Ticker

6/recent/ticker-posts

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா.122

இதுவொரு கதையல்ல; 2019 இறுதிக்காலகட்டத்தில் உருவாகி, பூகோளத்தைக் கொலைக்களமாக்கி, சுமார் ஆறு மில்லியனுக்கும் அதிகமானோரைக் காவுகொண்ட நுண்ணுயிர்க்கிருமியின் தோற்றப்பாடு பற்றியதும், ஒதுங்கி வாழும் வனவாசிகளை நகரத்தோடிணைக்கும் பிரயத்தனத்திலும் எழுதப்பட்ட கற்பனைக்காவியம்!

தான் மணமுடித்ததும் தனக்குக் கிடைக்கவிருக்கும் குழந்தை ஆணாக இருந்தால் அதற்கு “செக்கோவ்” என்று பெயரிடுமாறு தந்தை அவனிடம் வேண்டிக் கொண்டதை எப்போதும் அவன் மறந்துவிடவில்லை.

“செக்கோவ்” - செரோக்கிய மக்களால் போற்றப்பட்டு வந்த ஓர் அறிவாளி! செரோக்கிய மொழிக்கு எழுத்துரு கண்டுபிடித்துத் தந்தவர்!

அவனது தந்தை வெளிப்படுத்திய வரலாற்றுப் பதிவுகளை அவன் ரெங்க்மாவிடம் அப்போதே ஒப்புவித்திருந்தான்! தந்தையின் வேண்டுகோளை  அவளும் ஆகர்சித்து, தனக்கு ஆண் குழந்தையே பிறக்க வேண்டுமென்று பிரார்த்தித்தவளாக இருந்தாள்!

இப்பொழுது மருத்தவிச்சி இலை கிழித்துத் தனக்குக்  கிடைக்கவிருப்பது  ஆண் குழந்தை என்று குறிப்பிட்டதும் அவளது  மகிழ்ச்சி பன்மடங்கானது.

எப்போதும் மூத்தவர்களின் எண்ணங்களுக்கு மறுப்புக்கூறாத நட்குனத்தைக் கொண்ட ரெங்க்மாவை அன்றொருநாள் மரமேடையில் வைத்து அவன் வாரியணைத்துக் கொண்டபோது வைத்துத் தொடங்கியது.

அவர்களின் வாழ்க்கைச் சக்கரம், இன்று மருத்தவிச்சியின் வாய்மொழியின் மூலம் ஒரு நிலைக்கு வந்துள்ளது!

உவகை மிகக் கொண்ட செரோக்கி, அன்றையதினம் அந்திசாயும் வேளையில் புரோகோனிஷ் வாழ்வனவாசிகளை  ஒன்றுதிரட்டி  கோலாகலமானதோர் விருந்துபசாரத்தைத்  தயார்படுத்தலானான்.

ஆங்காங்கே பக்கத்து ஜாகைகளிருந்து  கொண்டுவரப்பட்ட மரக்குற்றிகளின்மேல் விதவிதமான உணவுப்பதார்த்தங்கள் அடுக்கிவைக்கப்பட்டன.

ரெங்க்மாவின் தந்தையார் வேட்டையாடிக் கொண்டுவந்து வைத்திருந்த மான், மரை மாமிசங்கள் நடப்பட்டிருந்த மரத்தடிகளில் தொங்கவிடப்பட்டன.

கித்துள் மரமேறிச்   சேர்த்துவந்து மரக்கொள்கலங்களில் சேகரித்து வைத்திருந்த  “தெல்லிஜை”  ரங்குவின் ஜாகையிளிருந்து கொண்டுவரப்பட்டு, முற்றத்தின் மூலைகளில் வைக்கப்பட்டு, அவற்றை எடுத்துப்பருகுவதற்காக சிரட்டைகளும்  அழகாக அடுக்கப்பட்டன.

தமது பெற்றோர்களும், நண்பர்களும் ஓடியாடி விருந்து மேடையை அலங்கரிப்பதில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததையும், வனவாசிகள் தங்கள் தலைகளில் பலவர்ண மலர்களை அணிந்தவண்ணமாக சாரிசாரியாக செரோக்கியியின் முற்றத்தில்  அமைந்திருந்த மேடை  நோக்கி நடந்து வந்துகொண்டிருந்ததையும் தனது மனைவாசலில் ஒய்யாரமாக நின்ற வண்ணம்  ரெங்க்மா இரசித்துக்கொண்டிருந்தாள்!
(தொடரும்)



Post a Comment

0 Comments