கம்பராமாயணம் குறள் வெண்பா முயற்சி-19

கம்பராமாயணம் குறள் வெண்பா முயற்சி-19


சீதைமறுமொழி

மேனியைத் தாங்கியே வெட்கமின்றி இங்கிருந்த
காரணம் சொல்கின்றேன் கேள்:

என்கணவன் வந்தே சிறைமீட்க வந்திடுவான்
அன்பனைக் காணலாம் நான்.

அரக்கர் குலத்தை அழிப்பதைக் கண்டே
உளமகிழ்வேன் என்றாள் உவந்து.

மனதுக் குரியவன் என்னுயிராய் உள்ளான்!
நினைத்தேதான் வாழ்கின்றேன் நான்.

அந்தநேரம் மாயா சனகனும் அங்குவந்தான்!
வன்மம் நகைத்தது பார்.

தந்தைபோல் வந்தவனின் கேவலப் பேச்சுக்குக்
கொந்தளித்து நின்றாள் கொழுந்து.

இதைப்பார்த்த ராவணன் துள்ள மகோதரன்
தடுத்து நிறுத்தினான் அங்கு.

மாயச் சனகனைக் கொல்ல உருவினான்
வாளை! தடுத்தான் மகன்.

அந்தநேரம் கும்பகர்ணன் விண்ணுலகு சென்றுவிட்டான்
என்றசேதி கேட்டான் உடைந்து.

அழுதான் அரற்றினான் தேம்பித் துடித்தான்!
கிளுகிளுத்தாள் சீதை மகிழ்ந்து.

சிறைவை! மாயச் சனகனை என்றே
மறைந்தான் ராவணன் சென்று.

மாயா சனகனிவன் என்றே திரிசடை
தேற்றினாள் சீதையைத் தான்

நாகபாசப்படலம்
கும்பகர்ணன் பேரிழப்பால் ராவணன் சீறினான்
அங்கே அமச்சரைப் பார்த்து.

அதிகாயன் துள்ளிப் புறப்பட்டான்! போரில் 
கதிகலங்கும் என்றான் சினந்து.

அதிகாயன்சூளுரை
ராவணன் தம்பி இழப்பாலே வாடுதல்போல்
ராமனும் வாடவேண்டும் இங்கு.

இலக்குவனைப் போருக் கழைத்துவா! தூதனே!
உரைத்துச் சிலிர்த்தான் வெகுண்டு.

ராமன் இலக்குவனைப் பார்த்தேதான் செல்லென்றான்!
தாள்பதித்துச் சென்றான் விரைந்து.

அதிகாயன் ஆற்றலைக் கண்டு மலைத்தான்!
மதிமயங்கி நின்றிருந்த போது

இலக்குவன் முன்னங்கே வாயுதேவன் தோன்றி
ஒருயுக்தி சொன்னான் விரைந்து.

சொல்லிய வண்ணம் அயன்கணையை லக்குவன்
துள்ளித்தான் ஏவினான் பார்த்து.

அந்தக் கணையோ அதிகாயன் போர்க்களத்தில் 
மண்கவ்வச் செய்த துடன்.

அதிகாயன் மாண்டுவிட்டான்! செய்தி அறிந்தே
இடிந்தான் இராவணன் தான்.

தாய்தானியமாலிஇராவணனிடம்கதறல்:
தானிய மாலி ,மகனைப் பறிகொடுத்த
தாலே அழுதாள் விழுந்து.

இரண்டு மகன்கள் இறந்தனர்!  இந்ரசித்
ஒருமகனே உள்ளான் உணர்.

உன்காமத் தீயால் அடுத்தடுத்துத் துன்பந்தான்!
இன்னும் எதுவருமோ?கூறு.

வீடணன் சொன்னதைக் கேட்கவில்லை!  தம்பி
அடலேறைக் கொன்றுவிட்டாய் நீ!

அரசாளும் லட்சணம்  நன்றுதான்போ! போ!
இலங்கையே சோகத்தில் தான்.

இந்திரசித்தின்வேகம்
சாகா வரம்பெற்ற தம்பியைக் கொன்றவனைப்
போரிலே கொல்வேன் நான்.

கொல்லாமல் இந்த நகருக்குள் நான்வருதல்
இல்லை எனச்சொன்னான் பார்.

இந்திரசித் தேரை, கவசத்தைத் துண்டாக்கி
நின்றான் இலக்குவன் தான்.

மாயத்தால் இந்திரசித் நாகபாசம் விட்டவுடன்
பாசம் பிணைத்தது பார்.

இலக்குவன் மற்றும் அனுமனுடன் சேர்ந்து
மயங்கிச் சரிந்தனர் அங்கு.

விரைந்துசென்று ராவணனைப் பார்த்தேதான் சொன்னான்:
இலக்குவன் மாண்டுவிட்டான் என்று..

சொல்லிவிட்டுச் சென்றான்தன் மாளிகை நோக்கித்தான்!
எள்ளலுடன் துள்ளி மகிழ்ந்து.

போர்க்களத்தில் ராமன் புலம்பினான்! வீடணா
பார்த்தாயா என்றான் கடிந்து.

சாகவில்லை! பாசம் விலகிவிட்டால் மீண்டெழுவார்!
நாகபாசம் இஃதென்றான் அங்கு.

இருள்சூழ ராவணனுக் கஞ்சி கருடன்
வரவே விலகியது பார்.

சடையப்ப வள்ளலை நாடிவந்தால் இங்கே
விடைபெறும் அப்பசிபோல் பாசம்

தளர்ந்திட வீரர் உயிர்த்தெழுந்தார் ராமா!
உளைச்சலே வேண்டாம் உணர்.

உயிர்தந்த நீயார்? எனக்கேட்டான் ராமன்!
பதில்தராமல் சென்றான் பறந்து.

செய்தியை ராவணன் கேட்டதும் இந்திரசித்
இல்லம் விரைந்தான் நடந்து.

கேட்டதைச் சொன்னான் இராவணன்!  இந்திரசித்
ஆத்திரம் கொண்டா னங்கு.

என்னுடல் நோவதாலே போருக்கு நாளைநான்
சென்றிடுவேன் என்றான் துடித்து.(தொடரும்)


Post a Comment

Previous Post Next Post