Ticker

6/recent/ticker-posts

Ad Code



ஏற்றுமின்பக்குமிழி


இல்லை இல்லை என்கிறார் 
இவ்விகத்தினில்
இல்லார்க்குமிருப்பவர்க்கும்
இறைப்பவன் இறைவெனென் றறியாமல்

இருக்கும் இடம் யாவிலும் 
இருப்பவன் ஒருவனே
இல்லை என்ற புள்ளியில் 
உருவானவிறை அவன்தானே

உன் பெயர் உனக்குத்தான் 
என் பெயர் எனக்கேதான்
எல்லாமுமாக இருப்பவன் 
அவனுக்கெதற்கு ஓர் பெயர்

கண்ணை உனக்குத் தந்தவன்
காதைக் கூர்மை ஆக்கினன்
எந்தை இந்த உலகினில்
ஏதுனக்குத் தரவில்லையே

உள்ளம் எல்லாம் அறிபவன்
உறங்கி அதிலே வாழ்பவன் 
கள்ளம் இல்லாப் பதியவன்
காணும் இன்பம் வேண்டுமே

சொல்லை உனக்குத் தந்தனன் 
சோதியாயுனக்கு வாய்ந்தனன்
சிந்தை அதிலே சேர்ந்தனன்
சிறப்பாய் வேதம் புனைந்தனன்

எல்லை இல்லாக் கோடு நீ
ஏற்றுமின்பக் குமிழி நீ
அகல வானில் துருவம் நீ
ஆதியை விஞ்சிய அருவம் நீ

அன்பிலார்க்கும் அன்பாய் நீ
ஆலயத்தின் கூட்டம் நீ
பண்பிலாரும் பாதம் தொடப்
பரம்பொருளாய் ஆனாய் நீ

ஆதியும் அந்தமும் நீ
நீதியின் எந்தையும் நீ
ஆதி அந்தம் இல்லாத
சோதியாகும் விந்தை நீ

நீதியின் நாயன் நீ
நேசமிகு தூயன் நீ
ஏதுமிலா ஏந்துபவர்க்கு
எண்ணிலாதீயும் ஈசன் நீ

எட்டுத்திக்கும் இசையாய் நீ
பட்டுத் தெறிக்கும் ஒளியும் நீ
கற்றறிந்த குருவும் நீ
காற்றில் அசையும் சருகும் நீ

ஏற்றி வைத்த தீபமாய்
ஏற்றம் தந்த ஏகனே
மாற்றமில்லாக் கருணையை
மானிடர்க்குவந்திடும் மாயனே

அல்லல் படும் அவனியில்
இல்லாதிருக்கும் இறையோனே
இல்லம் எல்லாம் இயைந்து வாழ
இல்லை சொல்லா நாயனே

நாட்டம் எல்லாம் நாடிடும்
காட்டும் திசையில் வணங்கிட
தேடி வந்தேன் தேவனே
தேட்டம் நீயே நாயனே

நீண்டிருக்கும் கடலும் நீ
நேரமதிலே வியூகம் நீ
போர்த்தும் கரிய இரவும் நீ
புலரல் வேளை மலரும் நீ


Post a Comment

1 Comments

  1. அருமையாக இயற்றிய அழகான வரிகள்

    ReplyDelete