Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-57


குறள் 675 
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.

மருமவன... எதாவது ஒரு வேலையச் செய்யணும்னா, அதுல ஏனோ தானோன்னு எறங்கிறக் கூடாது. 

அதுக்கு தேவையான பணம் கைல இருக்கணும். செய்யதுக்கு வேண்டிய தட்டுமுட்டு சாமான் வேணும். 
எப்போ செய்யணும்னு சரியான நேரத்தை தெரிஞ்சுக்கிடணும். என்ன வேலையை எப்படிச் செய்யணும்ங்கிறதை ஆலோசிக்கணும். எந்த எடத்துல வச்சு அந்த வேலையைச் செய்யணும் ங்குறதையும் சரியா முடிவு பண்ணனும். இந்த ஐந்தையும் எந்த மயக்கமும் தயக்கமும் இல்லாம செஞ்சு முடிக்கணும் மருமவன. 

குறள் 676
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.

மாப்ள... ஒரு குறிப்பிட்ட வேலைக்கு பொறுப்பு ஏத்துக்கிட்டா, அதை எப்படி முடிக்கணும், அதைச் செய்யும்போது, என்னென்ன இடைஞ்சல்கள்லாம் வரலாம் ங்கிறதை யோசிச்சுப் பாக்கணும். 

செஞ்சு முடிச்சா என்ன என்ன பயன்கள் கிடைக்குங்கிறதையும் மொதல்லயே நல்ல ஆராய்ஞ்சு தெளிவா தெரிஞ்சிக்கிடணும் மாப்ள. 

குறள் 686
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.

மாப்ள... படிக்கவேண்டியதை நல்ல படிச்சிருக்கணும். எதிராளியோட கடும் பார்வைக்கு பயப்படாம இருக்கணும். சொல்லவேண்டியது எதிராளிக்கு உரைக்கும் படி சொல்லணும். 

காலத்துக்கு ஏத்தமாதிரி தெரிஞ்சு கொள்ள வேண்டியதை தெரிஞ்சு வைக்கணும். இப்படில்லாம் இருக்கவன் தான் மாப்ள சிறந்த தூதன். 

குறள் 694
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து.

தம்பி.. படிச்ச மேதாவிகளை நம்ம பக்கத்துல வச்சுக்கிட்டு, மத்தவங்களோட காது கிட்ட போய் மெதுவா எதுவும் பேசவுங் கூடாது. அவங்க கூட சேந்துக்கிட்டு, சிரிச்சு வெளையாடவுங் கூடாது தம்பி. 

குறள் 696
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.

மாப்ள.. நாட்டை ஆள்பவருகிட்ட எதையுஞ் சொல்லணும்னா, மொதல்ல அவரோட மன நிலை எப்படி இருக்குங்கிறதை நல்லா தெரிஞ்சி வச்சுக்கிடணும். சரியான நேரம் வார வரைக்கும் காத்திருக்கணும். அவரை கடுப்பேத்தக் கூடிய எதையும் சொல்லிறக் கூடாது. அவருக்கு பிடிக்கக் கூடியதை, பிடிக்க மாதிரி பக்குவமா சொல்லணும் மாப்ள. 
(தொடரும்)

Post a Comment

0 Comments