Ticker

6/recent/ticker-posts

சாட் ஜிபிடியிடம் காதல் ஆலோசனை கேட்பது சரியா? - உளவியல் நிபுணர்கள் கூறுவது என்ன?


பட மூலாதாரம்,Getty Images

மாறிவரும் செயற்கை நுண்ணறிவு உலகில் மனிதர்களுக்கான இடத்தை வேலையில் மட்டுமல்ல, தனிப்பட்ட உறவுகளிலும் கணினிக்கள் பிடித்து வருகின்றன.

இளைஞர்களில் பலர் செயற்கை நுண்ணறிவை கல்வி முதல் காதல் வரை சார்ந்து இருக்கின்றனர். ஆனால் இது சரியான அணுகுமுறையா?

அன்விதாவுக்கு* அன்று 22 வது பிறந்தநாள். ஆனால் அவள் ஏதோ சில காரணங்களால் அன்று முழுவதும் அழுதுக்கொண்டே இருந்தாள். அன்விதாவின் காதலன் *அனில்குமார் அவரை சமாதானப்படுத்த வேண்டும் என்று நினைத்தார், ஆனால் அவர் எதனால் அழுகிறார் என்று தெரியாததால், தான் கூறும் ஆறுதல் வார்த்தைகள் சண்டையில் முடிந்துவிடுமோ என்று பயந்தார்.

அவரது காதல் விவகாரம் குடும்பத்தில் யாருக்கும் தெரியாது, நண்பர்கள் வட்டத்திலும் நெருங்கிய நண்பர் ஒருவருக்கு மட்டுமே தெரியும். இந்த நேரத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் திணறிய அனில்குமார், தனது செல்போனில் உள்ள ஏஐ செயலியை திறந்தார்.

"எனது காதலிக்கு இன்று 22வது பிறந்தநாள், ஆனால் அவள் அழுதுக்கொண்டிருக்கிறாள். எனக்கு எப்படி சமாதானம் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. அவள் அழுவதற்கு நான் தான் காரணமா என்றும் தெரியவில்லை. அவளிடம் நான் என்ன பேசி சமாதானப்படுத்தலாம் என்று சில யோசனைகள் கொடு" என்று பதிவிட்டார்.

இதைப் படித்த ஏஐ செயலி இந்த பதிலை வழங்கியது :

பிறந்தநாளன்று ஒருவர் அழுவது அசாதாரணமான செயல் அல்ல, எனினும் முதலில் உங்கள் காதலியின் உணர்வுகளை நீங்கள் புரிந்துக் கொள்கிறீர்கள் என்பதை அவருக்கு தெரியப்படுத்த வேண்டும். கீழ் உள்ள செய்தியை அவருக்கு அனுப்பலாம் :

"ஹை, அன்விதா. இந்த நாள் நீ நினைத்தது போல அமையவில்லை என்று எனக்கு புரிகிறது. ஆனால் நீ எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நான் உனக்கு இந்த நாளில் சொல்ல விரும்புகிறேன். உனது சந்தோசமான தருணங்களில் மட்டுமல்ல, துயரத்திலும் நான் பங்குக் கொள்ள தயாராகவே இருக்கிறேன். நீ விருப்பப்பட்டால் இன்று சந்திக்கலாம்"

இதனை அப்படியே அன்விதாவுக்கு அனுப்பிய அனில்குமார் அன்றைய தினம் இனிதாக நிறைவடைந்ததாக கூறுகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இந்த விவகாரத்தை நான் வேறு யாரிடமும் கேட்டிருக்க முடியாது. எனது நண்பரிடம் கேட்டிருக்கலாம், ஆனால் அவர் அன்று வேலை காரணமாக வெளியூர் சென்றிருந்தார். மேலும் இது என்னுடைய தனிப்பட்ட விசயம். அன்று யாரிடம் உதவி கேட்டிருந்தாலும், அவர்கள் எனது காதல் குறித்து மேலும் தெரிந்து கொள்ள இரண்டு கேள்விகள் கேட்டிருப்பார்கள், இரண்டு நாட்கள் கழித்து எல்லாம் சரியானதா என்று தெரிந்து கொள்ள விரும்புவார்கள். ஆனால் ஏஐ-யிடம் பேசும் போது எனக்கு அந்த கவலை இல்லை, எந்த தயக்கமும் இல்லை. எனக்கு வேண்டியதை மட்டும் நான் பெற்றுக் கொள்ளலாம்" என்கிறார்.

