
“சரி ஐயா.. நீங்கள் சொல்லுமிடம் செல்வோம்.. அம்மாவை பற்றிய மேல் விபரங்கள் கிடைக்கலாம்” என்று மீண்டும் வண்டியை ஸ்டார்ட் செய்தான் கண்ணன்.
கண்ணன் என்றுமே நீண்ட வழிப் பயணம் தனியாக சென்றதில்லை. ஆசிரமம், வீடு, வேலை என்றே இருப்பவன். அதனால் செல்லும் வழியை கூட துல்லியமாக அந்த பெரியவர் சொல்ல சொல்ல தொடர்ந்தான்.
நீண்ட நெடும் பயணத்தின் பின் வேறொரு குட்டிக் கிராமத்தை அடைந்தது வண்டி. கொஞ்சம் சீரான தோற்றத்துடன் இருந்த அந்த சிறு வீட்டினை நெருங்கினர் இருவரும். எண்பதை கடந்த முதுகு வளைந்த அந்தக் கிழவர் கண்களை இடுக்கி பார்வையை சீர் செய்து “யாருப்பா?” என்றார்.
“உள்ளே வரலாமா தாத்தா?” என்று குரல் கொடுத்தான் கண்ணன்.
‘வரலாம்’ என்ற அனுமதி பெற்று இருவரும் உள்ளே நுழைந்தனர்.
“யாரப்பா நீங்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றார் பெரியவர். வயது காரணமாக பொக்கை வாயில் வார்த்தைகள் ஒழுங்காக வர சிரமப் பட்டன.
சுருக்கமாக வேலவன் தேவகியை பற்றி தான் தேடி வந்த விபரத்தை சொன்னார்.
“ஒ... எத்தனையோ வருடம் கழித்து இப்போ வந்திருக்கின்றீர்களே..” என்றார் பெரியவர்.
“நீங்க தேடி வந்த பெண்தானா என்று எனக்குத் தெரியவில்லை தம்பி.. ஆனா ஒரு பொண்ணு தவிச்சிட்டு வீதியிலே நின்னது. பரிதாபப் பட்டு நான் இங்கே கூட்டி வந்தேன். அப்புறம் ... அந்த பொண்ணு இங்கிருந்து போயிட்டுது” என்றார் அவர்.
“ஐயா.. நன்றாக நினைவுப் படுத்தி சொல்லுங்கள்.” அவர் கையைப் பிடித்துக் கெஞ்சினார் வேலவன். ‘எங்கே எனக்கு எதுவும் தெரியாது’ என்று கை விரித்து விடுவாரோ என்ற கவலையுடன், தான் கொண்டு வந்திருந்த தேவகியின் போட்டோவை அவருக்கு காட்டினான் கண்ணன்.
“ஆமா.. இந்த பொண்ணுதான். இது பேர் தேவகியா? அது பேரெல்லாம் சொல்லவே இல்லை. சித்தப் பிரமை பிடிச்ச மாதிரி இருந்தது. அடிக்கடி கண்ணன்.. சிவா என்று சொல்லி அழும்” பெரியவர் சொல்ல சொல்ல இருவர் கண்களும் கலங்கின.
“பெரியவரே.. அவுங்க எங்கே போனாங்க என்ற விபரம் சொல்லுங்களேன்” அழுகையுடன் கெஞ்சினான் கண்ணன்.
“அது... வந்து தம்பி...” என்று தயங்கியவர் நெடுநேர யோசனைக்குப் பின் “அந்தப் பிள்ளையை நான் ஆசுபத்திரியில் விட்டு விட்டேன்” எனக்கு தெரிந்த ஜோசபின் சிஸ்டர் மூலம் தான் ஆசுபத்திரியில் இடம் கிடைத்தது என்றார்.
(தொடரும்)



0 Comments