இஸ்ஸதீன், கலகெதர
ADHD என்பது Attention Defict Hyperactive Disorder என்ற நோயை சுருக்கமாக அழைக்கப்படும் ஒரு சொல் ஆகும். இது மூளையின் அசாதாரண தொழிற்பாட்டினால் ஏற்படுகின்ற பல நோய் அறிகுறிகளைக் கொண்ட ஒரு நிலையாகும். அத்துடன் இந்நிலை ஒரு மன நலத்துடன் தொடர்புடைய நோயாகவே கருதப்படுகிறது.
இந்நோய் 4 வயது முதல் 18 வயதிற்கு இடைப்பட்டோரையே கூடுதலாகத் தாக்குவதோடு, பெண் பிள்ளைகளை விடவும் 3 மடங்கு ஆண் பிள்ளைகளையே தாக்குகின்றது. ஆனாலும் 18 வயதிற்கு மேற்பட்டோரையும் இந்நோய் தாக்கலாம்.
இந்நோயினால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு அவதானம் மற்றும் கிரகித்தல் குறைவு, கல்வி கற்றலில் பின்னடைவு, அதிக கோபம், முரட்டுத் தன்மை , பிடிவாதம், ஏனையவர்களை வம்புக்கு அழைத்தல் அல்லது அவர்களுடைய வேலைகளுக்கு இடையூறு விளைவித்தல், நிம்மதியற்ற அளவுக்கு மீறிய செயற்பாடுகள், தான் கேட்டதை மற்றவர்கள் உடனடியாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் போன்ற பல குறி குணங்கள் இருக்கும். இந்நோய் பற்றிய விளக்கம் சாதாரண மக்களிடையே இல்லாமையினால் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சிறார்களின் பெற்றோர்கள் இவர்களைத் தண்டிக்கிறார்களே தவிர சிகிச்சைக்காக அழைத்துச் செல்கிறார்கள் இல்லை. இவ்வாறு தண்டிப்பதனால் அவர்களுடைய நோயின் தீவிரத்தன்மை கூடிக் கொண்டு செல்லுமே தவிர தண்டனை மூலம் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது.
இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கு கிரகித்தலில் பின்னடைவு, கவனக் குறைவு, நிம்மதியற்ற நிலை, அதி தீவிர செயற்பாடுகளுடனான கோபம், பொறுமையின்மை போன்ற குறி குணங்கள் இருப்பதனால் இவர்கள் தனது குடும்பத்திற்குப் பாரிய பிரச்சினையாக இருப்பதோடு மட்டுமின்றி தான் தொழில் புரியும் நிறுவனங்களில் இருப்பவர்களுக்கும் இவரது தொழிற்பாடுகள் இடையூறாக அமையும். இதன் காரணமாக இவர்கள் தொழில், நண்பர்கள், உறவினர்கள் போன்றவர்களையும் இழக்க வேண்டி யேற்படும்.
இந்நோயாளர்கள் மாத்திரமின்றி அவர்களது குடும்பமும் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி யேற்படும். காரணம் இவர்களைச் சமாளிப்பது என்பது ஒரு கடினமான விடயம் என்பதால் ஆகும்.
இந்நோய் ஏற்படுவதற்கான காரணம் பிறக்கும் போது ஏதாவது ஒரு காரணத்தினால் ஒக்சிஜன் கிடைக்காமலிருப்பது, உணவு வகைகளில் அடங்கியுள்ள செயற்கைப் பொருட்கள், தொடர்ந்து அலர்ஜி ஏற்படுதல், சூழல் காரணிகள், தலையில் ஏற்படக்கூடிய காயங்கள், சிறு வயதினர் அதாவது 2 வயதிற்கும் 5 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது போன்றவைகள் இந்நோயை ஏற்படுத்துவதற்கான காரணிகளாக நிரூபிக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்நோயை கண்டறிவதற்கான பிரத்தியேகமான ஆய்வு கூடப் பரிசோதனைகள் எதுவும் இல்லை. நோயின் அறிகுறிகளை வைத்தே இந்நோய் நிர்ணயிக்கப்படுகிறது.
