மோகத்தின் விலை - 44

மோகத்தின் விலை - 44


மாலை மங்கிய வேலை ஆறுமுகம், வேலவன், கண்ணன் என மூவரும் தோட்டத்தில் அமர்ந்திருந்தனர்.  சமையல்காரர் கொடுத்த காப்பியை உறிஞ்சிய வண்ணம், இந்தப் பெரியவரை எப்போது துரத்தலாம் என்பது போல் பெரியவரை ஏறிட்டான் ஆறுமுகம்.

சுருக்கமாக வேலவன் கண்ணனுக்காக தான் கொண்டு வந்த சம்பந்தத்தை விளக்கி புகைப் படத்தை வெளியே எடுத்தார். 

“ஐயா, நீங்கள் வந்த வேலை முடிந்தது.  எதற்காக எங்கள் சொந்த வாழ்க்கையிலும் தலையிடுகின்றீர்கள்?” என்றான் ஆறுமுகம் பொறுமை இழந்து.

ஆறுமுகத்தின் பதிலால் நிலைகுலைந்த கண்ணன் “தாத்தா” என்று அழைத்து அவரை வருத்தமடைய வைக்க வேண்டாமே என்பது போல் சைகை செய்தான்.

ஒன்றும் சொல்லாமல் புகைப்படத்தை தன்னிடமே வைத்துக் கொண்டு எழுந்தார் வேலவன்.  “விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்குத் தான் தம்பி,  நான் கிளம்புகின்றேன்” என்றார்.

“ஒன்றும் தப்பாய் நினைத்துக் கொள்ள வேண்டாம்.  என் மேல் உள்ள பாசத்தினால் தானறியாமல் வந்த வார்த்தை அது. மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று அவர் கைகளைப் பற்றினான் கண்ணன்.

கோபத்துடன் ஆறுமுகம் எழுந்து செல்ல, கொஞ்ச நேர அமைதிக்குப் பின் இருவரும்   வீட்டை நோக்கி நடந்தனர். 

எந்தவித பேச்சுமின்றி இன்றி அமைதியாக உணவு உண்டபின் தத்தம் அறையினை நோக்கி உறங்க சென்றனர். 

அன்றைய இரவு கண்ணனும் பெரியவரும் உறங்க தான் மட்டும் உறக்கமின்றி தவித்துக் கொண்டிருந்தான் ஆறுமுகம்.

காலை சீக்கிரமாகவே எழுந்த கண்ணன் ஆபிசுக்கு செல்லும் பரபரப்பில் இருந்தான். பெரியவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க ஆறுமுகம் நான் பார்த்துக் கொள்கின்றேன் என்று சைகையால் சொல்ல சரியென்று ஆபிசுக்கு கிளம்பினான் கண்ணன்.

வழக்கம் போலவே எட்டு மணிக்குப் பின் தூக்கம் கலைந்து எழுந்தார் பெரியவர்.  காலைக் கடன்கள் முடித்து உணவு உண்டபின் தன்னையே பார்த்துக் கொண்டு அலைபாயும் மனதுடன்  கேள்விகள் கேட்க தயாராக நிற்கும் ஆறுமுகத்தை பார்த்து புன்னகைத்தார். 

தன் கையில் இருந்த புகைப்படத்தை ஹாலில் இருந்த சிவராமன் தம்பதியினர் படத்தின் முன் வைத்தார்.  கடைக் கண்ணில் ஒருதுளி கண்ணீருடன் விடை பெரும் பாவனையில் புகைப்படத்தை பார்த்து தலையசைத்தார். ஆறுமுகத்தின் முகம் பாராமல் வெளிவாசலை நோக்கி நடந்தார்.

“ஐயா .. பெரியவரே” என்றவாறே வேலவனை பின் தொடர்ந்தான் ஆறுமுகம். 

(தொடரும்)



Post a Comment

Previous Post Next Post