யுத்த களத்தை நோக்கிச் சென்ற அன்னை அஸ்மாவின் மகன் அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு,தன்னுடன் இருந்த சிறிய படையுடன் தன் முழு பலத்தையும் உபயோகித்து ஹஜ்ஜாஜை எதிர்த்து போராடினார்கள்...
பெரும் படை பலத்தை கொண்டிருந்த ஹஜ்ஜாஜோ இறுதியில் வெற்றி கொண்டு மக்கா மதீனாவின் ஆட்சிப் பொறுப்பை பறித்துக் கொண்டார்...
ஷஹீதாக்கப்பட்ட அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை, ஏற்கனவே கூறப்பட்டதை போன்று சித்திரவதை செய்து கழுவில் ஏற்றினார்...
இந்த நேரத்தில் அன்னை அஸ்மா மக்காவில் தங்கி இருந்தார்கள். அவர்களோ முதுமையடைந்து கண்பார்வையையும் இழந்திருந்தார்கள்...
தற்போது ஆளுநரான ஹஜ்ஜாஜ், அன்னை அஸ்மாவை தன்னிடம் அழைத்து வரும்படி ஆள் அனுப்பினார்...
அஸ்மா ரழியல்லாஹு அன்ஹுவோ, ஹஜ்ஜாஜின் அழைப்பை மறுத்து "வர முடியாது என்று கூறு!" என்று அந்த சேவகனை திருப்பி அனுப்பினார்...
அதற்கு ஹஜ்ஜாஜ் "அவராக வருகிறாரா? அல்லது அவரின் தலைமுடியை பிடித்து இழுத்து வர ஆள் அனுப்பட்டுமா? என்று கேட்டு வா"
என்று முரட்டுத்தனமாக அழைத்து வரச் சொன்னார்...
படைத்தவனை அன்றி எந்த ஒரு படைப்புக்கும் அஞ்சாத வீர நெஞ்சம் கொண்ட இறைச்செல்வி அன்னை அஸ்மா அவர்கள்,
அந்த சேவகனிடம்,
"உன் தலைவனுக்கு ஆள் அனுப்பச் சொல்... யார் என் தலை முடியை பிடித்து இழுத்துச் செல்கின்றான் என்பதையும் பார்த்து விடலாம்" என்று ஏளனமாக செய்தி அனுப்பினார்கள்...
அன்னை அஸ்மாவின் துணிச்சலான பதிலைக் கேட்ட ஹஜ்ஜாஜே நேராக அவர்களது வீட்டுக்கு வந்து விட்டார்...
அன்னை அஸ்மாவின் முன்னே அமர்ந்து,
"அல்லாஹ்வின் விரோதியான உம் பிள்ளையை நான் கொன்று விட்டேன். உம் பிள்ளையின் கொலை விடயத்தில் நீர் என்ன நினைக்கின்றீர்" என்று கேட்க,
இறைவனுக்காக தன் உயிரை தியாகம் செய்த தன் பிள்ளையை அல்லாஹ்வின் விரோதி என்று ஹாஜ்ஜாஜ் கூறியும்,
அமைதியாக அவரைப் பார்த்து,
"நீர் என் பிள்ளையின் இம்மை வாழ்வைதான் அழித்துவிட்டீர்... ஆனால் என் பிள்ளையோ உம் மறுமை வாழ்வை அழித்து சின்னா பின்னமாக்கி விட்டாரே"என்று பதில் அளித்தார்கள்...
தொடர்ந்து ஹஜ்ஜாஜிடம்,
"அண்ணலெம் பெருமானார் ﷺ அவர்கள் நம்மிடையே ஒரு முறை கூறினார்கள்..
ஸகீப் கோத்திரத்திலிருந்து ஒரு பொய்யனும் ஒரு அக்கிரமக்காரனும் தோன்றுவார்கள் என்று... பெருமானார்ﷺ அவர்கள் கூறிய அந்தப் பொய்யனை நாம் பார்த்து விட்டோம். போலி நபி வேடம் அணிந்து நம்மிடையே வந்தான்....
பெருமானார்ﷺ கூறிய அக்கிரமக்காரனையும் இப்பொழுது நான் பார்க்கின்றேன்...
இறைத்தூதர் ﷺ அவர்களின் திருவாயால் சொர்க்கத்தில் இரு இடுப்புறைகள் இறைவனால் உமக்கு அறிவிக்கப்படும் என்று சோபனம் கூறப்பட்ட நான் கூறுகின்றேன்... அந்த அக்கிரமக்காரன் நீரே அன்றி வேறு யாரும் இல்லை"
என்று ஆட்சியாளனான ஹஜ்ஜாஜை பார்த்து கைநீட்டி அந்தத் தள்ளாத வயதிலும் தைரியமாக கூறினார்கள்...
இவர்களுக்கு இந்த தைரியம் எங்கிருந்து வந்தது என்று யோசிக்கின்றீர்களா?
தன் இதயத்தில் முழுமையாக நிரம்பி இருந்த இறைவன் மீதான பூரண நம்பிக்கையே இந்த பலத்தையும் துணிவையும் அவர்களுக்கு கொடுத்தது...
இதைக் கேட்ட ஹஜ்ஜாஜ் எந்த ஒரு மறுபேச்சும் இன்றி அந்த இடத்திலிருந்து கிளம்பிச் சென்று விட்டார்...
ஹஜ்ஜாஜ் அன்னை அஸ்மாவிடம் தகராறு செய்த செய்தி ஜனாதிபதியான மர்வானுக்கு ஏட்டியது...
அவர் ஹஜ்ஜாஜுக்கு கடிதம் மூலம் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மகளான அந்த ஸாலிஹான பெண்ணிடம் வீண் தகராறு செய்வதை நிறுத்திவிட்டு, அவர்களின் மகனை சிலுவையில் இருந்து கீழே இறக்கி விடுமாறு கட்டளையிட்டார்...
அவரின் கட்டளைக்கிணங்க கீழே இறக்கப்பட்ட தன் பிள்ளையின் சடலத்தை அன்னை அஸ்மாவே தன் கைகளால் தாங்கி,
அவர்களே குளிப்பாட்டி கஃபனும் செய்து நல்லடக்கம் செய்தார்கள்...
(தொடரும்)
0 Comments