முக்காண்டம் ஏந்தும் சிலப்பதி காரத்தை
நற்றமிழ்ச் சொல்லால் குறள்வடிவப் பாக்களாய்
அக்கறையாய் நானெழுத முன்வந்தேன்! வாழ்த்துங்கள்!
கற்றறிந்தோர் தூண்டல் துணை.

பூம்புகார் மாநாய்கன் செல்வமகள் கண்ணகி
பூமகளாய் நின்றாள் வளர்ந்து.
பூம்புகார் செல்வந்தன் மாசாத் துவான்மகன்
கோவலனும் வாழ்ந்தான் வளர்ந்து.
மங்கல நாளில் திருமணம் செய்தனர்!
கண்கண்ட கோலந்தான் காண்.
கண்ணகியும் கோவலனும் ஏழடுக்கு மாளிகையில்
நான்காம் அடுக்கிலே சேர்ந்து
மணியிழைத்த கட்டிலின்மேல் வீற்றிருந்தார் உள்ளம்
தணிக்கவொன்னா காதலுடன் தான்.
நிலாமுற்றம் ஏழில் இருந்ததால் சென்று
குலவினர் கொஞ்சிக் களித்து.
மாசாத்து வானின் மனைவி விருந்தோம்பல்
பாசத்தைக் காணவேண்டும் என்று
தனிக்குடும்பம் வைத்தாள் மகிழ்ந்து!
இணையரின் இல்லறத்தை வாழ்த்து.
மாதவி
ஆடலும் பாடலும் பேரழகும் கொண்டவள்
ஈடற்ற மாதவி தான்.
பன்னிரண்டாம் ஆண்டில் அரங்கேற்றம்! சோழனுக்குத்
தன்னாற்றல் காட்ட விழைந்து
அரங்கிலே ஆடினாள்! யாழும் குழலும்
சுரந்தன இன்னிசை யங்கு.
சோழமன்னன் தந்தான் தலைக்கோல்
பட்டத்தை! தாழநின்றாள் நாணத்தில் தான்.
கிளிச்சிறை பொன்மதிப்பு கொண்டமாலை இஃது!
விலைகொடுத்து வாங்குவோ ரே
கொடிபோன்ற மாதவிக்கு நாயகனாய் வாழ்வில்
மகிழ்வித்து வாழலாம் என்று
மாதவியின் தாயான சித்ராபதி
மாலையைக்
கூனியிடம் தந்தாள் உவந்து.
நகரிலே கூனியை நிற்கவைத்தாள்!
விற்கும் அடையாள மாகத்தான் அங்கு.
கோவலன் வாங்கினான்! கூனியுடன் மாதவியின்
வாழ்விடம் சென்றான் விழைந்து.
மாதவியின் பேரழகில் தான்மயங்கி அம்மயக்க
போதையிலே மெய்மறந்தான் வீழ்ந்து.
தன்வீட்டை, தன்மனைவி கண்ணகியைத்
தான்மறந்தான்!
கண்டதே காட்சியென்றான் காண்.
(தொடரும்)



2 Comments
ReplyDeleteவள்ளுவர் குரல் குடும்பத்தின்அரசவைக் கவிஞருக்கு வாழ்த்துகள் .
உங்கள் வெண்பாவில் சிலம்பு ஒலிக்கட்டும் ஓங்கி.. நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.. தமிழினம் இலக்கியத்தின் உட்பொருளை,
கருப்பொருளை உள்வாங்கி, வாழ்வு செம்மையுற பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வாலறிவன் துணைநிற்பான்.
அருமையான துவக்கம்;பாமரர்களையும் ஈர்க்கும்
ReplyDeleteஎளிய சொற்கள்,
தொடரட்டும் நற்பணி.
ஆவலுடன் எதிர் நோக்கும்
அன்பன்
இரா.கதிரவன்