Ticker

6/recent/ticker-posts

கம்பராமாயணம் குறள் வெண்பா முயற்சி-26


அக்கினிதேவன் கூற்று
கற்புக் கரசியோ சீறினால் ராமனே!
இத்தரணி  தாங்கா துணர்.

இவள்சபித்தால் அந்தப் பிரம்மதேவன் வாழ்வு
துவண்டே அழிந்துவிடு மே!

என்றுகூறி ராமனிடன் சீதையை ஒப்படைத்தான்
உன்மொழி  ஏற்றேன் மதித்து.

இவளையும் ஏற்கிறேன் என்றான் இராமன்!
உலகத்தின்  சாட்சியே நீ.

தயரதன் வந்தான்
விண்ணுலகை விட்டே தயரதன் ராமனை
வந்தணைத்தான்  அன்பில் திளைத்து.

சீதைக்கு ஆறுதல்
பொன்னை நெருப்பிலிடல் தன்மையைக் காட்டவே!
இந்த நுழைவும்  அஃது.

உன்கணவன் மீது சினங்கொள்ள வேண்டாம்நீ!
உண்மை  இதுதான் உணர்.

தயரதன் கொடுத்த வரங்கள்
தயரதன் ராமனை நோக்கித்தான் என்ன
வரம்வேண்டும்  கேளென்றான் அங்கு.

ராமன் கேட்ட வரங்கள்
நீங்கள் ஒதுக்கிய கைகேயி தாயாக
மீண்டுமாக வேண்டும் எனக்கு.

பரதன் எனக்குமீண்டும் தம்பியாக வேண்டும்!
வரங்களை வேண்டிநின்றான் அங்கு.

வரங்களைத் தந்தான்! விமானத்தில் ஏறி
கிளம்பினான்  விண்ணகத்திற் குள்.

இராமன் வீடணணைப் பார்த்து நமக்கு
விமானந்தான்  உள்ளதா? கேட்டான்!
 
பிரம்மா அளித்த விரைவாகச் செல்லும்
விமானம்  இருக்கிறதே இங்கு.

கொண்டுவரச் செய்தான் உடனேதான்! மூவரும்
சென்றார்  விடைபெற்றுத் தான்.

அனைவரின் வேண்டுகோளும் பயணமும்
முடிசூடும் பொன்விழாவைக் காண்பதற்கோ ஆசை!
மகிழ்ந்து  வரலாமா நாம்?

கேட்டதும் ராமன் அவர்களையும் ஏற்றினான்!
காற்றில்  பறந்தது காண்.

போகும் வழியிலே எல்லா இடங்களையும்
காட்டினான்  சீதைக்குத் தான்.

பரத்துவாசன் காத்திருந்த காட்சியைப் பார்த்தான்!
இறக்கப்  பணித்தான் உடன்.

விருந்துண்ண வேண்டுமென்றார் அந்த முனிதான்!
சரியென்றான் காகுத்தன் தான்.

இராமன் அனுமனை பரதனிடம் அனுப்பினான்
அனுமனிடன் மோதிரத்தைத் தந்தே பரதன்
மனம்மகிழச்  சொல்லென்றான் அங்கு.

அனுமன் பறந்தான் பரதனைக் காண!
வினைமுடிக்கச்  சென்றான் விரைந்து.

நந்திக்கிராமக் காட்சி
ராமன் திரும்பவரும் நாளின்றே! சோதிடர்கள்
கூறினார்  அங்கே கணித்து.

பொய்சொல்ல மாட்டான் சிலைராமன்! தாமதமேன்?
உள்ளம் பரதனைத் தூண்ட

பலவகையில் எண்ணிக் குழம்பினான்! தம்பி!
அழைத்தான்  சத்ருக்கன் பார்த்து.

சொன்னநாள் வந்தது ராமன் வரவில்லை!
இங்குநான் தீப்புகுவேன் இன்று..

அரசாட்சி ஏற்று நடத்துநீ! என்றான்
இருசெவியைப்  பொத்தினான் கேட்டு.

ராமனுடன் சென்றான் ஒருதம்பி! சொன்னநாள்
வாராது போனதால் இங்கு

தீப்புகுவான் மற்றொரு தம்பி! மகுடமேற்று
நாட்டரசன் ஆகவேண்டும் நான்!

அருமை! கதறினான்! சத்ருக்கன்! ஏற்றால்
அருவருப் பென்றான் மறுத்து.

பரதன் தீமூட்டச் சொன்னான்! நாட்டில்
பரவியது செய்தி விரைந்து.

சுற்றத்தார் மக்கள் அனைவரும் வந்தனர்!
அக்கறை கோசலைக்குப் பார்.

கோடி இராமனுக்கும் மிஞ்சிய பரதன்
கோசலை வந்து பரதனைத் தடுத்தாள்1
நேசமுடன்  சொன்னாள்தன் கூற்று.

வரங்களைத் தந்ததும் ராமனோ வாழ்வில்
சுரமிடைப்  போனதும் ஊழ்.

இன்னும் வராததும் அப்படியே! இன்றில்லை
வந்திடுவான்  நாளைதான் நம்பு.

நீயிறந்தால் நாளை அவனிறப்பான்! நாடிங்கே
காலியிடம்  போலாகும் காண்.

