இது தான் இஸ்லாம்
எல்லாப் புகழும் இறைவனுக்கே !
அகிலம் முழுவதும் சகோதரத்துவம், சமத்துவமும் மிளிரட்டும்.
இஸ்லாம் என்ற அரபிச் சொல்லுக்கு "அமைதி” என்று பொருள். இஸ்லாம் மார்க்கம் என்பது அமைதி வழி என்பதாகும்.
இஸ்லாம் மார்க்கம் என்பதற்கு “மதம்” என்பது பொருள் அல்ல. இஸ்லாத்தின் வேதம் என்பது. திருக்குர்ஆனையே குறிக்கும். திருக்குர் - ஆன் - இறைவனால் "அசரீரியாக" அருளப்பட்டது.
அது சிறிது சிறிதாக 23 ஆண்டுகளில், இறைவனின் திருத்தூதர் அண்ணல் நபி பெருமானார் மூலமாக உலக மக்களுக்கு இறைச்செய்தியாக வழங்கப்பட்டது.
இந்த திருக்குர்-ஆன் உலகிற்கு முழுமையாகக் கிடைத்த மாதம் ரம்ஜான் மாதம்தான். ரம்ஜான் மாதம் முழுவதும் 30நாட்களும் உண்ணா நோன்பு” இருப்பது இஸ்லாமியர்களுக்குக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைத் தத்துவத்தை, வாழ்க்கை நெறியை, வாழும் மாண்பினை எடுத்துரைக்கும், இஸ்லாம் மார்க்கம் ஐந்து தூண்களின் மேல் நிறுவப்பட்டுள்ளது.
ஆம். அந்த ஐந்துதூண்கள் என்பது,
1 இறைவன் ஒருவனே! என்றும் அவரது தூதர் நபிகள் நாயகம் என்றும் எள்ளளவும் ஐயமின்றி நம்பிக்கை கொள்வது. அதாவது ஈமான் கொள்வது.
2. இறை வணக்கம் செய்தல் ; ஐந்து வேளை தொழுகை தவறாது பேணுதல்.
3. திருக்குர் - ஆன் அருளப்பெற்ற ரம்னன் மாதத்தில் முப்பது நாட்களும் உண்ணா நோன்பு இருந்து இறைவனைத்தியானித்தல்.
4. "ஜகாத்” என்னும் ஏழைவரியைத் தவறாது வழங்கிமூகநீதியைக் காத்தல்.
5. புனித மக்கா மாநகருக்குப் பயணம் செய்து ஒருமுறை “ஹஜ்” புனிதயாத்திரையை நிறைவுசெய்தல்.
இந்த ஐந்து கடமைகள் ஒவ்வொரு இசுலாமியனுக்கும் கட்டாயக் கடமையாக்கப்பட்டுள்ளது.
இந்த ஐம்பெருங்கடமைகளில் ஒன்றான ரம்ஜான் மாதம் முப்பது நாட்கள் உண்ணா நோன்பு நோற்றபின் நிறைவு நாளாகக் கொண்டாடப்படும் திருநாளே, பெருநாளே ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பண்டிகை நாளாகும்.
ஒழுங்குமுறைகள், கண்ணியம், தூய்மை, விஷயங்களைப் பிரித்தறியும் ஆற்றல், தேர்ந்தெடுக்கும் கலை, பிரச்சனைகளின் வரிசையமைப்பு, கட்டுக் கோப்பு, உணர்வுகளின் தேட்டம், அழகிய நாட்டம், விசாலமான உள்ளம், வாய்மையுடன் கூடிய அழகிய நற்பண்புகள், பிறருக்காக அனுதாபம்கொண்டு அவர்களின்நலம்நாடுதல், ஏழைகளிடம் கருணை காட்டுதல், மென்மையான நடத்தை, இனிமையான உரையாடல், தன்னடக்கம், தியாகம், சுயநலமற்ற தன்மை மேலும் வாய்மை, நிலை குலையாமை, கடமையை உணர்ந்து மும்முரமாகச்செயல்படுதல், கேடற்ற புலனடக்கம், இறையச்சம், முன்னேறுவதற்கானத் துடிப்பு இவை யாவும் இஸ்லாமிய வாழ்வின் அழகிய வரைமுறைகளாகும்.
இஸ்லாத்தில் ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வு கிடையாது. உயர்ந்தவன். தாழ்ந்தவன் என்ற பேதம் கிடையாது அனைவரும் சகோதரர் என்னும் மனப்பாங்கு உடையது.“ஜகாத்” என்னும் ஏழைவரி செலுத்துதல் கட்டாயக் கடமையாக்கப்பட்டுள்ளது.
அதாவது தான் ஈட்டும் செல்வத்தில் 2 12% ஜகாத் கொடுக்க வேண்டும் என்பது. அண்டை வீட்டான் பசித்திருக்க தான் மட்டும் உண்ணுவது இழிநிலை என்றும், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்னும் உயர்ந்த ஒப்பற்ற நிலையும் இஸ்லாம் காட்டும் ; கற்றுத்தரும் நெறிகளாகும்.
