கம்பராமாயணம் குறள் வெண்பா முயற்சி-16

கம்பராமாயணம் குறள் வெண்பா முயற்சி-16


மனைவிதாரைபுலம்புதல்

குழலும் விளரியும் யாழ்மற்றும் வீணை
ஒலிகளே நாணின கேட்டு.
களத்தில் கிடக்கின்ற வாலி உடலைத்
தழுவிப் புலம்புகின்றாள் மாது.

சுக்ரீவனுக்குமுடிசூட்டுதல்
அந்தணர்கள் வாழ்த்திசைக்க ஆசி வழங்கிட
தம்பி இலக்குவன் அங்கு
மணிமகுடம் சூட்டினான் சுக்ரீ வனுக்கு
வணங்கினான் ராமனைத் தொட்டு.

சுந்தர காண்டம்
அலைகடலைத் தாண்ட அனுமன் மகிழ்ந்து
மலைபோல நின்றான் நிமிர்ந்து.

அங்கதனும் ஜாம்பவானும் மற்றவரும் விண்ணவரும்
அங்கே மலர்சொரிந்தார் பார்.

மைநாகம் குன்றின் வரவேற்பை ஏற்று 
மகிழ்வித்துச் சென்றான் விரைந்து.

சுரசை வதம்செய்து அக்கடலைத் தாண்டி
இலங்கைக்குள் சென்றான் பறந்து.

இடர்தந்த தேவதையைத் தண்டித்து, வந்த
கடமையில் மூழ்கினான் காண்.

அங்குமிங்கும் சீதையைத் தேடி அலைந்திருந்தான்!
எங்கிருப்பாள்?ஏங்கினான் பார்த்து.

அசோக வனத்துள் நுழைந்தான் அனுமன்!
பார்த்தான் பரவசம் பெற்று.

சிம்சுபா என்னும் மரத்தடியில் சீதையைக்
கண்டான் மெய்மறந்தான் பார்த்து.

கணையாழி தந்தான்! இராமனைப் பற்றி
அனைத்தையும் சொன்னான் திளைத்து.

சீதையின் கண்ணீரைக் கண்டு துடித்திருந்தான்!
வேகமாய்க் கொண்டான் சினம்.

சூடா மணியை வணங்கித்தான் வாங்கினான்!
சூசகமாய்ச் சென்றான் உடைந்து.

அந்த அசோகவனம் சின்னாபின்ன மாகித்தான்
கண்டது பேரழிவைத் தான்.

இதைக்கேட்டு ராவணண் அனுமனின் வாலில்
உடன்வைக்கச் சொன்னான் நெருப்பு.

பற்றவைத்த நெருப்பால் இலங்கைக்குத் தீவைத்தான்!
பற்றி எரிந்தது நாடு.

விண்ணில்  பறந்தான் இராமனை நாடித்தான்!
மண்னகத்தில் நின்றான் மகிழ்ந்து.

கண்டேனே சீதையை என்றான் இராமனிடம்
நின்று வணங்கி பணிந்து.

வைதேகி சூடா மணிதன்னை ராமனிடம்
பவ்வியமாய்த் தந்தான் மகிழ்ந்து.

அனுமனை ராமனங்கே ஆரத் தழுவி
தன்நன்றி காட்டினான் பார்.

சீதையை மீட்க இராமன் தயாரானான்!
ஆரவாரப் பேரொலிதான் அங்கு.

யுத்தகாண்டம் 
இராவணன்மந்திராலோசனை
அழிந்த இலங்கை நகரை மயனோ
எழில்நகராய் மாற்றினான் பார்.

பேரிழப்பைச் சந்திக்கும் தந்திரத்தைக் கூறுங்கள்!
ஆர்ப்பரித்தான் ராவணன் அங்கு.

படையெடுப்போம்! கொன்று குவித்திடுவோம்! மன்னா!
விடைகொடு செல்வோம் உடன்.

மாற்றான் மனைவியைத் தொட்டதால் பேரிழப்பு!
தூற்றினான் கும்பகர்ணன்! நின்று.

மனமிரங்கி சீதையை விட்டுவிடு! இல்லை
தினவெடுக்கும்  நம்பகைவர் சேர்ந்தே
அனலாகும் முன்பே அவர்களைத் தாக்கி
மணலாக்கு என்றான் துணிந்து.

இந்திரசித் முன்வந்தான் !போருக்கு நான்தயார்
என்னை அனுப்பென்றான் ஆர்த்து.

வீடணன் நின்றே குரங்கால் அழியவில்லை
நாடழிந்த காரணத்தைக் கேள்.

கற்புநெறி நாட்டை அழித்தது! அண்ணாநீ
போதை மயக்கம் தெளி.

அண்ணன் இராவணா! சீதையை விட்டுவிடு
நம்நாட்டைக் காப்பாற்றப் பார்.

அந்த மனிதர்கள் வெல்வார்! உணர்ந்தேதான்
பண்படப் பாரென்றான் பார்த்து.

சினத்தால் கடிந்தான் இராவணன்! மேலும்
கனன்றான் கடுஞ்சொற்கள் கொண்டு.

மானிட வலிமையை உணராத ராவணன்
வாலி வரம்பெற்ற காரணத்தால் என்வலிமை
வாலியிடம் பாதிசென்ற தே..

அதனால்நான் தோற்றேன்! மீண்டும்நான் தோற்கும்
நடைமுறை இல்லை உணர்.

ராமனின் வில்லாற்றல் கேள்
ராமனும் வாலி வரத்தால் மறைந்திருந்து 
பூமியில் கொன்றான்பார் இங்கு.

சிவனின் உடைந்தவில்லை மீண்டும் உடைத்தான்!
இவனது வில்லாற்றல் இஃது.

ஓட்டை மராமரத்தில் அம்புகளைப் பாய்ச்சினான்!
ஆற்றலென்று சொல்வாயா கூறு?

கூனியின் சூழ்ச்சியால் நாடிழந்தான்! என்னாலே
தானிழந்தான் இல்லாளை இங்கு.

இந்த மனிதனின் வலிமையை உன்னையன்றி
இங்குயார் மெச்சுவார் சொல்?

வீடணன் கூற்று
இரண்யன் பிரகலாதன் காதையைக் கூறி
அறநெறியே வெல்லுமென்றான் நின்று.

இராவணன் சினம்
தந்தையைக் கொன்றே அரசனானான் மைந்தன்!
நன்றாகச் சொன்னாய் கதை.

என்னைநீ கொன்றே அரசனாக எண்ணுகின்றாய்!
என்முன்னே நிற்காதே ஓடு!

என்முன்னே நிற்காதே! வீடணனே! சென்றுவிடு!
என்றான் இளவலைப் பார்த்து.
(தொடரும்)


Post a Comment

Previous Post Next Post