Ticker

6/recent/ticker-posts

Ad Code



புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா- 123

இதுவொரு கதையல்ல; 2019 இறுதிக்காலகட்டத்தில் உருவாகி, பூகோளத்தைக் கொலைக்களமாக்கி,  சுமார் ஆறு மில்லியனுக்கும்  அதிகமானோரைக் காவுகொண்ட நுண்ணுயிர்க்கிருமியின் தோற்றப்பாடு பற்றியதும், ஒதுங்கி வாழும் வனவாசிகளை நகரத்தோடிணைக்கும் பிரயத்தனத்திலும்  எழுதப்பட்ட கற்பனைக்காவியம்!



நீண்டநேர ‘பிகு’வுக்குப் பின்னர் ரெங்க்மாவுக்கு  ஆண் குழந்தை பிறக்கப்போகும் செய்தியை   மருத்தவிச்சி இலை கிழித்துக்  குறிப்பிட்ட விடயத்தை  சிங்கினி ரங்குவிடம் கூறியதும் அவன் மகிழ்ச்சியடைந்தான்.

எது எப்படியிருந்தாலும் கானகத்தில் வாழும் வனவாசிகளிடத்தில் இரத்த உறவுகளின் பிணைப்பும் பாசமும் மங்கிப்போய்விடுவதில்லை. அந்த வகையில் தன் தாய்வழி இரத்த உறவான ரெங்க்மா பற்றிய நற்செய்தி கேட்டதும் மகிழ்ச்சிப்பரவசம் அடைந்தான்  ரங்கு. 

தன் காதலியை அணைப்பிலிருந்தும் விடுபடுத்திக்கொண்ட அவன், தனது இடதுபக்க இடையினில் தொங்கிக்கொண்டிருந்த  ‘தெல்லிஜெய்’ முட்டியை இறக்கிப் பக்குவமாகப் பாதுகாப்பான இடமொன்றில் வைத்துவிட்டு, அவளது   மெல்லிடையினில்  கரம் சொருவியவனாக, மாலை மயங்கும் வேளையில் தொடங்கவிருக்கும் மகிழ்ச்சிக்களியாட்ட நிகழ்வில் கலந்து கொள்ளும்  ஆர்வ மிகைப்பில் ரெங்க்மாவின் மனை நோக்கி நடக்கலானான்.

கித்துள் மரங்கள் விரவிக்கிடந்த ‘அலவத்தை’ யிலிருந்து நடக்கத் தொடங்கிய அவர்கள், நீண்ட நேரத்திற்குப் பின்னர் ‘பெரியகல்’லைக் கடந்து வந்து, ரெங்க்மாவின் தாய்வீட்டு முன்றலில் இளைப்பாறலாயினர் .

மனித நடமாட்டமின்றிக் காணப்பட்ட அப்பகுதியெங்கிலும். ஆங்காங்கே வளர்ப்பு மிருகங்கள், பறவைகள்  தம் பாட்டில் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருந்தன.

தன்  குஞ்சுகள் சகிதம் தம்  காலடியில் வந்து  கொக்கரித்துக் கொண்டிருந்த கோழியொன்றினைக் கோதிவிட்டான் ரங்கு!

பின்னர் இருப்பிலிருந்து எழுந்து நின்ற அவர்கள், பாதையைக் குறுக்கறுத் வளர்ந்திருந்த மரவேர்களைக் கடந்தவர்களாக நடந்து வந்தார்கள்.  புத்தம்புதிய கானகத்துக் காதல் ஜோடி வருவதைக்  கண்டதும், செரோக்கியின் மனை முன்றலில் கூடியிருந்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்த புரோகோனிஷ் கிராமத்தவர்கள்  தமது பானியில் கூக்குரலிட்டு அவர்களை வரவேற்கலாயினர்!
(தொடரும்)


Post a Comment

0 Comments