Ticker

6/recent/ticker-posts

ஏழு வயதில் கடத்தப்பட்ட பூஜா 9 ஆண்டுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்தது எப்படி?


9 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட சிறுமி, தற்போது மீண்டும் தன் குடும்பத்துடன் இணைந்துள்ளார். நம்பிக்கை இழந்து குடும்பம் தேடுதலை நிறுத்திய பிறகும் மீண்டு வந்து குடும்பத்துடன் சேர்ந்துள்ளார் இந்த சிறுமி. 9 ஆண்டுகளாக நடந்தது என்ன? எப்படி தப்பினார் இந்த சிறுமி?

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள அந்தேரி பகுதியைச் சேர்ந்தவர் பூஜா. கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி, பள்ளிக்குச் சென்ற ஏழு வயது சிறுமி பூஜா, காணாமல் போனார். அப்போது ஒன்றாம் வகுப்பு சிறுமியான இவர், 'ஐஸ்கிரீம்' வாங்கித் தந்து கடத்தப்பட்டுள்ளார் என்று பின்நாட்களில் தெரியவந்தது.

எங்கிருந்தார் பூஜா?
பூஜா, அவரை கடத்தியவர்களால் வேலைக்கு அமர்த்தப்பட்ட இடத்தில்தான், 35 வயதான பிரமிளா தேவேந்திராவும் வேலை செய்து வந்தார். ஒரு நாள், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தான் இளமையில் கடத்தப்பட்டதாக பிரமிளாவிடம் சொன்னார் பூஜா. அப்போதுதான் பூஜாவுக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்தார் பிரமிளா.

"இவர்கள் என் அம்மா-அப்பா இல்லை என்று முன்பே பூஜா சொல்வாள். இவர்கள்தான் என் பெற்றோர் என்று யூட்யூபில் ஒரு வீடியோவைக் காட்டினாள். எனக்கு தெரிந்த பெண் ஒருவரை அந்த இடத்துக்கு அனுப்பி, அவளது பெற்றோரின் செல்போன் நம்பர் வாங்க முயற்சி செய்தேன். ஒருவழியாக, ரஃபீக் என்பவருடைய எண்ணுக்கு லைன் கிடைத்தது" என்கிறார் பிரமிளா. ரஃபீக் என்பவர் பல வருடங்களாக, பூஜா குடும்பத்தின் பக்கத்து வீட்டுக்காரராக இருந்தவர். அவர்தான் இந்த இணைப்புக்கான அடுத்த கட்ட நகர்வை மேற்கொண்டார்.

அடுத்தநாள் பிரமிளாவும் பூஜாவும் வேலைக்கு வந்ததும், இன்று உன் அம்மாவுக்கு வீடியோ கால் செய்யப்போகிறேன் என்று பூஜாவிடம் தெரிவித்தார் பிரமிளா.

ஆகஸ்ட் 4, 2022. அன்று காலை 10 மணிக்கு ரஃபீக்குக்கு வீடியோ கால் செய்தார் பிரமிளா. அழைப்பு வந்ததும் பூஜாவின் இல்லத்துக்கு ஓடிச்சென்று பூஜாவின் தாயிடம் ஃபோனைத் தந்தார் ரபீக். ஆனால், பூஜாவின் தாயால் நம்பமுடியவில்லை. தனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை என்றும் யாரோ ஒரு பெண், தன் மகள் என்று சொல்கிறாள். இதை எண்ணி சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை என்றும் பதில் சொன்னார் தாய் பூனம் கௌட்.

பூஜாவுடன் வீடியோ காலில் பேசினார் தாய் கௌட். அந்த வீடியோவை தன் இன்னொரு மொபைலில் பதிவு செய்து கொண்டார் ரஃபீக். தாயும் மகளும் வெடித்து அழுது, கண்ணீர் மல்க பேசிக்கொண்டனர்.

இந்தச் செய்தி வீதியெங்கும் வேகமாகப் பரவியது. அக்கம் பக்கத்து உறவினர்கள் நண்பர்கள் என பலரும் சூழ்ந்து கொண்டு, தாய் பூனத்துக்கு ஆதரவாக நின்றனர். சிலர், வீடியோ காலில் பூஜாவைப்பார்த்துவிட்டு, இது பூஜாதான். அவள் அப்படியே இருக்கிறாள் என்று கூறினர்.

சோதனைகள் - நான் யார் தெரியுதா?
பின்னர் மகளிடம் கேள்விகள் கேட்கத் தொடங்கினார் பூனம். "என் பெயர் என்ன என்று சொல்" என கேட்டார். அதற்கு "பூனம்" என்று அழுதபடியே பதிலளித்தாள் பூஜா.