இரவு 2.30 மணிக்கு“ஸஹர்” என்றுசொல்லப்படும் சிறப்பு உணவை உட்கொண்டு பகல் முழுவதும் உணவும், நீரும் உண்ணாமலும், பருகாமலும், இறைவனைத் தியானித்து, ஐம்புலன்களைக் கட்டுபடுத்தி, மன இச்சைகளுக்குக் கடிவாளம் இட்டு, உடலாலும், உள்ளத்தாலும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மாலை 7.00 மணிக்குமேல் நோன்பை முடித்து, இரவெல்லாம் சிறப்புத் தொழுகை பேணி வாழ்க்கையில் ஒரு ஒழுங்குமுறை மூலம் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு நெறிமுறையே நோன்பின் மாண்பாகும். இது இஸ்லாம் கற்றுத்தரும் ஒருபாடமாகும்.
இஸ்லாம் ஒரு மதம் அல்ல. அது ஒரு மார்க்கம். அதாவது வாழ்க்கைத் திட்டம்.
குர்ஆனில் மதம் என்ற சொல்லே கிடையாது. அண்ணல் நபிகள் பெருமானாரும், மதம் என்ற சொல்லைக் கையாண்டதே இல்லை. இஸ்லாத்தைக் குறிப்பிட, அறிமுகப்படுத்த குர்-ஆன் ஓர் அழகிய சொல்லைப்பயன்படுத்தி உள்ளது. அதுதான் தீன் மார்க்கம்.
இஸ்லாம் என்பது ஒரு முழுமையான வாழ்க்கை நெறி. கல்வி, கலை, சட்டம், நீதி, சமூகம், அரசியல், பொருளாதாரம், வணிகம், குடும்பம், உறவு, ஒழுக்கம், நடத்தை என வாழ்வின் அனைத்து ஒட்டுமொத்தமான பரிமாணங்களையும் தழுவியதுதான் இஸ்லாம்.
“ஈதல் இசைபட வாழ்தல்” என்னும் வாழ்வியல் நெறியை அடித்தளமாகக் கொண்டது மட்டுமல்ல. அதை வாழ்வியல் சட்டமாகவே ஆக்கியது இஸ்லாம்.
“ஈதல்” என்பது காசு, பணம் தருவது மட்டுமா? இல்லை . அதில் ஒர் ஆழமான தத்துவம் அடங்கியுள்ளது.
உண்மைதான். "ஈதல் - கொடுத்தல் என்பது என்ன? அன்பைக் கொடுப்பது. அறிவைக் கொடுப்பது. தேவையறிந்து உதவியைக் கொடுப்பது. இல்லார்க்குப்பொருள் கொடுப்பது என யாருக்கு எது தேவையோ, அதைக் கொடுப்பது தான் ஈதல். இந்த தத்துவம் தான் ஈகைத் திருநாளின் மையநோக்கம்.
தான தர்மங்கள் செய்வதும், ஏழைகள், விதவைகள், ஆதரவற்றோருக்கு வலியச் சென்று உதவுவதும் மிகச் சிறந்த பண்பாக இஸ்லாம் கருதுகிறது.
இஸ்லாத்தின் ஐம்பெருங்கடமைகளில் 80% நான்கு கடமைகள் ஒருங்கே நிறைவேறும் காலம் தான் ரம்ஜான் மாதம்.
மிகவும் சிறப்புடையது. மாட்சிமையுடையது. நாமும் வாழ்ந்து பிறரையும் வாழச் செய்வது இந்த மாதத்தின் மாண்பாகும். இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்பது மைய நோக்கமாகும்.
இன்றைய நாகரிக வாழ்வு மனிதனுக்கு மனிதன் விரோதம் கொள்ள வேண்டும் என்ற மூடத்தனத்தில் தள்ளிவிட்டது. இந்நிலை மாற்றிட அன்பை மூலாதாரமாக்க வேண்டும். மன மாச்சரியங்கள் களையப்பட வேண்டும்.
சகோதரத்துவம் மிளிர வேண்டும். மதங்களின் பெயரால் சமூகத்திற்கு ஊறு விளைவிக்கும் தீய எண்ணங்கள் களையப்பட வேண்டும்.
இந்தநல்ல எண்ண விதைகள் மனிதமனங்களில் தூவப்பட வேண்டும். அந்த நிலையில் உலக அமைதி தானாக
மலரத் தொடங்கும். அனைவரும் உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், உயர்ந்த புகழ், மெய் ஞானம்பெற்று வளமுடன், நலம்பெற்று நீடுவாழ்வோம்.
( கோவை வானொலியில் 05.08.2013 அன்று ஒலிபரப்பான சான்றோர் சிந்தனையின்பதிவு...)
TRY/TRUE/TRUST Try - for better future True - with your work,
Trust - in God then Success will be at your feet
(தொடரும்)
0 Comments