“ஆம் ஐயா! அம்மாவும் அப்பாவும் ஒன்றாக வாழ கனவு கண்ட வீடு இது. அப்பா தன் விருப்பத்துக்க ஏற்ப பார்த்து பார்த்து கட்டியதாம். ஆறுமுகம் தாத்தா சொல்வார்” என்றான் கண்ணன்.
“அந்த இனிமையான வாழ்க்கையில் தானப்பா சிறு விரிசல் விழ ஒரு பைத்தியக்காரன் பிரசன்னமாகினான் அவனால் தான் குட்டிச் சுவராகியது உன் அம்மாவின் வாழ்க்கை” கரகரத்த குரலில் பெரியவர் சொல்ல அப்படியே மணலில் அமர்ந்தான் கண்ணன்.
“உன் தாய் மிகவும் நல்லவள். உன்னை விட்டுப் பிரிந்ததை தவிர வேறெந்த தவறும் அவள் செயயவில்லை” என்றார் பெரியவர்.
“அம்மா எங்கே இருக்கின்றார்கள்? சொல்லுங்கள் ஐயா, அவர்களை நான் பார்க்க வேண்டும்” என்று கலங்கினான் கண்ணன்.
“எனக்கு சில விபரங்கள் மட்டும் தான் தெரியும், ஆனால் அவள்..” என்றவர் தன் நாக்கை கடித்துக் கொண்டார். பின் “அவர் எங்கு சென்றார் என்ற விபரம் தெரியாது தம்பி” என்றார் கவலையுடன்.
இலைமறை காயாக ஆறுமுகம் அம்மாவைப் பற்றிய விபரங்கள் சொல்லியிருந்தான். ஆனால் வீட்டை விட்டு வெளியே சென்றபின் எந்த தகவலும் இல்லை என்றே முடித்திருந்தான். அதன் தொடர்ச்சியாகவே பெரியவர் சொன்ன விபரங்கள் இருந்தன.
பசப்பு வார்த்தைகளை நம்பி வெளிக்கிளம்பிய தேவகி வீடு வர வழியின்றி ஆட்டோ ட்ரைவருடன் தனித்து விடப் பட்டதும், அவன் அவளை தனியாக விட்டுவிட்டு நகைகளுடனும், பணத்துடனும் காணமால் போனதை கண்ணனின் மனம் பாதிக்காத படி சொன்னார். அங்கே தனியே விடப் பட்ட தேவகி என்ன பாடுபட்டாளோ என்று சொல்லி கலங்கினார்.
“ஐயா.. அந்த ஆட்டோகாரன் அம்மாவை எங்குவரை கூட்டிச் சென்றார் என்று உங்களுக்கு தெரியுமா?” என்றான் கண்ணன்.
“ம்ம்ம்.. தெரியும் தம்பி. அது ரொம்ப தூரமப்பா..” என்றார் அவர் கலக்கத்துடன்.
“பரவாயில்லை.. நாளை எனக்கு ஆபிஸ் இல்லை. இப்போதே கிளம்பலாம்” என்றான் கண்ணன். பெரியவரும் என்ன நினைத்தாரோ “சரி தம்பி போகலாம்” என்றார்.
வாடகைக்கு ஒரு காரை அமர்த்திக் கொண்டான் கண்ணன். ஆறுமுகத்திடம் என்ன ஏதென்ற விபரங்கள் கூறவும் பொறுமையின்றி பெரியவருடன் கிளம்பினான். போகும் போது ‘எங்கே போகின்றீர்கள்’ என்று கேட்க மனமின்றி மௌனமாக வழியனுப்பி வைத்தான் ஆறுமுகம்.
(தொடரும்)
0 Comments