Ticker

6/recent/ticker-posts

Ad Code



வரலாறு பேசும் பெண்மையின் புகழ் : 02

உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையிலும் மனம் தளராத அன்னை அஸ்மா ரலியல்லாஹு அன்ஹா....


இறைவன் ஒருவனே! என்று பறைசாற்றும் ஏகத்துவ மார்க்கம் இஸ்லாம் , மக்கள் நெஞ்சங்களில் கொஞ்சம் கொஞ்சமாக துளிர்த்து வர ஆரம்பித்த காலமது....

நெஞ்சங்கள் இறுகிய காபிர்கள் இஸ்லாத்தை ஏற்ற புனிதர்களை சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாக்கிய வண்ணமிருந்தனர்..

பொறுமையுடன் காத்திருந்த முஸ்லிம்களுக்கு பெரும் கருணையாளனான அல்லாஹ்வின் அருள் கட்டளை இறங்கியது. மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்யுமாறு...

கஷ்டப்பட்டு சேகரித்த இன்பமெல்லாம் எள்ளளவும் நிலைத்து நிற்பதில்லை என்ற உண்மையை உணர்ந்த முஸ்லிம்கள், அனைத்து உலகியல் செல்வங்களையும் துறந்துவிட்டு, அல்லாஹ்வினதும்,அவனது ஹபீப் பெருமானார்ﷺ அவர்களினதும்,  திருப்தியை மட்டுமே எதிர்பார்த்து மதீனா நோக்கி புறப்பட்டார்கள்...

 பெருமானார்ﷺ அவர்களின் அழைப்புக்காக காத்திருந்த, அவர்களது அன்புத் தோழர் அண்ணல் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு பெருமானாரின் அழைப்பு வந்த அடுத்த நொடியே ஹிஜ்ரத் செய்ய  கிளம்பிவிட்டார்கள்...

நள்ளிரவில்......

அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவரது இல்லத்தில் அருமை மகள் அஸ்மா ரலியல்லாஹு அன்ஹா தனித்து இருந்தார்கள் .

அந்நேரம் முரடன் அபூஜஹ்ல் பெருமானாரை  கொலை செய்யும் கொடிய எண்ணத்துடன் பெருமானாரின் தோழர் அபூபக்கர் நாயகம் அவர்களது இல்லத்தை அடைந்தான்.

 வாயில் கதவை அவன் தட்டியதும் அஸ்மா நாயகி கதவைத் திறந்தார்கள்.

அவர்களிடம்" உன் தந்தை எங்கே "எனக் கோபமாக கேட்டான்.  அதற்கு அவர்கள் "எனக்குத் தெரியாது" என்றார்கள். இதைக்கேட்டு மேலும் கோபமடைந்த அபூஜஹ்ல் உன்னிடம் கேட்டு உண்மையை பெற முடியாது என்று கூறி, அவனது  கனமான கையால் அன்னையின் மென்மையான கன்னத்தில் முரட்டுத்தனமாக அறைந்து விட்டான்.

அவன் அறைந்த வேகத்தில் அவர்கள் அணிந்திருந்த கம்மல் கூட  கழன்று கீழே விழுந்து விட்டது....

கலங்கி நின்ற அந்தக் கணத்தில் அன்னை அஸ்மா ரழியல்லாஹு அன்ஹா,  இக்கொடிய  உள்ளங்கள் அழிந்தொழிந்து, இப்புனித மார்க்கம் மனித உள்ளங்களில் நிரம்பி செழிப்படைய தன்னை இறைவழியில் தியாகம் செய்வேன் என்று உள உறுதி கொண்டார்கள். 

 அன்று முதல் அவர்களது தியாகங்கள் நிறைந்த சேவைகள் ஆரம்பித்துவிட்டன. 

 ஹிஜ்ரத் செல்லுகையில் காஃபிர்களின்  பிடியிலிருந்து  தப்புவதற்காக அண்ணலார்ﷺ  அவர்களும் அண்ணல் அபூபக்கர் அவர்களும் பிறர் அறியாத  ஒரு இரகசியப் பயணப் பாதையில் சென்றார்கள்....

இதை அறிந்து வைத்திருந்த அன்னை அஸ்மா நாயகி, காஃபிர்களின் துல்லியமான கண்காணிப்பிலிருந்து தப்பி, பெருமானாருக்கும் தன் தந்தைக்கும் தேவையான உணவுப்பொருட்களை கொண்டு சென்று ஒப்படைத்தார்கள்.....

மதீனாவை சென்றடைய கிட்டத்தட்ட 13 நாட்கள் பாலை வெளியில் பயணம் செய்ய வேண்டும். அவ்வாறிருக்க அஸ்மா நாயகியோ ஒவ்வொரு நாளும் உணவுப் பொருட்களுடன் அவர்களை அடைந்து அவற்றை ஒப்படைத்துவிட்டு இல்லம்  திரும்புவார்கள்....

அந்த பயங்கரமான சந்தர்ப்பங்களிலும் உள துணிவுடன் செயற்பட்டார்கள் வீரமங்கை அஸ்மா நாயகியவர்கள்.

அன்னை அவர்கள் உணவுகளைக் கொண்டு செல்வது பிறருக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக ஒரு நுட்பமான முறையை கையாண்டார்கள்.

தன்னுடைய முந்தானையை இரண்டாகக் கிழித்து, அதில் ஒன்றில் உணவுப்பொருட்களை வைத்து, தன் இடுப்பில் இடுப்புறை போன்று கட்டிக்கொள்வார்கள். மற்றைய துண்டை முந்தானையாக அணிந்து கொண்டு பெருமானாரிடம் உணவுகளை கொண்டு சென்று ஒப்படைப்பார்கள்....

 இவர்களின் இத்துணிவான செயலை பாராட்டிய பெருமானார்ﷺ அவர்கள் "அஸ்மாவே! இறைவன் உமக்கு சுவர்க்கத்தில் இரு இடுப்புறைகளை அணிவிப்பான் " என வாழ்த்தினார்கள்...

அன்று முதல்ِذَاتُ النَّطاَقَيْن ( இரு இடுப்புறை உடையவர்கள்) என்ற பட்டப் பெயர் கொண்டே அவர்களை அழைப்பது வழக்கமாயிற்று...

 கொடியவன் அபூஜஹ்லின் அடியால் மனம் துவண்டு போகாமல், அந்த அவமானத்திலிருந்தே தெளிவான மன உறுதியுடன் செயல்பட ஆரம்பித்த நம் அன்னை அஸ்மா எம் அனைவருக்கும் சிறந்த முன்மாதிரியாகும்.....

(தொடரும்)

Post a Comment

0 Comments