Ticker

6/recent/ticker-posts

Ad Code

சிலம்புக்குறள்-2


மாதவியுடன் கோவலன்
நிலாமுற்றந் தன்னிலே இன்பக் களிப்பில்
உலாவந்தார் மெய்மறந்து தான்.

ஊடலும் கூடலும் மாறிமாறி ஆட்சிசெய்ய
தேடலில் போட்டியிட்டார் அங்கு.

கொடைமட மன்னர்போல் மாதவி இன்பக்
கொடையளித்தாள் கோவலனுக் கே.

இமயமலைச் சாரல் ஒளிவட்டக் கல்லில்
பொதியமலைச் சந்தனத்தை வைத்து

அரைத்தனர்! நங்கையர் பூசினர்! முத்துக்
கலைமாலை சூடினர் அங்கு.

உயிரனைய அத்தானின் மார்பைத் தழுவித்
துயில்கொண்டார் தம்மை மறந்து.

கண்ணகியின் பிரிவுத்துயர்
எந்த அழகுப் பொருளுமின்றி கண்ணகியோ
நொந்தாள் துயரில் பிரிந்து.

வானத்தில் திங்களோ ஊர்ந்துசென்று மாதவிக்கு
தேனின்பம் தந்தது சென்று.

கண்ணகிக்கோ துன்பத்தைத் தூவித்தான் சென்றது!
தன்னுள்ளே நொந்தாள் தவித்து.

அங்காடி வீதிகள்
விற்பவர்கள் ஓசையும் வாங்குவோர் ஓசையும்
முற்றும் கலந்துவரும் அங்கு.

நாளங்காடி தன்னில் பொருளைப் பலியிட்டு
ஆரவாரம் செய்வார்க ளாம்.

நரபலி ஊட்டிய செய்தியும் உண்டு!
களவீரர் மேடை அஃது.

திருமாவளவன் வெற்றி
வடதிக்கு நோக்கிப் படையெடுத்துச் சென்றான்!
தடையாய் இமயமலை நிற்க

அம்மலையின் மீது பொறித்தான் புலிச்சின்னம்!
மன்னன் திரும்பினான் நாடு.

ஐந்து மன்றங்கள்
களவுகளைத் தண்டிக்கும் வெள்ளிடை மன்றம்!
களவைத் தடுக்கும் இலக்கு.

நலமளித்துக் காக்கும் இலஞ்சிமன்றம் உண்டு!
வலம்செய்வார் மக்கள் தொழுது.

வஞ்சனையால் வந்த பிணியை நெடுங்கல்
மன்றந்தான் நீக்கியது காண்.

போலித் துறவிகள், கெட்ட மதிகொண்டோர்
போன்றோரைத் தண்டிப்ப தற்கு

பூத சதுக்கமன்றம் உள்ளதுபார் அப்புகாரில்!
தேடிப் பிடித்துண்ணும் செப்பு.

ஆட்சி நடுநிலை மாறினால் கண்ணீரைக்
கொட்டுகின்ற பாவைமன்றம் உண்டு.

ஐந்து வகைமன்றம் நீதிகளை நாள்தோறும்
நன்கு வழங்கியதாம் சொல்.
(தொடரும்)



Post a Comment

0 Comments