அறவழி ஆட்சிப் பயனென்ன என்று
மகனேநீ  காட்டிவிட்டாய் இங்கு.

அரசாட்சி வேண்டாம் மனதார சொன்னாய்!
தரப்பண்பில்  நின்றாய் உயர்ந்து.

அறவழியைப் பின்பற்றி ஆட்சி நடத்தி
கடமைகள்  ஆற்றினாய் நன்கு.

கோடிராமர்   வந்தாலும் பண்பில் அறவழியில்
ஈடில்லை   இங்கே உனக்கு.

கோசலை எவ்வளவோ சொன்னாள் தடுப்பதற்கு!
வேதனையில்  தாயுள்ளந் தான்.

பரதன் மறுமொழி
தாய்தந்தை சொல்லுக் குருகொடுக்க ராமனால்
ஏலும் எனக்கேலா தே.

மாசற்றோன் நானென்று காட்டவே மாள்கின்றேன்!
வேடமில்லை  தாயே உணர்.

அனுமன் வந்தான்
வந்தேன் அனுமன் என்றே இறங்கினான்!
தன்கையால்  தீயணைத்தான் நின்று.

கூறியநாள் தோன்றிட நாற்பது நாழிகைகள்
மீதி  இருக்கிறது கேள்.

கொண்டுவந்த மோதிரத்தை அங்கே பரதனிடம்
தந்தான்  அடக்கமாய் நின்று.

பரத்துவாசன் வேண்டுகோள் ஏற்றதால்  இங்கே
வரத்தா  மதமென்றான் பார்த்து.

மோதிரத்தை வாங்கி பரதன் வணங்கினான்
ஈடில்லா  இன்பத் துடன்.

அந்தணராய்  வந்தவனைப் பார்த்தேதான் யாரென்றான்?
தன்னுருவைக்  காட்டினான் நின்று.

அனுமன்தன் பேருருவைக் காட்டியதும் அங்கே
அனைவரும்  அஞ்சினர் பார்த்து.

அன்றுமுதல் இன்றுவரை கண்டு நடந்ததை
அங்கே உரைத்தான் மகிழ்ந்து.

கங்கைக் கரையில் அனுமன் பரதனுடன் 
தங்கினான் அவ்விரவில் தான்.

இராமனும் எல்லோரும் ஒன்றாக அங்கே
விமானத்தில் சென்றதைப் பார்.

வந்தடைந்தார் எல்லோரும் ஒன்றாய் அயோத்திக்கே
தங்கள் விமானத்தில் தான்.
அனுமன் உதவிகளைப் பாராட்டி ராமன்
மனதார வாழ்த்தினான் செப்பு.

உயிர்பெற்ற ஓவியம்போல் மக்கள் மகிழ்ந்தே
உயிர்பெற்றார் ராமனைக் கண்டு.

லக்குவனும் ராமனும் சீதையும் தாயரைச்
சுற்றிவந்து தாள்பணிந்தார் அங்கு.

முரசொலி கேட்டன!  வேத ஒலிகள்
முழங்கின நாட்டிலே தான்.

திருமுடி சூடல்
அயோத்தி அரணம்னையை ராமன் அடைந்தான்!
அயோத்தி மகிழ்ந்தது கண்டு.

அரியணை தன்னை அனுமனோ தாங்கி
சிலிர்த்திருந்தான் பக்தியில் தான்.

களிப்பில் உடைவாளை அங்கதன் ஏந்திப்
பொழிந்தான் கடமை உணர்வு.

பரதனோ வெண்குடை பற்றியே நின்றான்
பெருமித உணர்வுடன் தான்.

சத்துருக்கன் மற்றும் இலக்குவன் சேர்ந்தே
பற்றிக் கவரிவீசி னார்.

பெருமான் சடையப்ப வள்ளலின் முன்னோர்
பொருள்களைத் தந்தார் எடுத்து.

ராமனுக் கங்கே திருமுடியை மாமுனி
சூட்டினார் ஆசிகள் தந்து.

இளவரசுப் பட்டத்தைச் சூட்டினான் ராமன்
பரதனுக்கு உள்ளம் மகிழ்ந்து.

பொன்னும் பொருளும் கொடுத்து விடைகொடுத்தான்
அன்பாய் அனைவருக்கு மங்கு.

கைம்மாறு நானென்ன செய்வேன் அனுமனே1
உன்பக்திக் கிணையில்லை இங்கு.

அனுமனை ராமன் தழுவிக்கொள் என்றான்
மனதார தந்தான் உயர்வு.

பணிவுடன் நின்றான் அனுமன்தான்! ராமன்
மனைவிக்குத் தூதுரைத்தான் பார்த்து.

கலைமகள் முன்பளித்த முத்துமாலை தன்னைக்
கழற்றிக் கொடுத்தாள் விழைந்து.

வீடணன் மற்றவர்கள் ஏற விமானமோ
நாடகன்று சென்றது காண்.

இலங்கைக்குச் சென்றான் இராவணன் தம்பி
நலமுடன் நாடாளத் தான்.

(முற்றும்)


Email;vettai007@yahoo.com









Post a Comment

0 Comments