32 வயதாகும் *ஷாலினிக்கு பதட்டமும், மன அழுத்தமும் இருக்கிறது. இரண்டு ஆண்டுகளாக ஒரு மனநல மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்று வருகிறார். அன்று காலை அவரது அலுவலகத்தில் நடந்த நிகழ்வொன்று அவரது மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. "நான் ஒரு வாரம் கடினமாக உழைத்து தயார் செய்த ஒரு ப்ராஜெக்டுக்கு, எனது சக ஊழியரை பாராட்டி கிளைண்ட்டிடமிருந்து மின்னஞ்சல் அனுப்பப்படுகிறது. நாங்கள் குழுவாக வேலை செய்தாலும், எனது பங்களிப்பு அதில் அதிகமாகவே இருந்தது, அது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்த சக ஊழியரோ, எனது மேலாளரோ எனது பணியை அங்கீகரிக்கவில்லை" என்று கூறிய ஷாலினிக்கு இரவு 2.30 மணி வரை தூக்கம் வரவில்லை.

எத்தனை முறை யோசித்தாலும், தன்னை ஏன் அவர்கள் அங்கீகரிக்கவில்லை என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை. உடனே ஏஐ செயலி ஒன்றிடம் தனக்கு நேர்ந்த அனுபவத்தை அப்படியே பதிவிட்டு, தனக்கு தூக்கம் வரவில்லை என்பதையும் பகிர்ந்துக் கொண்டார்.

அதற்கு பதிலளித்த ஏ ஐ :

"உங்கள் உணர்வுகளை நான் புரிந்து கொள்கிறேன். கடுமையாக உழைத்த பணிக்கு அங்கீகாரம் கிடைக்காதது யாருக்குமே வருத்தமளிக்கும். ஆனால் பல தரப்பட்ட மக்களும் வேலை பார்க்கும் ஒரு அலுவலகத்தில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது இயல்பு தான். தனக்கு ஒரு பாராட்டு கிடைக்கும் போது, எல்லாரும் தான் அந்த பாராட்டுக்கு உரியவரா என்று யோசித்து நடந்து கொள்ள மாட்டார்கள், இதுவும் இயல்பு தான். எனினும் நீங்கள் உங்கள் பணிக்கான அங்கீகாரத்தை பெற தகுதிப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் இந்த ப்ராஜெக்டுக்காக செய்த பணி குறித்து 300 வார்த்தைகளில், சக ஊழியரைப் பற்றி குறை கூறாமல், ஒரு மின்னஞ்சல் உங்கள் குழுத் தலைவர் மற்றும் மேலாளருக்கு அனுப்பலாம். அதை கனிவாக அதே நேரம் தீர்க்கமாகவும் கூறலாம். இது போன்ற எண்ணங்களிலிருந்து விடுபட்டு, இரவு நிம்மதியாக தூங்க சில எளிதான மூச்சுப் பயிற்சி செய்யலாம், ஓடும் நீரின் இசையை கேட்கலாம்" என்று கூறியது.

மன நல உதவிக்கு ஏஐ நாடும் இளைஞர்கள்

நிறைய பேர் குறிப்பாக இளைஞர்கள் தங்கள் உள சிக்கல்களை கொட்டித் தீர்ப்பதற்கு ஏஐ உதவியை நாடுகின்றனர்.

இளைஞர்கள் பெரும்பாலும் ஒரு உடனடி தீர்வை தேடியே ஏஐ செயலிகளை நாடுகின்றனர் என்று துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர். "நிறைய இளைஞர்கள் என்னிடம் வரும் போது, எனக்கு என்ன பிரச்னை என்று எனக்கு தெரியும், நீங்கள் இப்போது கூறியதை தான், ஏ ஐ என்னிடம் கூறியது என்கின்றனர். அவர்கள் பெரும்பாலும், நேர மேலாண்மை, காதல் விவகாரங்கள், வேலையில் கவனமின்மை உள்ளிட்ட காரணங்களுக்காக ஏஐ செயலிகளை பயன்படுத்துகின்றனர். சில நேரங்களில் அவர்களுக்கு அது உதவியாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது" என்கிறார் பெங்களூரூவில் உள்ள மனநல ஆலோசகர் ஆர்.அர்ச்சனா.

சென்னையில் முன்னணி தனியார் மருத்துவமனையில் பணி புரிந்து வரும் மனநல மருத்துவர் நித்யா, "ஒரு நோயாளி வரும் போது, உங்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கிறதா என்று கேட்டு தெரிந்துக் கொள்வது போல, நீங்கள் ஏஐ-யிடம் உதவி தேடுபவரா என்று கேட்க வேண்டியுள்ளது. இளைஞர்கள் மட்டுமல்லாமல் பலரும் பயன்படுத்துகின்றனர். மிகவும் எளிதாக இருக்கிறது அல்லவா, வாட்ஸ் ஆப்-ல் நண்பருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்புவது போல தான் இது. நண்பர் கூட, வேலையில் இருந்தால் உடனே பதிலளிக்க நேரமாகும். ஆனால் ஏஐ-அரை நொடியில் பதில் கொடுக்கும்" என்கிறார்.