இந்நோய்க்குச் சரியான சிகிச்சையளிக்காவிட்டால் மன அழுத்தம், போதைப்பொருட்களுக்கு அடிமையாகுதல், சமூக விரோதச் செயல்களினால் ஏற்படும் விளைவுகள், உறவுகளில் பின்னடைவு ஏற்பட்டு தனிமையாகுதல், கல்வி மற்றும் தொழிலில் பின்னடைவு போன்ற பல பாதிப்புக்கள் ஏற்படலாம்.
எனவே இந்நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதிலிருந்து மீளுவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பாதிக்கப்பட்ட வர்களுக்கு பெற்றோர், ஆசிரியர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களது அன்பு, ஊக்கம், உதவி போன்றவைகள் மிக மிக முக்கியம். இவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். வெளி விளையாட்டுகளிலும் ஆக்கபூர்வமான வேலைகளைச் செய்வதற்கும் இவர்களை ஊக்குகவிப்பதோடு தொலைக்காட்சி மற்றும் வீடியோ பார்த்தல், இலத்திரனியல் விளையாட்டுக்களில் ஈடுபடல் போன்றவைகளை முற்றாக தவிர்க்க வேண்டும்.
மேலும் இவர்கள் செய்யும் பிழைகளை ஒரு மென்மையான போக்கைக் கடைப்பிடித்து அவர் என்ன பிழை செய்தார் எனவும் அது ஏன் பிழை எனவும் சுட்டிக்காட்ட வேண்டும்.
உணவைப் பொறுத்தவரையில் மரக்கறி வகைகள், பழ வகைகள், மீன், தானிய வகைளை அதிகமாகக் கொடுப் பதோடு சீனி அல்லது சீனியினால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள், இரசாயனப் பொருட்களடங்கிய உணவு வகைகள் அல்லது மென்பானங்கள், அலர்ஜியை உண்டு பண்ணக்கூடிய உணவுகளைத் தொடர்ந்து கொடுத்தல் போன்றவற்றைக் கட்டாயமாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்நோய்க்குப் பாவிக்கக்கூடிய மருந்துகளில் அதிக பக்கவிளைவுகள் இருப்பதால் ஆரம்பத்திலேயே மாத் திரைகளைக் கொடுப்பதை வைத்தியர்கள் தவிர்த்துக் கொள்வார்கள். அதிக சத்துடைய உணவுகள், விட்டமின்கள், வெளி விளையாட்டுகளில் ஈடுபட ஊக்கமளித்தல் போன்றவைகளையே கடைப்பிடிக்கும்படி ஆலோசனை வழங்கப்படுகின்றது. அதற்கு அடுத்தபடியாக மனநலச் சிகிச்சையும் இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்ட பக்க விளைவுகளற்ற ஆயுர்வேத அல்லது யுனானி மருந்து வகைகளைக் கொடுப்பதே சிறந்தது. இதற்கும் ஒரு திருப்திகரமான விளைவு ஏற்படாவிட்டால் நவீன மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ளலாம்.
எனது அனுபவத்தின் படி இந்நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து மூன்று மாதங்களின் பின்புதான் ஒரு முன்னேற்றத்தை அவதானிக்க முடியும். அத்துடன் மருந்து உட்கொள்வதை விடவும்.உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு,
இறுதியாக வாசகர்களுக்கு ஒரு செய்தியாக ADHD என்பது ஒரு மனநல நோய் என்பதால் இவர்களது செயற்பாடுகளில் நாம் மிகவும் அவதானமாக இருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகளைக் காண வேண்டுமே தவிர அவர்கள் மீது கோபப்பட்டு அல்லது அவர்களைத் தண்டித்து அவர்களது நோய் நிலையை தீவிரமடையச் செய்யக்கூடாது என வேண்டுகிறேன்.
DR.NASEEM
0 Comments