புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா -110

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா -110


கல்லடிவாரத்தில் செரோக்கி முதலில் காலடி வைத்தான். அவனைத் தொடர்ந்து விளுதைவிட்டும் நிலத்தில் இறங்கிய  இர்வின், தனக்குப் பரிச்சயமில்லாத புது நிலமொன்றில்  கால் பதித்ததை உணர்ந்தான்!

அவனுக்கு அடுத்தபடியாக செரோக்கியின் தந்தை மெதுமெதுவாகத்  தரையைத்  தொட்டார்.

இர்வினுக்கு இந்த நிகழ்வு,  தான் வேற்றுக்கிரகமொன்றில் கால்பதிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது!  நீல்ஆம்ஸ்ட்ரோங் தனது சகாக்கள் இருவருடனும்  நிலவில் காலடி வைத்த நினைவை அது அவனுக்கு உணர்த்தியது!

அந்த வரலாற்றுப் புகழ்மிக்க நிகழ்வு, தான்  பிறந்த நாளன்று நிகழ்ந்ததாக அவனது பெற்றோர் பெருமைப்படக் கூறிக்கொள்வர். இர்வின் தனது பட்டப்படிப்பின்போது, வேற்றுக்கிரகங்கள் பற்றிய பாடவிதானத்தில், சந்திரனில் மனிதன் காலடி வைத்தது பற்றி படித்தது கூட  அவனுக்கு  நன்றாக நினைவிருக்கின்றது!

தூரத்தில் தெரிகின்ற சந்திரனைக்காட்டி, அதில் மனிதன் காலடி வைத்துவிட்டு, மறுபடி பூமிக்குத்  திரும்பி வந்தான் என்பதை  செரோக்கியிடம் கூறினால்,  அதனை அவன் ஒருபோதும் நம்பப்போவதில்லை! கிணற்றுத் தவளை போன்றதொரு வனவாழ்க்கையில்,   தமக்கருகில் இருப்பதைத்தவிர  தூரத்தில் இருப்பவைகள் பற்றிய சிந்தனைப்போக்கில்லாமல் வாழ்கின்ற அற்புதமானதோர் வாழ்க்கையைத்தான் இர்வின் இந்தக் கானகத்து மனிதர்களிடம் காண்கின்றான்!

இவ்வாறான  வாழ்க்கையிலிருந்து தனது நண்பன் செரோக்கியைப்  படிப்படியாக மீட்டெடுத்து சிறிது தூரம்  வந்துவிட்டதில் தான்  ஓரளவிற்கு வெற்றிகண்டுவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் இர்வின்,   தனது இலக்கை நோக்கி மேலும் முன்னோக்கிச் சென்றால் ஒட்டுமொத்த வனவாசிகளையும் நவீனத்து நகர வாழ்க்கையின் பக்கம்  திருப்பிவிடலாம் என்று நம்பிக்கை கொண்டிருக்கின்றான்!

கல்லடிவாரத்தில் தரையிறங்கிய மூவரும், நிலத்தில் விரவிக்கிடக்கும் பொன்னிறச் சறுகுகளில் காலடி வைத்தபடி  நடந்து, பெரியவர்  தியானத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மரத்தடியை அடைந்தனர்!

அன்றைய தியானத்தின் இறுதி நிலைக்கு வந்திருந்த  பெரியவர், தான்  கண் விழித்துப் பார்த்தபோது, அங்கே செரோக்கியும், அவனோடு கூடவந்திருந்த  இருவரும்  நின்று கொண்டிருப்பதைக் கண்டார்.

“வா குழந்தாய், வா...”

‘நல்லது பெரியவரே!’ என்பதுபோல் பணிவாகத் தலையசைத்தான் செரோக்கி!

“நீயும் அப்படி அமர்ந்து... உன்னோடு  வந்திருப்பவர்களையும் அமரச்செய்!” என்றார் பெரியவர்.