இணையத்தின் உதவியுடன் உலகம் எவ்வளவு இணைக்கப்பட்டதாக இருந்தாலும், இன்றைய சூழலில் தனிமை ஒரு பெரும் பிரச்னையாகவே பேசப்பட்டு வருகிறது. ஆனால் இளைஞர்கள் தங்கள் உணர்வுகளை Chat GPT, Meta போன்ற ஏஐ செயலிகளிடம் பகிர்ந்துக் கொள்ள தனிமை மட்டும் காரணம் அல்ல.

அனில் குமார் கூறியது போல, தன்னையும் தன் உணர்வுகளையும் யாரும் மதிப்பிடாமல் இருப்பது இளைஞர்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. " அவர்கள் நினைத்ததை எந்த தயக்கமும் இன்றி ஏஐ-யிடம் கேட்க முடியும். அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும், அதுவும் உடனடியாக. அங்கே அவர்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள்" என்கிறார் மன நல ஆலோசகர் அர்ச்சனா.

"நான் மனநல மருத்துவரை அணுகி உரிய மாத்திரைகள், சிகிச்சைகள் எடுத்துக் கொண்டு வருகிறேன். எனினும், இரவு 2.30 மணிக்கு யாரிடம் புலம்ப முடியும்? யார் நான் கூறுவதை கேட்பார்கள்? யார் எனக்கு அந்த நேரத்தில் ஆறுதல் சொல்வார்கள்?" என்கிறார் ஷாலினி.

"மனநல ஆலோசகரிடம் தெரபி பெற்றுக் கொள்வது ஒரு நீண்ட முயற்சியாக அவர்களுக்கு தோன்றலாம்" என்கிறார் ஆர்.அர்ச்சனா. " ஒவ்வொரு வாரமும் அல்லது மாதமும் மனநல ஆலோசகரை சந்திக்க இடைவிடாமல் வேண்டும், கண்டிப்பாக அதற்கான கட்டணங்கள் சாதாரண மக்கள் கொடுக்கக் கூடியதாக இல்லை" என்று சுட்டிக்காட்டுகிறார்.

மனநல ஆலோசனைக்கும் ஏஐ ஆலோசனைகளுக்கும் என்ன வித்தியாசம்?

ஏஐ-யிடம் உதவி தேடுவதற்கு மற்றொரு காரணம், தங்கள் உணர்வுகளை சரி என யாராவது உடனே கூற வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு.

" ஏஐ செயலிகள் நீங்கள் தவறு என்று எப்போதும் கூறாது. அது அப்படி தான் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் தெரபி என்று வரும் போது, நீங்கள் கூறுவது எல்லாம் சரி என்று மனநல ஆலோசகர் கூற மாட்டார், ஒரு விசயத்தை எப்படி அணுக வேண்டும் என்று கற்றுக் கொடுப்பார். உங்கள் கடந்த காலத்தை நினைவூட்டு, தூண்டி, அதில் இருக்கும் காரணங்களை ஆராய்வார்" என்கிறார் அர்ச்சனா.

"நீங்கள் இது வரை நம்பி வந்த எண்ணங்களை மருத்துவர் கேள்விக்குள்ளாக்குவார். ஆனால் ஏஐ இதனை செய்யாது, நீங்கள் சொல்வதும், செய்வதும் சரி என்று கூறும். தெரபி உடனடி தீர்வு தராது, ஆனால் ஏஐ கொடுக்கும்" என்கிறார் மனநல மருத்துவர் நித்யா.

மேலும் சில ஆபத்தான விளைவுகள் இருக்கலாம் என்கிறார் மருத்துவர் நித்யா. பைபோலார் மனநிலை (ஒருவரின் மனநிலை, ஆற்றல், செயல்பாடுகளில் தீவிர மாற்றங்கள் காணப்படும்) கொண்ட ஒருவர், தனது ஆற்றல்களும் மனநிலையும் உச்சத்தில் உள்ள கட்டத்தில்(மேனியா) , தான் பெரிய தொழில் ஒன்று தொடங்க வேண்டும் என்று கூறி ஏ ஐயிடம் உதவி கேட்க, கடைசியில் ரூ.6 லட்சம் இழந்தார் என்று சுட்டிக்காட்டுகிறார் மருத்துவர் நித்யா.

