொண்டுவந்தாய்? கூறு.

மறைந்திருந்தே அம்பைத் தொடுத்துவிட்டாய் என்மேல்!
அறவழி விட்டகன்றாய்  நீ.

நன்னெறியை மீறிவிட்டான் ராவணன் என்றுசொல்ல
உன்மனம் கூசவில்லை யா?

இருவரையும் கேட்டு நடுநிலை தீர்ப்பை
தருவதே நல்லறம் பார்.

மனைவியைக் கொண்டுசென்ற வஞ்சகனைக் கொன்று
மனைவியை மீட்கவேண்டும் நீ.

அத்தகைய வீரமற்ற உன்கரத்தில் வில்லேனோ?
என்றும் பழிசுமந்தாய் பார்.

நாகரிக மன்பதையின் வாழ்வியல் வேறாகும்!
காடகத்து வாழ்வியல் வேறு.

உங்களது கோட்பாட்டை எங்களுக்கு ஈடாக்கும்
உன்முறை தப்புதான் சாற்று.

ஈரமனம் கொண்டேதான் ராமனும் கேட்டுவிட்டுச்
சாரமுடன் பேசினான் கேள்.

மாயாவி என்னும் அரக்கன் உனையெதிர்த்தான்
வேழமெனச் சென்றாய் தொடர்ந்து.

குகைக்குள்ளே சென்ற நீநீண்டகாலம் காணோம்!
பதைத்தது நாடுதான் பார்.

தான்சென்று பார்க்க விரும்பினான் சுக்ரீவன்!
சான்றோர் தடுத்தனர் அங்கு

நாடோ அரசனின்றித் தத்தளிக்கும் !போகவேண்டாம்!
நாடாள வேண்டுமென்றார்  சூழ்ந்து.

"அண்ணனைக் கொன்றவனைக் கொன்றுவிட்டு நானிறப்பேன்",
தம்பியின் சூளுரைதான் கேள்

அண்ணனின்றிநான்மட்டும்வேந்தனாகும்சிந்தனையை
எண்ணமாட்டேன்என்றான்மறுத்து.

வற்புறுத்தல் தம்பியின் எண்ணத்தை மாற்றியது!
பற்றற்றே ஏற்றான் அரசு.

அரக்கனைக் கொன்றுவிட்டுவந்தாய்!  மகிழ்ந்தான்!
விளக்கி வணங்கினான் அங்கு.

தஞ்சமென்று சொல்லியும் தம்பியை நம்பாமல் 
வஞ்சினம் கொண்டெழுந்தாய் நீ.

சுட்டெரிக்கும் சாப ருசியமுக பர்வதத்துள்
சுக்ரீவன் சென்றான் ஒளிந்து.

விட்டுவிட்டாய்! போரைத் தொடரவில்லை!  வாழ்கின்றான்
சுக்ரீவன் தப்பித்தான் இங்கு.

அகவாழ்வில்  வேறொருவன் இல்லாளை இங்கே
அபகரித்தல் பண்பாமோ சொல்.

முற்றும் முறைகேடாய் எண்ணி நடந்துவிட்டாய்!
நெற்றியடி போலுரைத்தான் நின்று.

முறையின்றி உன்னுடைய தாரமாய் ஆக்கித்
தடம்புரண்டு நிற்பதோ? கூறு.

வலிமை குறைந்தவரைக் காப்பதே என்றன்
தெளிவான நோக்கமென்றான் பார்த்து.
(தொடரும்)


வேட்டை 
E-mail; vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post