சிமிட்டலும் துடிப்பும்!

சிமிட்டலும் துடிப்பும்!


என்னைவிட
உன்னை யாரும்
அத்தனை உன்னிப்பாக
கவனித்திருக்க முடியாது

என்னைப்
பார்த்து நீ சிமிட்டுவது
இது 10879 வது
முறையாகும்

4992 வது சிமிட்டலில்தான்
என் பெயரை நீ கேட்டாய்.
நான் சொல்லி முடிப்பதற்குள்
அது ஐந்தாயிரத்தினை
தாண்டிவிட்டது

நம் காதலைப் பரிமாறிய
போது 7541 வது முறையாக 
சிமிட்டினாய் அப்பொழுது
முதல் சிமிட்டலை என்
இதயத்தில் உணர்ந்தேன்

எனக்காக நான் கேட்டு
இருமுறை தொடர்ச்சியாக
அழகழகாய் இமைப்பாயே 
அப்பொழுதெல்லாம்
ஆயிரங்களைச் சரியாக 
கணக்கிட்டுக் கொள்வேன்.

10863 வது சிமிட்டலில்,
ஆம் சற்று நேரத்திற்கு முன்
என்னைப் பிடிக்கவில்லை
என்றாயே அப்பொழுது

எகிறிய என் இதயப்படபடப்பின் 
சிமிட்டல்கள் இப்பொழுது 
ஆயிரங்களைக் கடந்து 
இலட்சங்களை நோக்கி விரைகின்றன

விரைவில் அது 
சுழியமாகக்கூடும்  இமைக்காமல் 
அழுதிடு எண்ண நான் இருக்கமாட்டேன்!


Post a Comment

Previous Post Next Post