
மீண்டும்இந்திரஜித்
தந்தையை நோக்கி வணங்கினான் இந்திரஜித்!
மன்னியுங்கள் என்றான் பணிந்து.
தன்தேரில் போர்க்களம் சென்றான் விடைபெற்று!
தன்தந்தைக் காற்றும் கடன்.
இந்திரஜித் - இலக்குவன் போர்!
இலக்குவன் இந்திரஜித் போர்க்களந் தன்னில்
மலைத்திடப் போர்புரிந்தார் அங்கு.
தெய்வத்தேர் உள்ளவரை இந்திரஜித் ஆற்றலுண்டு!
எச்சரித்தான் வீடணன் வந்து.
இலக்குவன் எய்த கணையால் பாகன்
நிலைகுலைந்து வீழ்ந்தான் சரிந்து.
தேரை,குதிரையைத் தானே நிலைப்படுத்தி
வீரமுடன் போரிட்டான் நின்று.
இலக்குவனும் தேவருமே இப்போரைக் கண்டு
வியந்தேதான் நின்றார் மலைத்து.
வீடணன் குறிப்புரை
இரவிலே இந்திரஜித் சாகமாட்டன்! சிவனார்
வரத்தில் கொடுத்தவை உண்டு!
தேரும் சிலையும் இருக்குமட்டும் இந்திரஜித்தை
யாருமே வெல்தல் அரிது.
குறிப்பால் உரைத்தான் வீடணன்! கேட்டே
முறித்தான் தேரச்சைத் தான்.
வில்லேந்தும் கையையும் துண்டித்தான்! மண்மீது
வில்லுடன் வீழ்ந்தது தாழ்ந்து.
ஒருகையால் இந்திரஜித் போரிட்டான்! வீரன்
உலுக்கினான் வெம்பகையைக் காண்.
பிறைமுக அம்பைத் தொடுத்தான்! தலையோ
அறுந்துதான் வீழ்ந்தது காண்.
கலங்காத இந்திரஜித் போர்க்களத்தில் வீழ்ந்தான்!
களமே குலுங்கியது கண்டு..
இறந்துவிட்டான் இந்திரஜித்! ராவணன் கேட்டான்!
நடுங்கிச் சரிந்தான் தளர்ந்து.
போர்க்களம் சென்றான்! மகனுடலைத் தேடினான்!
சீர்குலைந்த தன்மகனைக் கண்டு
புலம்பித் தவித்தான்! ஒருபெண்ணால் இந்த
நிலைவந்த தென்றான் அழுது.
எனக்குநீ செய்யும் கடன்களை எல்லாம்
உனக்குநான் செய்கின்றேன் பார்.
புலம்பினான் தன்மகனைத் தோள்களில் தூக்கி
இலங்கைக்குச் சென்றான் தளர்ந்து.
தாயழுதாள்! தந்தை அழுதான்! நகருருக
தேயமே கண்ணீரில் தான்.
மண்டோ தரியோ.கணவனுக்கும் இந்தநிலை
வந்திடுமே! வாடினாள் நொந்து.
அனைத்துக்கும் காரணம் சீதைதான் என்றே
மனங்கூற சென்றான் விரைந்து.
கொல்வேன் அவளை! இராவணன் ஓடினான்!
துள்ளித்தான் சென்றான் விரைந்து.
வந்தான் தடுத்தான் அமைச்சன் மகோதரன்!
கொன்றால் புகழுக் கிழுக்கு.
மைந்தனைப் போர்க்களத்தில் கொன்றோரை விட்டுவிட்டு
மைதிலியைக் கொல்லலாமா கூறு?
ராமனைப் போரிலே வென்றபின் சீதையின்றி
ஊனமனம் தேம்பாதா கூறு?
மாறினான் ராவணன்! திட்டத்தைக் கைவிட்டான்!
ஊறிவந்த இக்குழப்பம் பார்.
தலையை உடலுடன் சேர்த்தே கடன்கள்
வினையாற்ற வேண்டுமென்றான் வேந்து.
இந்திரஜித் மேனியைத் தைலமுள்ள தோணியில்
கொண்டுவைக்க ஆணையிட்டான் அங்கு.
இராவணன் வதை-
மூலபலப்படை வருகை
ஆயிரம் வெள்ளம் அளவினிலே சேனைகள்
ஊழிபோல் வந்தார் திரண்டு.
போரில் நடந்ததை ராவணன் சேனையிடம்
நேரில் விளக்கினான் நின்று.
எதிரிப் படையின் வலிமையை சொன்னான்
மதியூகி வாலியவான் அங்கு.
இலங்கையை தீக்கிரை யாக்கியதைச் சொன்னான்!
தயாரானார் போருக்குத் தான்.
மூலபலச் சேனையைப் பார்த்ததும் வானரர்
ஓலமிட்டே ஓடினார் பார்.
அப்படையைப் பற்றி இராமன்தான் கேட்டறிந்தான்!
எட்டுதிக்கில் நின்றபடை இஃது.
உலக அரக்கர் படைகளின் மொத்த
அளவே இதுவென்றார் பார்த்து.
இப்படி வீடணன் சொன்னதும் ராமனோ
கட்டளை இட்டான் விரைந்து.
அங்கதா! வானரச் சேனையைக் கூட்டிவா!
என்றதும் செய்தான் பணிந்து.
வானரச் சேனையைப் பின்னணியாய் நிற்கவைத்து
நாணேற்றி நின்றான் தனித்து.
ராமனது வில்லாற்றல் விட்ட கணைகளால்
சேனைகள் நின்றன சோர்ந்து.
படைகளோ ஒவ்வொன்றாய் அங்கே அழிய
திசைகள் பிளந்தன பார்.
அரக்கர் மனைவிமார் கண்ணீரோ அங்கே
அருவியாய் ஓடின பார்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments