ஆன்லைன் விளையாட்டினால் வந்த வினை

ஆன்லைன் விளையாட்டினால் வந்த வினை


சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மணலி புதுநகரைச் சேர்ந்தவர் பாக்யராஜ் (32). இவரது மனைவி பவானி (29).  இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்கள் 3 மற்றும் ஒரு வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

பாக்யராஜ் கந்தன்சாவடியில் உள்ள ஹெல்த்கேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். திருமணம் முடிந்து ஓராண்டிற்கு பின் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட பவானி ஆரம்பித்துள்ளார்.

பெரிய அளவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் கட்டி விளையாடுவதை பவானி பழக்கமாக்கி கொண்டார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளம்பரங்களை பார்த்து மேலும் மேலும் ஆசை ஏற்பட்டதால், அந்த விளையாட்டிற்கு ஒரு கட்டத்தில் அடிமையாகியுள்ளார்.

இவ்வாறு முழுமையாக ஆன்லைன் விளையாட்டில் அடிமையானதை அவதானித்த கணவர் மற்றும் குடும்பத்தினர் பவானியை எச்சரித்துள்ளனர். ஆனால் பவானி தான் விட்டதை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் யார் பேச்சையும் கேட்காமல் இருந்துள்ளார்.

விளையாட்டிற்கு அடிமையான பவானிக்கு பாரதி மற்றும் கவிதா என்ற இரண்டு தங்கைகள் இருந்துள்ளனர். இவர்களிடம் சென்று தலா ஒன்றரை லட்சம் ரூபாய் வாங்கி வந்து வங்கி கணக்கில் செலுத்திவிட்டு மீண்டும் விளையாட தொடங்கியுள்ளார்.

குறித்த 3 லட்சம் ரூபாயை விளையாட்டில் விட்ட பவானி மீண்டும் தனது 20 பவுன் நகையை விற்று விளையாடியுள்ளார். நகைகள் விற்ற பணம் பல லட்சங்கள் இருந்த நிலையில், அனைத்து பணத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக விளையாடி தோற்றுள்ளார். இவ்வாறு சுமார் 20 லட்சம் வரை அவர் ஆன்லைன் விளையாட்டில் விட்டுள்ளார்.

இவ்வாறு தங்கைகளிடம் வாங்கிய பணம், நகை விற்று வைத்திருந்த பணம் அனைத்தையும் தான் விளையாடி தோல்வியடைந்ததால், இதனை தங்கையிடம் கூறி புலம்பியுள்ளார் பவானி.

இவ்வாறு மன உளைச்சலில் இருந்த பவானி நேற்று இரவு குழந்தைகளுடன் அமர்ந்து பேசிவிட்டு, கழிவறைக்கு சென்று வருவதாக கூறி கதவை அடைத்துள்ளார்.

வெகு நேரமாகியும் கழிவறை கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த கணவர் கதவை உடைத்து பார்த்த போது, அங்கு மனைவி பவானி தூக்கில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

பின்பு பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு குடும்ப பெண் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் இவ்வாறு பணத்தினை இழந்து, தற்கொலை வரை சென்ற சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



Post a Comment

Previous Post Next Post