மூவரையும் ஒருவர் மாறி ஒருவராகப் பார்த்த அவர், இர்வினைக் சற்றுக்கூர்ந்து உற்றுநோக்கலானார்.   

“இந்த நகரத்துக் பையன் எவ்வாறு  உங்களோடு இணைந்து கொண்டான்?” - அவரது   கேள்வியில்  ‘நகரத்துப் பையன்’ என்ற சொற்களைக் கேட்டதும்  செரோக்கியின் தந்தை திடுக்கிட்டுவிட்டார்!

தனது சிறுபிராயத்தில்  சிறுவர் விளையாட்டு மைதானத்தில் தனது பெற்றோருடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தவேளை, மரவேரடியில் நின்றுகொண்டு பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த செரோக்கியுடன் இணைந்து பழகத்தொடங்கிய இர்வின், என்றுமே தான் நகரவாசி  என்பதை புரோகோனிஷ் மக்களுக்குக்  காட்டிக்கொண்டதில்லை.   மரவேரடியில் வைத்துத்  தனது நகரத்து வேஷத்தைக் களைந்து, வனவாசிகள் வேசத்தோடுதான் அவன் எப்போதும்  ‘புரோகோனிஷ்’ பகுதிக்குள் நுழைவான்.  

இன்று கூட அவன் அப்படித்தான்  வேசமிட்டு வந்திருந்தான். ஆனால் பெரியவர் அவனை ‘நகரத்துப் பையன்’ என்று  சுட்டியபோது அவன் உட்பட, செரோக்கியும்  திடுக்கிட்டனர்!

தனது மகனின் நண்பன் கானகத்தில் எங்கோ இருந்து வரும்  ஒரு வனவாசி என்று  இன்றுவரை நம்பிக்கொண்டிருந்த செரோக்கியின்  தந்தைக்கு இந்தச் செய்தி  வியப்பைத்தந்தது!

‘வெளியார் எவரையும் வனத்துக்குள் சேர்த்துக்கொள்ளக்கூடாது’ என்று காலாகாலமாக பிடிவாதத்தில் இருந்துவரும்  நம்மவர்கள், இர்வின் ஒரு  ‘நகரவாசி’ என்பது தெரிந்தால் என்னவாகும்?   ஒருகணம் சிந்தித்துப் பார்த்த அவர், அவ்வேளையில்  தனது அதிர்ச்சியை  வெளிக்காட்டிக்கொள்ளாமல் கடந்துபோக முற்பட்டார்!

பெரியவருடன் மூவரும்  சர்வசாதாரணமாக அளவளாவிக்கொண்டிருந்தபோது,  திடீரென    இர்வினின் பெயரைக்கேட்ட பெரியவர்,  பின்னர் அவனது தாயின் பெயரையும் கேட்டரிந்துகொண்டவராக, தனக்குப் பக்கத்திலிருந்த “பக்கிஸ்பெட்டி”யை இழுத்தெடுத்துத் தன்முன் வைத்தபடி, அதனைத் திறந்து புராதன நூலொன்றையும் , ஒரு குறிப்புப் புத்தகத்தையும் வெளியில் எடுத்தார். பின்னர் பெட்டிக்குள்ளிருந்து  எடுத்த எழுதுகோலொன்றினால் குறிப்புப் புத்தகத்தில் இர்வின் குறிப்பிட்ட பெயர்களை எழுதிக் கொண்ட அவர், தனது சிந்தனை மூலமாக   மனக்கணக்குகளைப் போட ஆரம்பித்தார்!

“இன்னும் சில காலங்களில் உலகத்தில் நிகழப்போகும் பாரிய அழிவொன்றை நீ தடுத்து நிறுத்த விளைந்துள்ளாய்! அது உன்னிலிருந்தும் நழுவிச் சென்றுவிட்டது குழந்தாய்!” என்று நிதானமாகக் கூறிமுடித்தபோது, இர்வின் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிவிட்டான்!   

(தொடரும்)  



Post a Comment

Previous Post Next Post