சிந்தனையை தூண்டும் வாழ்வியல் நிஜங்கள்-7

சிந்தனையை தூண்டும் வாழ்வியல் நிஜங்கள்-7

 
பொறுமையின் மேன்மை

"பொறுத்தார் பூமி ஆள்வார்” என்றும், “பொறுமை கடலினும் பெரிது” என்றும் நம் ஆன்றோர் கூறுவர். அவர்கள் தான் பொறுமையின்றி ஆத்திரப்படுவதால், அவசரப்படுவதால் வரும் கேட்டினை விளக்கி, “ஆத்திரக்காரனுக்குப்புத்தி மட்டு” என்றும் கூறிச் சென்றுள்ளனர்.

சிந்தனைக்குரிய செய்தி இது. இதையெல்லாம் தாண்டி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் வள்ளுவப் பேராசானோ, தீங்கிழைத்தவரைப் பொறுத்துக் கொண்டவர்களை இந்த உலகம் பொன்போல் போற்றும் என்றும், தண்டித்தவர்க்கு ஒரு நாளே, அப்போதைக்கு இன்பம் ; ஆனால் பொறுமை காத்தவரை உலகம் உள்ள வரை புகழ் சூழும் என்றும் பொறுமையின் மேன்மைக்குக் கட்டியம் கூறுகிறார். 

இதோ ஒரு வரலாற்றுச் சான்று....

அன்னை தெரேசா தொழு நோயாளிகளுக்குப் பொருளுதவி கேட்டு ஒரு செல்வந்தரிடம் சென்றார். ஆனால், அவரோ அன்னை தெரேசாவின் மீது எச்சில் துப்பி அவமானப்படுத்தினார். அந்த சூழ்நிலையிலும்

அன்னையானவர் பொறுமை காத்து தன் முகத்தின் மேல் துப்பிய எச்சிலைத் துடைத்துவிட்டு, அந்தச் செல்வந்தரிடம், 'எனக்குரிய என்னுடைய பரிசைக் கொடுத்துவிட்டீர்கள், ஆனால் நான் வேண்டி வந்த தொழு நோயாளிகளுக்கான பொருளுதவியைத் தாருங்கள்” என்று பொறுமையாகக் கேட்ட போது, அந்த செல்வந்தரின் மனம் மாறிப் போய் பெரும் உதவி செய்ததோடு, அத்தாயிடம் தன் செயலுக்கு வருத்தமும் தெரிவித்தார் என்பது பொறுமையின் மேன்மைக்கான அத்தாட்சியல்லவா?

மகாபாரதத்தின் துரியோதனாதிகள் மூலம் எத்துணை துன்பத்துக்கு ஆளானவர்கள் பாண்டவர்கள். அத்தனையும் சகித்துக் கொண்டு, தாங்கிக் கொண்டு, பொறுத்திருந்ததினால் அன்றோ, மகாபாரத்தின் கதையில் பாண்டவர்களின் பெருமை மேலும் மிளர்கின்றது.

பொறுமைக்குப் பெண்மையைச் சான்று காட்டுவது ஏன்? பொறுமைக்குப் பூமியைச் சான்று காட்டுவது ஏன்? தன்னைத் தோண்டுபவரையும் கூட தாங்கிக் கொண்டு அவர்களையும் இந்த பூமி சுமந்து கொண்டு உள்ளதே ! பொறுமை தவறும் போது அங்கு ஆணவம் கோலோச்சுகிறது. சிந்தனை சிதறுகிறது. அறிவு மழுங்கிவிடுகிறது. விளைவு விபரீதமாகிவிடுகிறது.

சற்றே சிந்தித்தால் பொறுமையின் மேன்மை விளங்கும். பொறுமை இல்லாத காரணத்தினால் அல்லவா, கொலைகளும், கற்பழிப்புகளும் நிகழ்கின்றன. போக்குவரத்துகளில் பொறுமை தவறிய காரணத்தினால் அன்றோ கோர விபத்துக்கள், உயிர்ச் சேதங்கள் விளைகின்றன.

வேகத்தை விட விவேகம் முக்கியமானதல்லவா? சமைக்கும் போது பொறுமை தவறிய, அவசர புத்தியினால் அல்லவா தீ விபத்துகள் ஏற்படுகின்றன.

தானத்தினும் சிறந்தது நிதானம் என்பதன் பொருள் பொறுமையைக் கடைபிடிப்பதன் மேன்மையே ஆகும். செல்வத்தை உடைமையாக்கிக் காட்டாத வள்ளுவப் பெருமான், பொறுமையை ஓர் உடைமையாக்கிக் காட்டுகிறார்.

பொறுமையைக் கடைபிடித்து வாழ்வில் சிறப்போம். (16.9.2021 அன்று கோவை வானொலியில் ஒலிபரப்பான சான்றோர் சிந்தனைப்பதிவு)

(தொடரும்)


Post a Comment

Previous Post Next Post