புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா -113

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா -113


பெரியார் குறிப்பிட்ட, உலகத்தில் நிகழப்போகும் பாரிய அழிவொன்றிற்கும்  குகைக்குள்ளிருந்து குள்ளர்களால் திருடிச் செல்லப்பட்ட அந்தப் புராதன நூலின் நான்கு பக்கங்களுக்குமிடையில்  ஏதோவொரு  சம்பந்தம் இருப்பதை உணர்ந்து கொண்ட இர்வின், பெரியார் விட்ட இடத்திலிருந்து கதையைத் தொடர்ந்து கேட்பதற்கு ஆர்வமானான்!

“குழந்தாய், நானும் இப்போது வயது முதிர்ந்துவிட்டேன்! இதுவரைக்கும் என்னால் இக்கல்லடிவாரத்திலிருந்தும் வெளியாகி அந்தக் குகையைக் கண்டுபிடித்துக் கொள்ள முடியாது போய்விட்டது! ஏதோ  எனது நல்லதிர்ஷ்டம் எனது அந்திம காலத்தில் புத்திசாலித்தனமான நீ என் தொடர்பில் வந்துள்ளாய்! எனது தந்தையார் தேடிவந்த அந்தக்குகை இந்தப் பெரிய கல்லருகில்தான் எங்கோ இருக்க வேண்டும்!” என்று நம்பிக்கை பொதிந்த தொனியில்  கூறி முடித்தார் பெரியவர்.

அந்தக் குகை இர்வினுக்கு மிகவும் பரிச்சயமானது என்றும், ‘கிரீடி’யில் வாழ்ந்து வந்த அவரது தந்தை தேடிவந்த நூல், சில பக்கங்கள் களவாடப்பட்ட நிலையில் இப்போது தன்னிடம்தான்  இருக்கின்றது என்பதையும்  பெரியாரிடத்தில் கூறினால், அவர் மிகவும் பெருமிதமடைவார் என்பதை  இர்வின் உணர்ந்தபோதிலும், அந்த நூலின் சில பக்கங்கள் காணாமற் போய்விட்டது என்பதை குறிப்பிட்டால் அவர் வருத்தமடைவார் என்பதைத்  தனக்குள் உணர்ந்துகொண்ட இர்வின், மேலும் கதையைத் தொடர்ந்து கேட்கலானான்.

“குழந்தாய், அந்த நூல் இருக்கின்றதே, அதிலே நிறைய வைத்தியத் தகவல்கள் பொதிந்துள்ளனவாம். அக்காலத்தில் அதனை எழுதியவர் ஒரு பெரும் வைத்திய - விஞ்ஞானி என்பதை, அவர் ஏதோவொரு நாட்டில் “என்டிகோநிஷ்” என்னுமிடத்தில்  வாழ்ந்தவர் என்பதை எனது தந்தை அறிந்து வைத்திருந்தார். அவர் இவற்றையெல்லாம்  எப்படி அறிந்தார் என்பதை நானறியேன்! அந்த நூலிலுள்ள தகவல்கள் ‘நுண்ணுயிர்’ சம்பந்தப்பட்டது என்றும்,  நுண்ணுயிர் கொண்டு மனிதர்களுக்குள் நோய்களை ஏற்படுத்தவும், நோய்களை இல்லாமலாக்கவும் முடியுமான  இன்னபல அரிய தகவல்களைக் கொண்ட அந்த நூல் பற்றி  எனது தந்தை, அடிக்கடி கூறிக்கொண்டிருந்தார்! அதனை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்துவிடவேண்டுமென்ற நப்பாசையில்தான் அவர் இந்த வனாந்திரத்துக்குள் வந்தார்! அவரின் துரதிர்ஷ்டமோ எனது நல்லதிர்ஷ்டமோ யானறியேன். என்னையிழந்து அவர் போய்விட்டார்! நான் இந்தக் குழிக்குள் பல காலமாகச் சிக்கித் தவிக்கின்றேன்!” என்று கூறிவிட்டு,  சற்று நிதானமடைந்த பெரியார் மேலும் கதையைத் தொடரலானார்.

ஆரம்பத்தில் பெரியாரின்  பேச்சினைப் புரிந்தும் புரியாமலும் கேட்டுக் கொண்டிருந்த செரோக்கியும் அவனது தந்தையும், போகப்போக  நிதானமிழந்தவர்களாயினர்!

அப்பொழுது, திடீரென அவர்களது காதுகளில் விழுந்த சிட்டுக்குருவிகளின்   அலறல் சத்தம் அவர்களது கவனத்தை வேறு பக்கம் ஈர்த்தது! அந்தச்சிட்டுக்குருவிகள் ஏதோவொரு சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது என்பது மாத்திரம் அவர்களுக்குப் புரிந்தது! இரண்டு குருவிகளும் மரக்கிளையிலிருந்த  'கூட்டை' வட்டமிட்டவாறு சத்தமிட்டுக்கொண்டிருந்தன.  அவர்கள் சற்று நெருங்கிச் சென்று பார்த்தபோது, பிரச்சினைக்கான காரணம் அவர்களுக்குப் புரிந்துவிட்டது!

ஒரு பாம்பு, குருவிக்குஞ்சுகள் இருக்கும்  கூட்டை நோக்கி மெல்ல ஊர்ந்து வந்துகொண்டிருந்ததை அவர்கள் கண்டார்கள்!

(தொடரும்)


Post a Comment

Previous Post Next Post