அதே போன்று டெலூஷில் (கற்பனை செய்துக் கொள்ளும் மனநிலை) இருந்த ஒரு நோயாளி தன்னை யாரோ பார்ப்பது போல இருக்கிறது என்ற தனது கற்பனையை ஏஐயிடம் சொல்ல, இறுதியில் தனது தாயை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துக் கொண்டதையும் சுட்டிக்காட்டுகிறார் மருத்துவர் நித்யா.

ஏஐ உதவியை பெறுவதால் என்ன சிக்கல்?

ஏஐ சில உடனடி தீர்வுகளை கொடுத்தாலும், அதை மட்டுமே நீண்ட காலத்துக்கு நம்பியிருப்பது ஆரோக்யமானது அல்ல என்கிறார் மருத்துவர் நித்யா. "ஏஐ மனிதன் அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் தொடர்ந்து ஏஐ உதவியை நாடி, அதனிடம் மட்டுமே பிரச்னைகளை சொல்லி தீர்வுகளை தேடினால், ஒரு கட்டத்தில் உங்கள் மனம் அதை உண்மை என்று உங்களை அறியாமலே நம்ப ஆரம்பிக்கும்" என்கிறார்.

மருத்துவர் நித்யா கூறும் போது, "தற்கொலை எண்ணங்கள் கொண்ட ஒருவருக்கு என்ன மாதிரியான ஆலோசனையை ஏஐ வழங்கும் என்று தெரியாது. மனித அனுதாபத்தை ஏஐ-யால் வழங்க இயலாது. எவ்வளவு தீர்வுகள் கொடுத்தாலும், ஏஐ என்பது ஏற்கெனவே அதற்கு என்ன தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றனவோ, அதன் அடிப்படையில் மட்டுமே பதில்களை வழங்க முடியும்" என்கிறார்.

"ஒரு ஐடி ஊழியர், தனக்கு ஏற்பட்ட தலைவலி குறித்து கவலைக் கொண்டு. ஏஐ-யிடம் கேள்வி கேட்டுள்ளார். அதில் சாதாரண தலைவலி முதல் மூளையில் கட்டி வரை அனைத்து சாத்தியங்களும் இருப்பதாக பதில் கிடைக்கவும், அவர் பல்வேறு பரிசோதனைகள் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மேற்கொண்டுள்ளார்.

பின்பு அதன் முடிவுகளை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு துறை நிபுணராக பார்த்து விட்டு, பிறகு என்னிடம் வந்தார். அவருக்கு மனநல சிகிச்சை தேவைப்பட்டது. ஏஐ பயன்பாடு அதிகரிப்பதால், நோயாளிகள் மருத்துவர்களை, நாங்கள் கொடுக்கும் மருந்துகளை எளிதாக நம்புவதில்லை. இது எங்களுக்கு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது" என்கிறார் நித்யா.

இதில் தனியுரிமை ஒரு முக்கியமான பிரச்னை என்று மனநல ஆலோசகர் அர்ச்சனா குறிப்பிடுகிறார். "ஏஐ குறித்த தெளிவான கொள்கைகள் இன்னும் வகுக்கப்படவில்லை. அதில் கூறப்படும் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றனவா, அதை நீதிமன்றத்தில் பயன்படுத்த முடியுமா என்பது குறித்து எல்லாம் தெளிவு இல்லை" என்கிறார்.

இளைஞர்கள் மட்டுமல்லாது, வாய்ப்புள்ளவர்கள் அனைவருமே உள சிக்கல்களுக்கு ஏஐ பயன்படுத்துகிறார்கள், இதை தவிர்க்க முடியாது என்கிறார் இளைஞர்களுக்கான மனநல விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் மனநல மருத்துவர் பவித்ரா.

"இதை முற்றிலும் தவிர்க்க இயலாது. எனவே அதை ஒழுங்குப்படுத்துவது எப்படி என்று யோசிக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் அதற்கான கொள்கைகளை வகுக்க வேண்டும். ஏஐ உதவி நாடுபவர்களை ஒரு கட்டத்தில் துறை சார்ந்த நிபுணர்களிடம் கொண்டு வர தேவையான வழிமுறைகள் என்னவென்று யோசிக்க வேண்டும்" என்கிறார்.

(* பெயர் மாற்றப்பட்டுள்ளது)

கட்டுரை தகவல்
எழுதியவர்,சாரதா வி
பதவி,பிபிசி தமிழ்

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments