யதேச்சையாக உள்ளே வந்த சரண்யா ஓவியாவை கண்களாலே அளந்து விட்டு நகர்ந்தாள். இப்படியுமா உடை உடுத்துவார்கள் என்று ஆச்சரிம் ஓவியாவின் கண்களில் தோன்ற, அதைக் கவனித்த கண்ணன் மெதுவாக சிரித்துக் கொண்டான்.
“உங்களுக்கு வேலைகள் இருக்கும் சார். உங்கள் பாஸ் உங்களை திட்டப் போகின்றார். நான் கிளம்புகின்றேன்” என்ற ஓவியாவின் வார்த்தைக்கு பதில் சொல்லாமல் புன்னகைத்தான் கண்ணன்.
ஒரு அழகிய சிலை உயிர்கொண்டு வந்து, அவன் முன் நடந்து சென்றது போன்ற உணர்வுடன் அவள் சென்ற வழியை பார்த்துக் கொண்டு நின்றான் கண்ணன். கையழுத்து வாங்கவென்று அங்கே வந்த சரண்யா கண்ணனை பார்த்து முறைத்தாள்.
தோட்டத்து செடிகளுக்கு தண்ணீரை ஊற்றிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான் ஆறுமுகம். உறக்கம் கலைந்து காலை ஒன்பது மணிக்கெல்லாம் தன் அறையில் இருந்து வெளிப்பட்ட வேலவன், காலை உணவை உட்கொண்ட பின் ஏதும் பேசாமல் தோட்டத்தில் போய் அமர்ந்துக் கொண்டார். குயிலின் கூவலும், பறவைகளின் ஆராவாரமும் அதிகமாவே இருந்த அந்த குட்டிப் பூங்காவனத்தை பார்த்தபடி ஊமையாக உட்கார்ந்திருந்தார்.
அந்த ஆளைப் பார்க்கவே ஆறுமுகத்துக்கு பிடிக்கவில்லை என்றாலும் எஜமானி தேவகி பற்றிய தகவல் என்னவாக இருக்கும் என்று அறிய அவனின் மனமும் அலை பாயத்தான் செய்தது. கையில் காப்பிக் கோப்பையுடன் வந்து, தன்னை விட இளையவர் எனினும் மரியாதை நிமித்தம் “பெரியவரே .. இதைக் குடியுங்கள்” என்று கொடுத்தான். அவர் மொத்தமாக ஆறுமுகத்தை நேருக்குநேர் பார்க்க விரும்பாதவர் போல் பார்வையை தாழ்த்திக் கொண்டார்.
“எஜமானியம்மாவை உங்களுக்கு தெரியுமா? எங்கே இருக்கின்றார்கள்?” என்ற ஆறுமுகத்தின் கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனம் காத்தார். அவரின் கைகள் ஆதரவுடன் அவர் உட்கார்ந்திருந்த அந்த சீமெந்து இருக்கையை மெதுவாக தடவிக் கொடுத்தன.
பதிலே பேசாத அந்த மனிதரை கொஞ்சம் கோபத்துடனேயே நோக்கிய ஆறுமுகம் அங்கிருந்து நகர்ந்தான்.
வேலையின் சுமை அதிகம் இல்லாததாலும், சனிக்கிழமை என்பதாலும் கொஞ்சம் நேரத்துடனேயே வீட்டுக்கு வந்திருந்தான் கண்ணன். மனதில் இதமான தென்றலாக ஓவியாவின் சந்திப்பு வந்து போய் கொண்டிருந்தது. அதுவே ஒரு புதிய அனுபவமாகவும் தோன்றியது கண்ணனுக்கு. என்றாலும் வேலவன் என்று தன்னை அறிமுகப் படுத்திய அந்த நபரிடம் இருந்து தன்னைப் பெற்றவளைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாகவே இருந்தான் அவன்.
மாலையானதும் ஆற்றோரமாக மெதுவாக நடை பயின்றனர் இருவரும். “ரொம்ப அழகாக இருக்கின்றது இந்த இடமும், பூங்காவும், உடன் கலையம்சமான வீடும்” முதன் முறையாக மௌனம் கலைத்தார் பெரியவர்.
(தொடரும்)
0 Comments