
அறிவின் பயன்
மனிதனைப் படைத்த இறைவன் அவன் நலமுடனும், வளமுடனும், ஆற்றலுடனும், வாழ அறிவினைக் கொடுத்தான். அறிவினைக் கொண்டு எதனையும் பார். அறிவின்துணை கொள்.அறிவின் வழி உயர்க,அறிவு மனிதனுக்கு மிகவும் உயரிய அரண், அறிவு இருப்பவர் எல்லாம் உடையவர்,வரப்போகும் நன்மை தீமைகளை உணரக் கூடிய வல்லமை மிகுந்தவர் என்பதை, மனிதன் வாழும் முறையுடன் வாழ்வானானால் அவன் இறைநிலைக்கு உயர முடியும் என்றுரைத்த திருவள்ளுவப் பேராசான் அழகுமிளிரக் கூறுகின்றார்.
அதாவது சர்வ வல்லமை மிக்க அறிவின் உண்மைப் பயன் என்னவென்பதை ஓர் ஆய்வுச்சிந்தனை மூலம் நமக்குப்
படம் பிடித்துக் காட்டுகின்றார். இதோஅக்குறள்மணி,
அறிவினான்ஆகுவது உண்டோபிறிதின்நோய் தந்நோய் போல் போற்றாக்கடை? (315குறள்)
நோய் என்பது துன்பம் என்று பொருள். இங்கு பிறர் துன்பம் என்று உயர்திணையில் கூறாமல், பிறிதின் நோய் என்று பிறஉயிர்களின் துன்பம் என்று கூறியதிலிருந்துஅஃறிணை உயிர்களின் துன்பத்தையும்கூட என்று பெருமைப்படுத்திய சொல்லாட்சி நம் சிந்தனைக்குரியது.
இதனை வாசிக்கும் போது நம் சிந்தனையில் இலக்கிய, வரலாற்று மற்றும் வாழ்ந்த சான்றோர்களின் வாழ்வியல்
சம்பவங்கள் போன்ற காட்சிகள் நம் கண்முன் நிழலாடுகின்றன.
இராமாயணத்தில் வனவாசம் சென்ற இராமபிரான் காலைக் கடன்களை முடிக்க, பல் துலக்க அங்கிருந்த ஒரு வேப்ப மரக்குச்சியை ஒடித்ததாகவும் அவ்வாறு ஓடிக்கும்போது அம்மரக்கிளையைத் தடவி, மெல்ல வருடி நான் இக்குச்சியினை ஒடிப்பதால் உனக்கு ஏற்படும் வலியினைப் பொறுத்தருள்வாயாக. இதனை நான் ஒடித்துக் கொள்ள எனக்கு அனுமதி அளிப்பாயாக என்று மரத்திடம் பேசியதாகஒருகாட்சி,நம் இலக்கியத்தில் என்றும் வாழும் கடையெழுவள்ளல்கள். ஆம்... படர கொழுக் கொம்பின்றி வாடிய முல்லைக்
கொடிக்குத் தன் தேரை உவந்தளித்த பாரி வள்ளலின் செயலும்.மழையில் நனைந்து வாடும் ஒரு மயிலுக்குத் தன் போர்வை வழங்கிய வள்ளல் பேகன் செய்த செயலும் காட்சிகளாகத் தெரிகின்றன.
வழி தவறிய ஆட்டிற்கு அடைக்கலம் தந்து காத்தருளிய அந்த இயேசு மகானின் செயல் படக்காட்சியாக நம் அகத்திரையில்விரிகிறது.
தொழுகைக்குச் செல்லும் வழியில் குளிரில் நடுங்கிய ஒரு பூனைக் குட்டிக்குத் தன் மேலங்கியைப் போர்த்துக்
காத்தருளிய நபிபெருமானாரின் செயல்நம் எண்ணத் திரையில் தெரிகிறது.
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று அஃறிணை உயிரின் வாட்டத்தினைக் கூட காணும்
நாட்டமில்லாது அவற்றிற்காக மனம் வாடிய இராமலிங்க அடிகளாரின் செயல் நம் சிந்தனைத் திரையில் காட்சிகளாய் மலர்கின்றன.
மேற்கண்ட சான்றோர் பெருமக்களின் செயல்கள் அனைத்தும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட
வள்ளுவன் கூற்றுக்குச் சான்று பகர்வனவாக உள்ளன. உண்மைதானே! நமக்கு ஒரு துன்பம் வந்தால் நாம் ஏற்றுக்
கொள்வோமா ? அதற்கு உடனே மாற்று ஏற்பாடுகள் செய்து துன்பம் களைய விரும்புறோம். அல்லவா?
“வலி என்பது நமக்கு மட்டும் அல்லவே? வலியில் சிறிய வலி 'பெரிய வலி"ண்றெல்லாம் உண்டா? வலி என்பது வலி தான். அது நமக்கு மட்டும் அல்ல. பிறருக்கும் பிற உயிருக்கும் பொதுவானது.
அவ்வாறு நாம் கண்னுறும் பிற உயிர்களின் துன்பத்தையும் நமக்குற்றதைப் போல் விரைந்து சென்று காத்தருள்வதே உயர் பண்பாகும். நாம் பெற்ற அறிவின் உண்மைப் பயனும்அதுவே!
நாமும் நலமுடன் வாழ்வோம்!
பிறரையும் காப்போம்!
வாழ்வாங்க வாழ்ந்துவோம்.
(தொடரும்)

0 Comments