Ticker

6/recent/ticker-posts

Ad Code



வரலாறு பேசும் பெண்மையின் புகழ் -7


அண்ணலார் அவர்கள் மீது அளவற்ற அன்பு கொண்ட அவர்களது அன்புச் சகோதரி அன்னை உம்மு ஹானி ரழியல்லாஹு அன்ஹா...

அண்ணல் அபூதாலிபின் அன்பு மகள் தான் இவர்கள்...

வீரப்புலி, ஞானச்சுடர் அலியாரின் உடன்பிறந்த அன்புச் சகோதரி...

பெருமானாரின் சிறிய தந்தையின் மகள் என்பதால் பெருமானாருக்கு சகோதரி முறையாகிறார் அன்னை உம்மு ஹானி ரழியல்லாஹு அன்ஹா...

நாம் வாழும் காலமோ  சொத்துக்காக உறவுகள் சேர்ந்து உறவாடும் குறுகிய உள்ளங்கள் கொண்ட காலம்!...

ஆனால் அண்ணலாரின் உறவுகளாக இவ்வையகத்தில் பிறக்க வரம்பெற்ற தவசீலர்கள், பெருமானார்  மீதான அன்பினாலே தத்தமது ஈமானை மெருகூட்டவே அண்ணலாருடன் ஒட்டி உறவாடினர்...

அவ்வகையில் பெருமானாரின் உள்ளத்துடன் உறவு கொண்ட உடன்பிறவா சகோதரிதான் அன்னை உம்மு ஹானி...

நபித்துவத்திற்க்கு முன்னர் பெருமானார்  அவர்கள் முறைப்பெண்ணான உம்மு ஹானியை மணம் முடிக்க எண்ணி பெண் கேட்ட பொழுது, உம்மு ஹானியின் தந்தை பெருமானாரின் சிறிய தந்தையான அபூதாலிப், தான் ஏற்கனவே கொடுத்திருந்த வாக்கிற்கிணங்க ஹுபைரா என்பவருக்கே மணமுடித்துக் கொடுத்தார்...

காலப்போக்கில் அன்னை உம்மு ஹானியும் புனித இஸ்லாத்திற்குள் நுழைந்து விட்டதால் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் இல்லற வாழ்வில் பிணக்கு ஏற்பட்டு இருவரும் பிரியும் நிலை ஏற்பட்டது...

எனவே அன்னையவர்கள் ஹுபைரா மூலம் பெற்ற பிள்ளைகளுடன் தனிமையாகினார்கள்...

அன்னையின் இந்நிலையை அறிந்த கருணையின் உரு அவர்கள்,அன்னை உம்மு ஹானியை பொறுப்பேற்றுக் கொள்வதற்காக அவர்களை மணமுடிக்க விளைந்த பொழுது, தனக்கு பிள்ளைகளும் இருப்பதால் பெருமானார்  அவர்களுக்கும்,  அவர்களது ஏகத்துவப் பிரச்சாரத்திற்கும் சுமையாகி விடுவேனோ கணவருக்கு செய்யக்கூடிய கடமைகளில் குறைகள் ஏற்பட்டுவிடுமோ என அஞ்சி தன் மறுப்பை பெருமானாருக்கு தெரிவித்தார்கள்...

எனவே அன்னை உம்மு ஹானியை பெருமானார்  அவர்கள் மணம் முடிக்கவில்லை... இறுதிவரை உற்ற தோழியாக இருந்து பெருமானாருக்கு எல்லா வகையிலும் அன்பையும் ஆறுதலையும் அள்ளிக் கொடுத்தார்கள்...

ஒரு முறை மன்னர்கெல்லாம் மாமன்னர் மஹ்மூது நபிகளார்  அவர்கள் தன் தோழர்கள் சூழ ஓரிடத்தில் வீற்றிருந்திருந்தார்கள்...

பக்கத்தில் அன்னை உம்மு ஹானியும் இருந்தார்கள்...

பெருமானாரிடம் ஒரு குவளையில் பால் கொண்டு வரப்பட்டது...

அதை குடித்த நபிகளார் குடித்து மீதமிருந்த பாலை, அருகிலிருந்த தன் சகோதரி உம்மு ஹானியிடம் கொடுத்தார்கள்...

அண்ணலாரின் புனிதஉமிழ்நீர் தீராத வியாதிகளுக்கு கூட அருமருந்து ஆயிற்றே...பெரும் பாக்கியமாக கருதி உடனே குடித்துவிட்டார்கள் அன்னையவர்கள்...

பின்னர் "நாயகமே! நான் ஒரு பாவம் செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்" என்று வேண்டினார்கள்...

காரணம் கேட்ட கண்மணி  அவர்களிடம் "நான் இன்று நோன்பு வைத்திருந்தேன். தாங்கள் மீதம் வைத்த அருமருந்தான அந்தப் பாலை என்னிடம் தந்த உடனே குடித்துவிட்டேன்.எனவே என்னுடைய நோன்பை முறித்துக் கொண்டேன்" என்றார்கள் அன்னை...

"உம்மு ஹானி! நீங்கள் கழா நோன்பா வைத்திருந்தீர்? (விடுபட்ட நோன்பிற்காக பகரமாக நோன்பு நோற்றல்)" என்று அண்ணலார் கேட்க, "இல்லை நாயகமே!" என்று பதிலுரைத்தார்... "அப்படியானால் பரவாயில்லை" என்று அனுமதி அளித்தார் பெருமானார்  அவர்கள்...

வாய்ப்பு என்பது என்றும் நம் கதவை தட்டுவதில்லை... அது தட்டும் பொழுது அதனை வரவேற்று உபசரிக்க வேண்டும்...

அதுபோன்றுதான் இறைவனை நெருங்கியவர்களிடம் இருந்து எதிர்பாராமல் கிடைக்கும் இதுபோன்ற வாய்ப்புகள்..

அதை பாக்கியமாக கருதி பெற்றுக் கொண்டவர்களுக்கு, அது இறைவனுடைய அருள் எனும் வாயிலின் திறவுகோல்..

நம்முடைய உள்ளத்தின் பயனற்ற, பாவமான எண்ண அலைகளாலும், ஊசலாட்டங்களாலும் நம்முடைய அமல்கள், நற்செயல்கள் பாதிக்கப்படலாம்...

ஆனால் பெருமானார்  அவர்கள் மீதுள்ள நேசமும், அவர்களுக்கு நாம் அளிக்கும் மரியாதையும், அவர்களது பொன்னுடல் வருடும் பாக்கியம் பெற்ற வஸ்துக்களும்... நம் பாவ இருள் சூழ்ந்த உள்ளங்களை சுடர்விட்டு ஒளிரும் தூய்மையான உள்ளங்களாக புதுமைப் பெறச்செய்யும்....

தன்னுடைய அமல்களை மட்டும் முதுகில் சுமந்து திரியும் அற்பர்களுக்கு, அண்ணலார் மீதான அன்பை ஆழமாய் பதிக்கும் அற்புதச் செயலாக அன்னையின் இச்செயல் மாறிவிட்டது..

(தொடரும்)

Post a Comment

0 Comments