"உன் தந்தை பெயர் என்ன?" என்று கேட்டார். அதற்கும் பதிலளித்தாள். வீடியோ கால் முடிந்த பிறகு, அவள் இருக்கும் முகவரியை தெரிந்துகொண்டு, பூஜாவின் தாய், இரு சகோதரர்கள், அவரது மாமா, அத்தை, ரஃபீக் உள்ளிட்ட சிலர் என அனைவரும் பூஜாவின் இருப்பிடத்துக்கு சென்றனர்.

இருவரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட பின் மீண்டும் கதறி அழுதனர்.

நேரில் பார்த்தவேளை, பூஜா பிறந்தபோது அவளது உடலில் இருந்த அடையாளம் ஒன்றை சோதித்து உறுதி செய்தார் பூனம். "இந்த ஒரு அடையாளத்தை வேறு யாரும் அறியமாட்டார்கள். இப்போது என் எல்லா சந்தேகங்களும் தீர்ந்துவிட்டன" என்றார் பூனம்.

தொலைந்துபோன குழந்தை, சுமார் 3,285 நாட்களுக்குப் பின் இந்த தாய்க்கு திரும்ப கிடைத்தது. ஏழு வயதில் 2013ஆம் ஆண்டு காணாமல் போனவர், 9 ஆண்டுகளுக்குப் பிறகு, 16 வயதில் வீடு திரும்பியுள்ளார்.

இவரது தாயார், பூனம் கௌட், தனது மகளின் நினைவாக இரவு பகலாக அழுதுகொண்டே இருந்தார். ஆனால், திடீரென்று தன்மகள் திரும்பிவந்ததும் அந்த தாயின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இதுகுறித்து பிபிசியிடம் பேசியபோது, "என் மகள் கிடைப்பாள் என்று நம்பிக்கை இருந்தது. ஆனால், அவளது அப்பா இறந்த பிறகு நம்பிக்கை கொஞ்சம் குறைந்துவிட்டது. காரணம், அவளை தேட இனி யாரும் இல்லை. ஆனால், இப்போது நடந்திருப்பது கடவுளின் கருணை. ஒருவேளை என் மனைவி தனியா இருகிறாள், எனவே, என் மகளை அனுப்பி வை என்று அவர் மேலே போய் சண்டை போட்டிருப்பார்" என்கிறார் தாயார் பூனம்.

9 ஆண்டுகள் என்ன நடந்தது?
தனக்கு என்ன நடந்தது என்பதை பிபிசியிடம் விவரித்தார் பூஜா. "அன்று, எனக்கு ஒருவர் ஐஸ்கிரீம் கொடுத்தார். பின்னர் பேருந்தில் ஏற்றிவிட்டார். நான் அழுதுகொண்டே இருந்தேன். மூன்று நாட்களில், என்னை கோவாவுக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் ராய்ச்சூர் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் நான் சேர்க்கப்பட்டேன்.

ஆரம்பத்தில் நன்றாகவே இருந்தது. பின்னர், அவர்களுக்கு (பெற்றோர் என்று சொல்லப்பட்டவர்கள்) மகள் பிறந்ததும், நடத்தை மாறிவிட்டது. என்னை உருட்டுக் கட்டையால், காலால், சப்பாத்தி கட்டையால் அடிப்பார்கள். தலைமுடியை இழுத்து உருட்டுக் கட்டையால் அடிக்கும்போது முதுகில் இருந்து ரத்தம் வழியும்" என்று தெரிவித்தார்.

இதையடுத்து, பூஜாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், தற்போது ஹாரி மற்றும் சோனி டிசூஸா என்பவர்கள் மீது மும்பை நகர் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். தற்போது இருவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் பூஜாவை தாக்கிய சோனி டிசூஸாவை கைதுசெய்யுமாறு பூஜாவின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை என்பதால், கடத்தியவர்கள் பூஜாவை எடுத்துச்சென்றுள்ளனர் என்று நான் நினைக்கிறேன். பின்னர் அவர்களுக்கு குழந்தை பிறந்ததும் அவர்களின் நடத்தை மாறியதாக நினைக்கிறேன் என்கிறார் மூத்த காவல் ஆய்வாளர் மிலிந்த் குர்டே.

பூஜாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கடந்துபோன 9 ஆண்டுகள் திரும்பி வராது. ஆனால், உடலின் காயங்கள் விரைவாகவும் பூஜாவின் மனக்காயங்கள் மெல்ல மெல்லவும் இனி ஆறத்தொடங்கும். பிரமிளாவால் பூஜா மற்றும் அவரது தாயின் வாழ்க்கை முற்றிலும் மாறியுள்ளது. இப்போது பூஜா தனது புதிய வாழ்க்கையை மிகுந்த நம்பிக்கையுடன் தொடங்கியுள்ளார்.

SOURCE;.bbctamil












Post a Comment

0 Comments